எனது அம்பை விஜயம் 

பதிவின் வடிவம்

(ஆர். சேஷாத்ரிநாதன்)

எங்கள் குலதெய்வமான மேலப்பாவூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் தரிசனம் செய்ய வழக்கம் போல அம்பாசமுத்திரம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் வசிக்கும் எனது தங்கையின் வீட்டில் தங்கி பிராத்தனைகளை நிறைவேற்றுவதுடன் அருகில் உள்ள முக்கியமான கோவில்களுக்குச் செல்வது வழக்கம். இம்முறையும் அதற்காகச் சென்றவாரம் கிளம்பினேன். நெல்லை சென்று அம்பை செல்லவேண்டும். நெல்லை எக்ஸ்பிரஸ்ல் இனிய பயணம். அங்கிருந்து உடனடியாக அம்பைக்கு இரயில் வசதி உண்டு.  இரயில் நிலையங்கள் சுத்தமாக இருப்பதுடன் பயணம் செய்த ரயில்களும் சுத்தமாக இருந்தன. குறிப்பாக கழிவறைகள். அம்பையிலிருந்து ஆட்டோவில் சென்றோம் . முன்பெல்லாம் அப்படி பயணம் செய்யும்போது ஓரிரு நாட்கள் தங்கை இல்லத்தில் தங்கிவிட்டு திரும்பி விடுவோம். இம்முறை கிட்டத்தட்ட ஆறு நாட்கள் தங்கியதால் நிறைய கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடிந்தது..அதிலும் இரண்டு கோவில்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஒன்று வாலீஸ்வரம் மற்றொன்று ஆதி பாவநாசம் கோவில்கள். இந்தக் கோவில்களை யாரும் பார்த்து இருக்க மாட்டீர்கள். எல்லாவற்றையும் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

விக்கிரமசிங்கபுரம் என்பது பெரிய கிராமம். நான் மூன்று வருடங்களுக்கு முன் பார்த்ததைவிட இப்பொழுது அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. காரணம் கொரானா பரவல் தான். ஆச்சர்யமா உள்ளதா? அதுதான் உண்மை. எப்படி.? இந்தக் கிராமத்தை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும்  சென்னை, ஹைதிராபாத், மும்பை கொல்கத்தா முதலிய நகரங்களில் மென்பொருள் மற்றும் அதைச் சார்ந்த துறையில் பணிபுரிந்து வந்தனர். கொரானாவால் பொது முடக்கம் அறிவித்தவுடன் அவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தாயகம் திரும்பினர். அந்த நகரங்களில் சுகமான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இந்தக் கிராமத்திற்குத் திரும்பினால் அந்த வாழ்க்கை கிடைக்குமா?  நகரங்களில் செலவழித்த பணத்தை இந்த கிராமத்தில் செலவழிக்க முன்வந்த போது  அவர்களின் தேவைகளை எதிர்கொள்ள கிராமமும் தயாராயிற்று.

மேலும் ஸ்ரீதர் வேம்பு அவர்களின் சோஹோ கார்பரேஷன் என்ற புதிய மென்பொருள் நிறுவனம் அருகில் தென்காசியில் உதித்தது. அதில் பணிபுரிவர்கள் பலர் இந்தக் கிராமத்திலிருந்து சென்று வருபவர்கள். இதனால்  பணப் புழக்கம் அதிகரித்தது. ஆதலால் எல்லோரின் தேவைகளை எதிர்கொள்ள  புதிய உணவு விடுதிகள், புது புது சூப்பர் மார்க்கட்டுகள், புது ஜவுளி கடைகள், புது டூ வீலர் கடைகள், புது நகை கடைகள், புதிய தலைமுறை வங்கிகள்,  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தோன்றின. வசதிகள் வந்தால் வியாதிகளும் பெருகுமே. அதன் அடையாளம் புதிய தனியார் மருத்துவமனைகள், அதி நவீன பல் மருத்துவமனைகள், அப்பலோ உட்பட எண்ணற்ற மருந்துக் கடைகள்  தோன்றி வைப்ரண்ட் விக்கிரமசிங்கபுரமாகத் திகழ்கிறது. இங்கு ஸ்விக்கி, ஜோமொடோ போல அங்கும் சேவை செய்ய இரண்டு நிறுவனங்கள் உள்ளன. விவசாயம் மிகச் சிறப்பாக உள்ளது. அதற்கு பார்க்கும் இடங்களெல்லாம் பறவைகள் நிறைந்த பசுமை வயல்களே சாட்சி. ஆக கொரோனா பரவலால்  இங்கு நன்மையே விளைந்துள்ளது. அதாவது வளர்ச்சி என்பது பரவலாக இருக்கவேண்டும் என்ற உண்மையை இந்த கிராமத்தின் வளர்ச்சி உணர்த்துகிறது. இதுபோலத்தானே நாட்டின் பல இடங்களிலும் வளர்ச்சி சாத்தியமாகி  இருக்கும்.

31/12/2022

பின்னூட்டமொன்றை இடுக