Monthly Archives: திசெம்பர் 2020

சீதா கல்யாணம்

பதிவின் வடிவம்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்

சீதா கல்யாணம்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

முந்தைய கட்டுரையில் அகலிகை சாப விமோசனம் படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தக் கட்டுரை சீதா கல்யாணம் பற்றியது. எந்த கல்யாணத்திலும் ஆரத்தியில் பாடுவது ‘சீதா கல்யாண வைபோஹமே” ஆக எல்லா கல்யாணமுமே சீதா கல்யாணம்  தான். . இந்த கொரானா காலத்தில் மீண்டும் ஒரு சீதா கல்யாணம் நிகழ்த்தினால் இந்த நோயின் பிடியிலிருந்து விடுபட்டு எல்லோரும்  நலமாக இருப்பர் என்ற நம்பிக்கையில் இதை எழுதத் தொடங்கி உள்ளேன்.  தொடர் துவங்கும் முன் சொன்னது போல மூன்று ராமாயணங்களில் உள்ள அம்சங்களை உள்ளடக்கி இந்த தொடரை எழுத விழைகிறேன். இதில் சான்றோர்களான வேளுக்குடி ஸ்வாமிகள், புலவர் கீரன், முனைவர் ரா பி சேதுப்பிள்ளை, கம்பவாரிதி ஜெயராஜ், கவிஞர் ஜவகர்லால் அவர்களது கருத்துக்களையும் பாடல்களையும் இதில் இணைத்துள்ளேன். அவர்கள் எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. மற்றும் வலைத்தளங்களில் நான் படித்தவை, காணொளிகளில் நான் கண்டவை களிலிருந்து முக்கிய அம்சங்களை  இதில் இணைத்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் உள்ளே செல்வோம்.

விஸ்வாமித்திரர் தங்கியிருந்த வனத்தில் இருந்த முனிவர்கள் மிதிலை அரசன் ஜனகன்   வேள்வி புரிவதாகவும், அதற்குத் தங்களுக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் அதற்காக மிதிலை செல்வதாகவும் தெரிவித்தனர். மேலும் ஜனகனிடம் ஒரு அரிய சிவ தனுசு இருப்பதாகவும், அவர்கள்  அதையும் பார்வையிட செல்வதாகவும் தெரிவித்தனர். விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுடன் மிதிலை நோக்கிப் புறப்பட்டார்.

                                  மிதிலையின் வரலாறு

மிதிலையின் முதல் அரசன் நிமி என்பவன். அவன் மனுவின் பேரன்.  வடமொழியில் நிமி என்றால் இமை என்று பொருள். அவன் வைஜயந் என்ற நகரை நிர்மாணித்தான். அதனையொட்டி ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். அதை நடத்தித் தருமாறு வசிஷ்டரைக் கேட்டுகொண்டான். ஆனால் வசிஷ்டர் தான் இந்திரனுக்கு ஒரு யாகம் செய்து தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதை  முடித்துவிட்டு வருவதாகவும் சொன்னார். ஆனால் பதில் ஏதும் பேசாமல் நிமி திரும்பிவிட்டான். ஆனால், வசிஷ்டரோ தான் சொன்னதை அந்த மன்னன்  ஏற்றுக்கொண்டான் என்று நினைத்து விட்டார்

நிமியோ, மற்ற முனிவர்களை வைத்து யாகம் நடத்த ஆரம்பித்துவிட்டான். வெகு காலம் கழித்து வசிஷ்டர் இந்திரனின் யாகத்தை முடித்துவிட்டு மிதிலைக்கு வந்தார். அங்கு யாகம் நடந்து கொண்டிருப்பதைக்கண்டு கோபம் கொண்டு நிமியை ‘உன் உடல் உயிரற்றதாக ஆகட்டும்” என்று சபித்தார். கோபம் கொண்ட மன்னனோ, வசிஷ்டரையும் அவ்வாறே சபித்தான். வசிஷ்டர் பிரம்மனிடம் சென்று வேறு உடல் பெற்றுக்கொண்டார்.

யாகத்தை நடத்திக் கொண்டிருந்த முனிவர்கள், உயிரற்ற மன்னன் உடலை பத்திரமாக எண்ணையில் வைத்திருந்தனர். யாகம் முடிவடையும் நேரத்தில், அவிர் பாகம் வாங்க வந்த தேவர்கள், மன்னனுக்கு மீண்டும் வேறு உடல் கொடுப்பதாக சொன்னதும், மன்னன் அதை மறுத்துத் தன்னை மக்களின் இமைக்குள் வைத்துவிடும்படி தேவர்களிடம் வேண்டிக்கொள்ள அவர்களும் அவ்வாறே செய்தனர். விஞ்ஞானப்படி ஒரு நிமிடம் அறுபது நொடிகள் என்றாலும் நாம் ஒரு தடவை கண்ணிமைக்கும் நேரம்தான் ஒரு நிமிடம் என்று சொல்கின்றனர். தேகம் இல்லாதவன் என்பதையே குறிக்கும் விதமாக அந்த நாட்டிற்கு விதேகம் என்ற பெயர் வந்தது.

மன்னனில்லாது ஒரு நாடு இருக்ககூடாது என்பதற்காக முனிவர்கள் எண்ணையில் கிடந்த மன்னனின் உடலைக் கடைந்து அதிலிருந்து ஒரு மன்னனை உருவாக்கினர். அந்த மந்தன் அதாவது கடைதல் என்பதிலிருந்துதான் அந்த நாட்டிற்கு மிதிலை என்ற பெயர் வந்தது என்றும், அந்த அரச பரம்பரையில் ஆறாவது வழித்தோன்றல் தான் ஜனகன் என்றும் சொல்லப்படுகிறது. ஜனகன் என்பதே ஒரு அடைமொழி என்றும் அந்த பரம்பரை மன்னர்களுக்கெல்லாம் ஜனகன் என்ற பெயரும் சேர்ந்தே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சீதையின் வரலாறு

ராவணனை அழிக்க மகாவிஷ்ணுவும் லக்ஷ்மியும்  ராமராகவும் சீதையாகவும் அவதாரம் எடுத்துப் பூமியில் வந்து பிறந்ததாக ராமாயணத்தின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. ராமர் லக்ஷ்மணருடன் விஸ்வாமித்திரர், மிதிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஜனகர் அவர்கள் தங்கி இருக்கும் இடம் வந்து அவர்களை நலம் விசாரிக்கிறார். விஸ்வாமித்திரர் ராமர் லக்ஷ்மணரை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவுடன், ஜனகர் தனது முன்னோர்களைப்பற்றி சொல்லுகிறார். தான் குழந்தை வேண்டி ஒரு யாகம் செய்வதற்காக யாகசாலை நிலத்தைத் தங்கக் கலப்பையால் உழுதபோது (ஜனகர் அரசராக இருந்தாலும் அவர் துறவியைப்போன்று வாழ்ந்தார். தனது வேலையைத்  தானே செய்யவேண்டும் என்று நினைப்பவர்) நிலத்தில் கிடைத்தவள் தான் சீதை என்று தெரிவிக்கிறார். ஜனகரின் புதல்வி என்பதால் ஜானகி என்றும் மிதிலையை சேர்ந்தவள் என்பதால் மைதிலி என்றும் விதேக நாட்டு பெண் என்பதால் வைதேகி என்றும் அழைக்கபட்டாள்.

(இங்கு கவிஞர் கண்ணதாசன் எனது நினைவுக்கு வருகிறார். ஒருமுறை கண்ணதாசனிடம் எழுத்தாளர் சுஜாதா அவர்கள்   உங்களால் எப்படி புது புது வார்த்தைகளை/சொற்களை வேகமாக பாடல்களில் போட முடிகிறது என்று கேட்டதற்கு கண்ணதாசன் “தமிழில் ஆதார சந்தத்தைப் பிடிச்சிட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள்? சீதா – நேர் நேர்; ஜானகி – நேர்நிரை; ஜனகா –நிரைநேர்; வைதேகி – நேர் நேர் நேர்; இப்படி எந்த சந்தம் வேணுமோ அந்த சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன,  எல்லா வார்த்தையும் தெரியணும் …. அவ்வளவுதான் கம்ப ராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் புதுப்புது வார்த்தைகள் கிடைக்கும்!” என்றாராம்.)

ஆனால், சீதை அந்த நிலத்தில் வந்த விவரம் என்ன? சுந்தர காண்டத்தில். அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன்  ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது

கீத்ருஸம் து மயா பாபம்

புராஜன்மாந்தரே க்ருதம்

யேநேதம் ப்ராப்யதே துக்கம்

மயாகோரம் ஸுதாருணம்

என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு  சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள். அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள். (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) 

சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். அந்த வேதவதி தான் சீதையாக ஜனக மன்னன் நிலத்தை உழுதபோது கிடைத்தாள் என்று ஒரு வரலாறு சொல்கிறது.

மிதிலை

எல்லோருக்கும் தெரியும் ராமாயணத்தில் மூன்று வகை ராமாயணங்கள் புகழ்பெற்றவை. வால்மீகி, கம்பர் மற்றும் துளசி தாசர் இயற்றிய ராமாயணங்கள். ஆனால் மூன்று ராமாயணங்களும் சற்று மாறுபடுகின்றன. உதாரணமாக சீதையின் திருமண நிகழ்வு. வால்மீகி த்ரேதாயுகத்தை சேர்ந்த முனிவர். அன்றைய காலகட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் சந்திக்கமுடியாது. திருமணம் முடிந்த பின் தான் அவர்கள் சேர்ந்து வாழ முடியும். மிதிலையில் ராமன் வில்லை வளைத்த பிறகே சீதையை முதன் முதலில் பார்க்கிறார். திருமணம் செய்து கொள்கிறார்,  ஆக அவர்கள் திருமணம் ஒரு சம்ப்ரதயமாகவே பார்க்க முடியும்,

ஆனால் கம்பர் ஒரு புலவர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்ப ராமாயணம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அன்று தமிழில் ஒரு காப்பியம் என்று எழுதினால் அதில் காதலையும், போரையும் பற்றிக் கண்டிப்பாகப் பாடவேண்டும். வால்மீகி ராமாயணத்தைத் தழுவித்தான் கம்ப ராமாயணம் எழுதப்பட்டது. அதனால் கம்பருக்கு யுத்தத்தைப் பற்றி பாடும் வாய்ப்புக் கிடைத்தது. வால்மீகி காதலைப் பற்றி பெரிதாக ஏதும் சொல்லாததால் கம்பருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இங்கு கம்பருக்குக் களவையும் கற்பையும் எழுதவேண்டிய கட்டாயம்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரே குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பாலாகப் பிரித்து அந்த இன்பத்தையும்  களவியல், கற்பியல் என்று இரண்டு பகுதிகளாகப்  பிரித்துள்ளார். இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் போது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி ஒரு காப்பியம்  வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். .அதாவது தலைவனும் தலைவியும் ஒருவர் உள்ளத்தை  மற்றொருவரிடம்  பறிகொடுத்து அவர் நினைவாகவே வாழ்வதுதான் கற்பு என்ற கருத்தை ராமனையும் சீதையும் முன்னிறுத்திச் சொல்லி உள்ளார். அதனால் தான் மிதிலைக் காட்சி படலம் என்று ஒரு படலத்தை நுழைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்..

இப்போது எல்லோருக்கும் ஒரு ஐயம் வரலாம். கம்பரின் மிதிலைக் காட்சி போல வால்மீகி ஏன் எழுதவில்லை? முதலில் ஒரு காரணம் கொடுத்துள்ளேன். இன்னொன்று ராமன் சீதை இவர்களின் வயதைப்பற்றியது. ஆரண்ய  காண்டத்தில் வரும் இரண்டு ஸ்லோகங்களிருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.

நாம் சற்று ஆரண்ய காண்டத்திற்குச் செல்வோம். ராமர், சீதையுடன் வனவாசம் வந்துள்ளனர். மாய மானைத்தேடி ராமனும், லக்ஷ்மணனும் சென்று விட்டனர். சீதை தனித்து இருக்கிறாள். ராவணன், சீதையைக் கவர்ந்து செல்வதற்காக அந்தணர் வேடத்தில் அங்கு வருகிறான். அந்தணர் என்று கருதி அவனை வரவேற்று உபசாரம் செய்கிறாள் சீதை. அதே நேரம் ராமன், லக்ஷ்மணன் இருவரும்  வந்துவிடமாட்டார்களா  என்று வாயிலை நோக்கிக் கொண்டிருந்தாள்.

उषित्वा द्वादश समा इक्ष्वाकुणां निवेशने।
भुञ्जाना मानुषान्भोगान्सर्वकामसमृद्धिनी।।3.47.4।।

मम भर्तामहातेजा वयसा पञ्चविंशकः।।3.47.10।।
अष्टादश हि वर्षाणि मम जन्मनि गण्यते।

ராவணன்  அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டுகொண்டிருந்தான். சீதை தன்னைப் பற்றிய விவரங்களை அவனிடம் சொல்லுகின்றாள். “என் பெயர் சீதை, நான் ஜனகனின் புதல்வி. ராமனின் மனைவி … “இப்படி காட்டுக்கு வந்த விவரத்தைச் சொல்கிறாள். அப்போது அவள் திருமணமாகி தசரதன் அரண்மனையில் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்ததாகவும். தனது கணவனுக்கு வயது இருபத்தி ஐந்து என்றும் தனக்கு பதினெட்டு என்றும் சொல்லுகிறாள்.  அந்த ஸ்லோகங்கள் இவைதான்.

சீதை  சொன்னக் கணக்கின்படி ராமனுக்கு திருமணம் ஆகும்போது வயது 25-12=13 என்றும் சீதைக்கு 18-12=6 தெரிகிறது. அது காதல் தோன்றும் வயதல்ல என்று நினைத்து வால்மீகி அதைப் பற்றி எழுத விட்டிருக்கலாமோ என்று சிலர் கருதுகின்றனர்.

இன்னும் சிலர் மேல சொன்ன கருத்து தவறு என்றும். இங்கு தச என்பதை பத்து என்று மொழி பெயர்த்துள்ளனர். அது தவறு அது தசரதனைக் குறிக்கும், சீதை திருமணமாகி இரண்டு வருடங்களே அயோத்தியில் இருந்ததாகவும்  அதனால் சீதைக்குத் திருமணம் ஆகும்போது பதினாறு வயது என்றும் சொல்லுகின்றனர்.

மேலும் ஜனகன் விஸ்வாமித்திரனிடம் வில்லைப் பற்றியும், தனது நிபந்தனை பற்றியும் சொல்லும் போது நிறைய மன்னர்கள் சீதையைத் திருமணம் செய்யம் ஆசையுடன் வந்ததாகவும் சொல்கிறார். அப்படி என்றால் வந்தவர்கள் ஆறு வயதுக் குழந்தையைத் திருமணம் செய்யவா வந்தார்கள்? என்று கேட்கின்றனர்.

மேலும் வால்மீகி, திருமணத்தின் போது சீதையை நன்கு அலங்கரித்து கூட்டிக்கொண்டு வந்தனர் என்று சொல்லுகிறார்.

 ஆக த்ரேதா யுகத்தில் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் சந்திப்பதற்கு தடை இருந்தது என்றே எடுத்துக்கொள்வோம்.

ஆனால் தாசர் ராமரும் சீதையும் திருமணத்திற்கு முன் கோவிலில் சந்திப்பதாக எழுதி உள்ளார்.

வால்மீகி

விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களுடன் மிதிலைக்கு வெளியே வந்து தங்கினர். அவர்கள் வந்துள்ளதைக் கேள்விப்பட்ட மன்னன் ஜனகன் தனது குலகுரு சதானந்தருடன், அவர்களை சந்தித்து உபசரித்தான். சதானந்தர் தனது தாயான அகலிகையை சாபத்திலிருந்து ராமன் விடுவித்ததைக்கேட்டு மிக்க மகிழ்ந்தார். ஜனகர், ராமர் லக்ஷ்மணர் இருவரைப்பற்றியும் முனிவரிடம் விசாரித்தார். விஸ்வாமித்திரர், அவர்கள் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள் என்றும் தனது யாகத்தை அரக்கர்களிடமிருந்து பாதுகாக்க அழைத்துவந்ததாகவும் அதன்படி அரக்கர்கள் அழிக்கப்பட்டதுடன், கௌதமரின் மனைவி அகலிகை சாப விமோசனம் நடந்த கதையையும் எடுத்துச் சொல்லி, தற்பொழுது அந்த சிவ தனுஷின் மகிமையைக் கேள்விப்பட்டு அதனைப் பரீட்சித்துப் பார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜனகர், அவர்களை அரண்மனைக்கு வரும்படி அழைத்து விட்டு சென்று விடுகிறார். இரவில் எல்லோரும் ஒய்வு எடுக்கின்றனர். மறுநாள் அனைவரும் ஜனகனின் அரண்மனையை  அடைகின்றனர்

துளசி தாசர்

நாம் முதலில் துளசி தாசர் என்ன எழுதி இருக்கிறார் என்று பார்ப்போம். விஸ்வாமித்திரர், ராமர் லக்ஷ்மணர்களுடன் அரண்மனையில் சென்று தங்குகிறார்கள். மறுநாள் காலை பூஜைக்குப் பூக்கள் பறிக்கத் தோட்டத்திற்கு ராமரும் லக்ஷ்மணரும்  செல்லும்போது அங்கு சீதையும் வருகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். சீதையின் அழகு ராமரை மயக்குகிறது

देखि सीय शोभा सुखु पावा। हृदयँ सराहत बचनु  आवा
जनु बिरंचि सब निज निपुनाई। बिरचि बिस्व कहँ प्रगटि देखाई3

ராமனுக்குப் பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லையாம். துளசி தாசரும் கம்பருக்கு இணையாக, ராமன் சீதை சந்திப்பிற்கு முக்கியத்துவம் அளித்து நிறைய பாடல்கள் எழுதி உள்ளார். இங்கு சீதையும் அதே நிலையில் இருக்கிறாள். அங்குள்ள பார்வதி கோவிலுக்குச் சென்று, ராமனே தனக்கு மணாளனாக வரவேண்டும் என்று வேண்டுகிறாள். அவளுடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்ப்பதுபோலப் பார்வதி தேவியின் கழுத்திலிருந்த மாலை நழுவி சீதையின் மேல் விழுந்தது. ராமரும் லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரருடன் அரச மண்டபத்தை அடைந்தனர்..

                                                           கம்பன்

கம்பன் மிதிலைக் காட்சிப்படலம் என்று ஒன்று  பாடியதற்கான காரணத்தை முன்பே சொல்லி உள்ளோம். வான்மீகத்திலிருந்து விலகிச்சென்று தனக்கென்று ஒரு ராஜ பாட்டையை அமைத்துக்கொண்டான். இந்தப் பாடல்களைப் பாடும்போதுதான் அவன் மனதில் என்ன ஒரு உற்சாகம்?. ஏதோ வால்மீகி தனக்கு அனுமதி தந்ததுபோல பாடல்களை எழுதிக்குவித்து விட்டான்.

அகலிகையை கௌதம முனிவனிடம் சேர்த்துவிட்டு விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணருடன், வழிச் சென்று மிதிலை நகரத்து மதிலைக் கண்டனர். அப்போது அந்த மதிலுக்கு மேலாகத் தோன்றிய கொடிகள் காற்றால் அசைந்தன. அந்த நகரமாகிய பெண் ‘ தேவி லக்ஷ்மியானவள் எப்போதும் வசிக்கும்  செந்தாமரை மலரிலிருந்து நீங்கிச் சீதையாகி, யான் செய்த பெரும் புண்ணியத்தினால் என்னிடம் வந்திருக்கிறாள் “ என்று கைகளை உயர நீட்டி அசைத்துச்  சைகை செய்து திருமாலாகிய ராமனை ‘அவளை அடையச் சீக்கிரம் வருவாயாக” என்று அழைப்பது போலிருந்ததாம் அதை இந்தப் பாடலில் கம்பர் தெரிவிக்கிறார்

மை அருமலரின் நீங்கியான்செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பதுபோன்றது அம்மா.

இந்தப்பாடலின் மூலம் சீதையைத்  தாமரை மலரில் அமர்ந்திருக்கும்  லக்ஷ்மி என்றும் செந்தாமரைக் கண்ணனாகிய ராமனைத் திருமால் என்றும் குறிப்பிடுகிறார். அதுபோல ஒரு நகரத்தையே பெண்ணாக்கி அது செய்த தவத்தால் இலட்சுமியாகிய சீதையை அடைந்தது என்று சொல்கிறார்.

அடுத்த பாடலில், மிதிலை நகரத்து மாடங்களில்,  மேலேயுள்ள  கொடிகள் ‘தூது போவதற்கு வேறுயாரும் தகுதி இல்லாததால்   தர்ம தேவதை தானே தூது சென்று அழைக்க, சீதையைத் திருமணம் செய்யும் பொருட்டு ராமனே வருகிறானென்று மகிழ்ந்து தேவலோகப் பெண்கள் (உரம்பையர்) வானரங்கத்தில் ஆடுதல் போல அவர்கள் கண்டனர்.

நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
‘தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்’ என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார்

முதல் பாடலில், மதிலில் உள்ள கொடிகள் என்றும் இரண்டாவது பாடலில் மாடத்தில் உள்ள கொடிகள் என்றும் சொல்வது குறிப்பிடத்தக்கது. கொடியின் அசைவில் தற்குறிப்பேற்ற அணியின் மூலம் ‘வரவேண்டாம்’ என்றக் குறிப்பைத் தெரிவிக்கும் பாடல் ஒன்று வில்லிபுத்தூரரின் வில்லி பாரதத்திலும் காணலாம். வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கத்தில் இப்பாடல் இடம் பெறுகிறது. போரில் கௌரவர்களின் சார்பில் போரிட வேண்டி, படைத்துணையாக உதவுமாறு அழைப்பதற்காகப் பல அரசர்களுக்கும் தூதுவர்களை அனுப்புகிறான் துரியோதனன். கண்ணனின் உதவியை நாடித் தானே துவாரகைக்கு நேரில் செல்கின்றான். அப்பொழுது துவாரகை நகரின் அழகும், அந்நகரின் அகழி சூழ்ந்த மதிலின் சிறப்பும் விவரிக்கப்படுகிறது. அப்பாடலில் மதிலின் மீது பறக்கும் கொடிகளின் அசைவின் மூலம் துரியோதனனுக்கு கண்ணனின் உதவி கிட்டப்போவதில்லை என்றக் குறிப்பைத் தருகிறார் வில்லிபுத்தூரர்.

ஈண்டு நீவரினுமெங்களெழிலுடையெழிலிவண்ணன்

பாண்டவர்தங்கட்கல்லாற் படைத்துணையாகமாட்டான்

மீண்டுபோகென்றென்றந்தவியன்மதிற்குடுமிதோறுங்

காண்டகுபதாகையாடைகைகளாற்றடுப்பபோன்ற.

[வில்லி பாரதம், இரண்டாம் பாகம், 25. வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம் (5)]

துரியோதனனே, இந்நகரத்திற்கு நீ வந்தாலும், எங்களது அழகிய மேகவண்ணமுடைய கண்ணபிரான், பாண்டவர்களுக்குப் போர் புரிய உதவுவானே அன்றி உன்னுடைய படைக்குத் துணையாகப் போர் புரிய உதவமாட்டான். எனவே, நீ வந்தவழியே திரும்பிச் செல், எனப் பலமுறை அறிவித்த வண்ணம், அந்நகரத்தின் அகன்ற மதில்களின் உச்சியில் பறந்த, கண்ணைக்கவரும் அழகிய கொடிகள் தமது கைகளை அசைத்து அசைத்து துரியோதனின் வருகையைத் தடுப்பது போன்று பறந்தன என்கின்றது இப்பாடல்.

கண்ணனைச் சந்திக்கச் செல்லும் துரியோதனனை, நகரத்தின் மதிலின் மேல் காற்றிலே இயல்பாக அசையும் கொடிகள், வரவேண்டாம் திரும்பிப் போ என்று கைகளை அசைத்துத் தடுத்து குறிப்பால் உணர்த்துவதாகத் தற்குறிப்பேற்ற அணி கொண்டு வில்லிபுத்தூரர் தனது வில்லி பாரதத்தில் நயம்பட உரைக்கின்றார்.

இதே போல கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குள் நுழையும்போது அங்கிருந்த கொடிகள் கோவலனை நோக்கி இங்கு வராதே; உன்னைக் கொல்லப்போகிறார்கள்;  திரும்பிச்செல் என்று சொல்வதாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதி உள்ளார்.

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, ‘அவயவம் அமைக்கும் தன்மை
யாது?’ எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார்

இங்கு ஒரு கேள்வி எழலாம். கம்பர் சொல்கிறார் மிதிலை நகரக் கொடிகள் வா வா என்று சொல்கின்றன. ஆனால் இளங்கோ  அடிகள் சொல்கிறார்  மதுரை நகரக்கொடிகள் வராதே என்று சொல்கின்றன. கவிஞர்கள் தாங்கள் விரும்பியபடி சொல்லலாமா என்ற கேள்வி எழலாம். அதற்கு வாகீச கலாநிதி கி வ ஜகன்னாதன் சொல்கிறார் “ இருவர் சொன்னதும் சரிதான். மிதிலைக் கொடிகள் வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கொடிகள் அவை வா வா என்று சொல்கின்றன. ஆனால் மதுரைக் கொடிகள் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தன அவை வராதே என்று சொல்கின்றன” என்று.

 சீதையின் அழகை வர்ணித்தல்

மூவரும் மாட வீதிகளை கடந்து மிதிலை நகருக்குள் நுழைவதை வர்ணிக்கும் முகமாக கம்பன் சீதையின் அழகை நமக்கு எடுத்துரைக்கிறான். அதாவது “பிராட்டியின்  திருமேனியையொத்ததொரு சித்திர உருவத்தை எழுத விரும்பி அம்ருதத்திலே எழுது கோலைத்  தோய்த்துக் கொண்டு, இவ்வடிவத்து உறுப்புகளைச் சித்தரிக்கும் விதம் அறியாமல் திகைத்து நிற்பானே அல்லாமல் அந்த மன்மதனுக்கும் எழுத முடியாத பேரழகையுடைய ஜானகியை பெற்றதனால், லக்ஷ்மி வீற்று இருக்கின்ற செந்தாமரை மலரைப் போன்று விளங்கிக் காணப்படுகின்ற பொன்னிலாகிய மதில்களையுடைய மிதிலாபுரியில் மூவரும் நுழைந்தனர்”. இப்படிப் பல பாடல்களில் விதேக நாட்டைப பற்றியும், அந்நாட்டு மக்களைப் பற்றியும், மிதிலை நகரத்து அழகையும் மிகச் சிறப்பாக வர்ணனை செய்துள்ளான். இது போக அங்குள்ள நடனச் சாலை, கடைத் தெருக்களையும் பற்றிப் பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளான்

ஜவகர்லால் என்று ஒரு கவிஞர் தன்னுடைய பாடலின் ஒரு பகுதியில் இதைத் தெரிவிக்கிறார்

மிதிலைநகர் வீதியிலே துறவு செல்ல,
வீரத்தோ டிளமையுமே தொடரஆங்கே
மதுவுண்ட கிறக்கத்தைப் பெண்கள் பெற்றார்;
மனமயக்கம் ஆங்குவந்த மற்றோர் பெற்றார்;
இதுவன்றோ அழகிற்காம் எல்லை யென்றே
இதயங்கள் கழன்றோடத் தவித்தார் பல்லோர்;
மிதிலைநகர் வீதியெலாம் மதும யக்கம்;
விழுந்தவர்கள் விழுந்தவரே எழுந்தா ரில்லை.

நலுங்கு மெட்டு ராமாயணம்

சுடர்விளக்கின் மத்தியிலே

சுந்தரியாம் ஜானகியாள்

உடுவினங்கள் மத்தியிலே

உள்ள பூர்ணச்சந்திரன்போல்

பிரகாசித்து விளங்குவாளே

சிருஷ்டியுந்தா னுமுண்டாமோ

செப்பவுண்டோ அழகுகளை …

தெருவில் நிகழும் நிகழ்ச்சிக்களைக் காண்பதற்காக,  மேலே உப்பரிகையில் சாளரங்கள் தோறும் நிற்கின்ற மகளிரின் முகங்களின் தோற்றத்தை கண்டமை கூறப்படுகிறது. வானத்து சந்திரன் ஒன்று. அதுவும் பகலில் ஒளி மழுங்குவது; களங்கமுள்ளது. ஆனால் ராமன் லக்ஷ்மணன் மிதிலை வீதிகளில் வரும் நேரம் பகல் பொழுது. ஒளி மழுங்காது, களங்கம் இல்லாது பல சந்திரர்கள் சாளரம் தோறும் தோன்றவே அந்த பல சந்திரர்களின் உதயத்தை வியப்புடனே கண்டனர் என்று சொல்கிறார் கம்பன்.

அங்கு பல காட்சிகளைப் பார்த்துக்கொண்டே ராம லக்ஷ்மணர் விஸ்வாமித்திரர் சென்றனர். சாலையில் பெரிய கூட்டம், நகராமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. கூட்டத்தில் உள்ளவர் அனைவரும் பெண்கள். அவர்கள் அங்கே நிற்கவேண்டிய காரணம்?

அரண்மனைக் கன்னி மாடத்தில் சீதாபிராட்டி தனது தோழியருடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். கூடி இருக்கும் பெண்கள் எல்லாரும் சீதையின் அழகைக் காண்பதற்காக அங்கு நின்று கொண்டிருக்கின்றனராம். ஒரு பெண் இன்னொரு பெண்ணை அழகு என்று ஒத்துக்கொள்வாளா? சீதாபிராட்டி என்ன அவ்வளவு அழகா? கம்பர் அதற்கு விளக்கம் சொல்வதைப் பாருங்கள்.

“பொன்னின் ஜோதியும், போதின் நறு மணமும், தேனின் தீஞ்சுவையும், செஞ்சொற்க் கவியின் இன்பமும் ஒருங்கே உருவெடுத்துப்  பொழிவது போலுள்ள சீதாபிராட்டியை” என்று சொல்லிவிட்டு “எல்லாப் பெண்களுக்கும் உவமானமாக சொல்லப்படுகிற லக்ஷ்மியே இங்கு சீதையாக அவதரித்துள்ளதால் அந்த சீதைக்கு லக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் உவமானமாக சொல்ல முடியாது என்பதால், சீதை உவமையற்றவள்” என்று கம்பர் சொல்லுகிறார்.

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள்.

செப்பும்காலை, செங் கமலத்தோன் முதல் யாரும்,
எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்,
அப் பெண் தானே ஆயின போது, இங்கு, அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு, எவ் வகை நாடி, உரை செய்வேம்?
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர், காட்சிக் கரை காணார்,
‘இமையா நாட்டம் பெற்றிலம்’ என்றார்; ‘இரு கண்ணால்
அமையாது’ என்றார்-அந்தர வானத்தவர் எல்லாம்.

அப்படிக் கன்னிமாடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சீதையின் அழகைக் காண நிற்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் எல்லோரும் உமையாளைப்ப் போன்ற அழகுடையவர்கள் என்று கம்பன் கூறுகிறார். பார்வதி தேவி முதலிய சிறப்புடைய மாதர்களும் உச்சியில் கைகூப்பி வணங்குதற்குரிய பொறுமை முதலிய நற்குணங்களை உடைய சீதாபிராட்டியின் திருமேனி அழகை பார்த்தவராகிய  மண்ணுலகத்தார் இவ்வழகின் எல்லையை முழுவதுமாகக் காணுமாறு இமைகள் மூடாத கண்களை மானிடர்க்குத் தராமல் தேவர்கள் வஞ்சனை செய்துவிட்டனர் என்று  குறைபட்டனாராம். அதற்கு இமைகளை மூடாத தேவரும் விண்ணுலகிலிருந்து  “இமைகள் மூடாத கண்கள் எங்களுக்கு இருந்து என்ன பயன்? இமைக்காத கண்கள் ஆயிரம் இருந்தாலும் சீதையின் அழகைப் பார்க்க முடியாது”என்று சொன்னார்களாம்    

சீதை உப்பரிகையின் மேலிருந்து பார்க்கிறாள்.

‘கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்’ என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண்
கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள்.

கொல்லும் தொழிலை செய்யும் ஈட்டி, வேலாயுதம், மற்றும் யமன்  இவைகளை வென்று விடும் என்று சொல்லக்கூடிய விழிகளைக் கொண்டுள்ள சீதாபிராட்டி, மலைகள், பெரிய கற்கள், புற்கள் இவைகள் தன்னைப்பார்த்து உருக்கமடையும்படி நின்றாளாம்  என்று கம்பர் சொல்கிறார்.

சீதையும் ராமனும் சந்திப்பு

கன்னி மாடத்தின் மேற்ப் பகுதியில் சீதை, தனது தோழி நீலமாலை, மற்றும் ஏனைய தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். பந்து தவறுதாலாக மாடியிலிருந்து வீதியில் சென்று கொண்டிருக்கும் ராமனது  தோளில் வந்து விழுந்தது. அதை உடனே பிடித்த ராமன் அது எங்கிருந்து வந்தது என்று மேலே கன்னி மாடத்தைப் பார்த்தான். பந்து கீழே எங்கு விழுந்தது என்று சீதையும் கீழே பார்த்தாள். இதனைக் கம்பர்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்விஒன்றை ஒன்று
உண்ணவும்நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்அவளும் நோக்கினாள்.

என்று பாடுகிறார் இங்கு ராமனின் கண்கள் சீதையைப் பார்த்தன. சீதையின் கண்கள் ராமனைப் பார்த்தன. அத்துடன் நின்றனவா? இல்லை அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று கவ்வி, ஒன்றையொன்று உண்ண  ஆரம்பித்துவிட்டனவாம் காதலுக்குத்தான் எவ்வளவு பசி . அத்துடன் நின்றனவா? அவர்களுடை உணர்வும் ஒன்றிப்போனவாம். அது என்ன? ராமன் சீதையைப் பார்த்தவுடன், இவள் தான் எனது மனைவி என்ற உணர்வு. அதுபோல, சீதை ராமனைப் பார்த்தவுடன், இவன் தான் எனது கணவன் என்ற உணர்வு. அதாவது சீதையைப் பார்த்த கண்ணால் வேறு எந்த பெண்ணையும் பார்க்க மாட்டேன்/நினைக்க மாட்டேன்  என்று ராமனும் ராமனைப் பார்த்த கண்ணால் வேறு எந்த ஆணையும் பார்க்க மாட்டேன்/நினைக்க மாட்டேன் என்ற உணர்வு இருவருக்குள்ளும் எழுந்தது.    இந்த உணர்வு ஒன்றிட, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று கம்பர் சொல்லுகிறார்.  இதில் என்ன இரண்டு ம். போடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் உண்டு.  இரண்டும் தனிதனிச் செயல்கள். ராமர் சீதையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்  பார்க்கவில்லை. சீதை ராமனைப் பார்க்கவேன்றும் என்ற எண்ணத்தில்  பார்க்கவில்லை. இரண்டும் தனித்தனிச் செயல்கள்; ஒரு நொடிக்குள் நடந்த செயல்கள் அதனால் தான் இரண்டு ம் போடப்பட்டுள்ளதாகச் சான்றோர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்’ 

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்குஇதயம் எய்தினார்.

அப்படி ஒருவரை ஒருவர் பார்த்ததால் எந்தவித செலவும் இன்றி ஒரு அறுவை சிகிச்சை நிகழ்ந்துவிட்டதாம். அதாவது ராமனின் இதயத்திற்குள் சீதை புகுந்து விட்டாள். சீதையின் இதயத்திற்குள் ராமன் புகுந்துவிட்டான். இங்கு வில் ஏந்திய (வரி சிலை) ராமன் என்று ஏன் சொல்லவேண்டும். அதாவது வாளைப்போன்ற கண்ணையுடைய சீதையின் கன்னி உள்ளம் ஒரு பாதுகாப்பு நிறைந்த கோட்டை. வில்லும் கையுமாகப் புகுந்து கன்னி மனக் கோட்டையை கைவசமாக்கிக் கொள்கிறான் என்று கம்பர் கூறுகிறார்.

சங்க காலத்துக்கும் முற்பட்ட நாளில் தமிழில் ஆசிரியப்பாவினால் இயன்ற இராமாயணம் ஒன்று வழங்கி வந்திருந்திருக்கிறது. அது இப்போது நமக்குக் கிடைக்கவில்லையெனினும், உரையாசிரியர்கள் ஆங்காங்கே காட்டியுள்ள மேற்கோள் பகுதிகள் ஒரு சில கிடைக்கின்றன. சங்க முற்பட்ட காலத்தில் வழங்கிய தமிழ் இராமாயணத்தில், இராமனும் சீதையும் முதன்முதலாகப் பாரக்கும் பகுதி ஒன்று கிடைத்திருக்கிறது. அது வருமாறு:

ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன்

வேள்வி போற்றிய இராமன் அவனொடு

மிதிலை மூதூர் எய்திய ஞான்றை

மதியுடம் பட்ட மடக்கண் சீதை

கடுவிசை வில்ஞாண் இடியொலி கேளாக்

கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித்

துயில் எழுந்து மயங்கினன். –

தொல். அகத்தினை – 54 உரைமேற்கோள்.

(விசுவாமித்திர முனிவன் தன் வேள்வி முற்ற இராமனைத்  துணைக்கொண்டான். அது முடிந்தபின் அவனொடு மிதிலையாகிய பழைய ஊரை அடைந்த பொழுது, இராமனுடைய மனத்தில் தோன்றிய காதல் உணர்வு அவன் கண்மூலம் வெளிப்பட்டதைத் தன் கண்மூலம் பார்த்து அறிந்துகொண்ட அழகிய கண்களையுடைய சீதை, மறுநாள் வில் ஒடிக்கப்பட்ட ஒசையால் துயிலெழுந்து, அதை ஒடித்தவன் யார் என்று அறிய முடியாமையால் மனங்கலங்கி இருந்தாள்.) நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பில் மேற்கோளாகக் காட்டும் இப்பாடல், கம்பன் பிற்காலத்தில் தன் காப்பியத்தில் அற்புதமான நாடகச் சூழ்நிலையாக அமைப்பதற்கு உதவுகிறது என்பதையும் அறியமுடிகிறது. வேறு எந்த மொழியிலுள்ள இராமகாதையிலும் இல்லாத ஒரு கற்பனையாகும், இராமனும் சீதையும் கண்களால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டனர் என்று கம்பன் பாடுவது,

மருங்கு இலா நங்கையும்வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் –
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்பேசல் வேண்டுமோ?

சீதைக்கும் ராமனுக்கும் ஏதாவது குறைசொல்லவேண்டுமே என்று நினைத்த கம்பன் ‘மருங்கு இலா நங்கை’ என்று சீதையைப் பார்த்துச் சொல்லுகிறான். அதாவது இடுப்பே இல்லாத சீதை என்று சொல்லி மீண்டும் அழகிய பெண்ணின் இலக்கணத்தைத்தான் சொல்லுகிறான். அதுபோல ராமனையும் ‘குற்றமே கண்டுபிடிக்கமுடியாத ராமன்” என்று சொல்லுகிறார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கண்கள் கவ்வி, உண்டு உணர்வுகள் ஒன்றிட ஓருயிர் இருவுடல் என்று ஆயினர். ஆனால் ஒன்று கூடியவர்கள் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தனர் என்று சொல்லிவிட்டு ‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ” என்று ஒரு கேள்வி நம்மை பார்த்து கேட்கிறான்?

அது என்ன பிரிந்தவர்? ராமரும் சீதையும் எப்போது பிரிந்தனர்? கொஞ்சம் புராணங்களைத் திரும்பி பார்ப்போம்

வாமனாவதாரத்தில் உலகத்தையெல்லாம் அளந்து சிவந்த திருவடிகளுடன் பகவான் தன் பாற்கடல்  வீட்டுக்குத் திரும்பிப் போனார் அல்லவா? அப்போது தேவி தன் சிவந்த கைகளால் அந்தக் காலைத் தொட்டுத் தடவிக் கொண்டே, ”இனிமேல் இப்படித் தனியே அலைந்து திரியலாகாது, என்னையும் உடன் அழைத்துப் போக வேணும்’ என்று கெஞ்சினாள். மஹாபலியை அடக்கி மீண்ட மஹாவிஷ்ணு, ”இனி ராமாவதாரம்; ராவணாதி ராக்ஷஸர்களை அடக்கப் போகிறோம்’ என்று தமது நிகழ்ச்சிக் குறிப்பிலே அடுத்து வரப் போகும் அந்த நிகழ்ச்சியைச் சொன்னதும், மஹாலக்ஷ்மி, ”அப்போது நானும் கூட வருவேன்’ என்று பிடிவாதம் செய்தாள். அதனால்தான் அவள் சீதாவாகப் பிறப்பெடுத்து ராமனோடு காடும் மேடும் சுற்றித் திரிந்து படாத பாடுபட நேர்ந்ததாம். இதைத்தான் கம்பர் நமக்கு நினைவு படுத்துகிறார்.

மஹா விஷ்ணு தசரதனின் மகனாகப்  பிறக்க வேண்டுமென்று தீர்மானித்ததும், தேவியையும் எப்படி அழைத்துப் போவது என்பது ஒரு பிரச்னையாகி விட்டது. விரைவில் மஹாலக்ஷ்மி ஜனககுல சுந்தரியாக மிதிலையில் பிறக்க வேண்டும் என்ற தீர்மானத்ததிலே பிரச்னையும் தீர்ந்தது. எனினும் ஆரம்பத்தில் பிரிவு பிரிவுதானே?

பாற்கடல்  வீட்டிலிருந்து முதன்முதலில்  புறப்பட்டவர் மஹா விஷ்ணு; தனது மனைவி லக்ஷ்மியிடம் விடைபெற்று நீங்கி அயோத்தியில் போய்ப் பிறந்து விட்டார். பிறகு மஹாலக்ஷ்மியும் பாற்கடலை விட்டு நீங்கி மிதிலைச் செல்வியாகப் பிறந்து விட்டாள். இப்போது ராமன் மிதிலைக்கு வந்ததும்  சீதையைக் கண்டானல்லவா? இந்தக் காட்சியைப் ‘பிரிந்தவர் கூடியது’ என்றே கம்பன் குறிப்பிடுகிறான்.

பாற்கடலில் பிரிந்தவர்கள் மிதிலையில் கூடினார்களாம். அப்படிக் கூடும்போது பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இதைத்தான் வள்ளுவர் தனது குறளில் சொல்லி உள்ளார்;

கண்ணோடு கண் இணை நோக்(கு)ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன

பயனும் இல

கண்ணும் கண்ணும் ஒத்துப்போனால் வாய்ச்சொல் எதற்கு?இதைதழுவியே கம்பனும் இந்தக் காதல்க் காட்ச்சியைச் சித்தரிக்கிறான்.i

சீதையின் விரக வேதனை

இப்படிச் சீதை ராமனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ராமர் விஸ்வாமித்திரருடன் சென்று சீதையின் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். மேனி அழகும் போய்விடுகிறதாம் ராமனோடு. விரக தாபத்தால் அவ்வளவு விரைவாக அழகு மழுங்கத் தொடங்குகிறது என்பது குறிப்பு. இப்படி அழகு ஒருவாறு மழுங்கிய நிலையில்தான் சீதையும் சித்திரப் பதுமை போல் இருக்கிறாளாம். இல்லாவிட்டால் எந்தச் சித்திரப் பதுமையைத்தான் சீதையென்ற ரூபசித்திரத்திற்கு ஈடாகச் சொல்ல முடியும்?

இயன்றவரை மனத்தை அடக்க முயன்றவள்தான். தன்னடக்கம் என்ற அங்குசத்தால் மனம் என்னும் யானையை அடக்கிக் கொண்டுதான் இருந்தாள். ராமன் தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரையில் அங்குசத்திற்கும் வெற்றிதான். ஆனால் ராமன் மறைந்ததும் நிகழ்ந்ததென்ன?

மனமெனும் மத்த யானையின்

நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே!

சீதையின் கண்வட்டத்திலிருந்து ராமன் மறைந்த மாத்திரத்திலேயே இவளுடைய  காதல் மிகுந்த  மனம் என்ற யானையும் அடங்காது ராமனோடு செல்லத் தொடங்கி விட்டதாம். அதை அடக்குவதற்கு மனவுறுதி என்ற அங்குசத்தை மாட்டி இழுக்கிறாள். ஆனால் யானை மதயானையாகி அங்குசத்தின் கொக்கியை நிமிரச் செய்துகொண்டு திமிறிப் போய் விடுகிறதாம். பிரிந்தவர் கூடிய இன்பத்தைப் பேச முடியுமோ என்றான் கவிஞன். பிரிந்தவர் கூடிப் பிரிந்த துன்பத்தைத்தான் பேச முடியுமா?

கவிஞர் ஜவஹர்லால் அவர்களின் வரிகளில்

முனிவரவர் முன்செல்லப் பின்னே ஏகும்
முதிரழகின் நிமிர்ந்தநடை கண்ட மாந்தர்
கனிசுவைத்துத் திளைத்திட்டார்நடந்து சென்ற
காளைநிமிர்ந் துயர்ந்துபார்க்கமாடத் தின்கண்
தனியழகின் கொள்முதலைக் கண்டான்பாய்ந்து
தைத்திட்ட கண்ணெடுக்க மறந்தான்கன்னி
கனியானாள்கண்ணாலே சுவைத்தான்காளை
கண்போன போக்கிற்குத் தடமே இல்லை.

அவன்பார்த்தான்திரண்டதோளை அவளும் பார்த்தாள்;
ஆங்கிரண்டு கண்ணிணைகள் இணையக் கண்டார்;
அவன்கண்ணின் வழிபுகுந்தாள் சீதைஅந்த
அழகுமலர்க் கண்வழியே புகுந்தான் ராமன்;
எவர்கண்கள் எப்போது தைத்த வென்றே
எவர்காணக் கூடுமந்த இருவர் நெஞ்சும்
இவரவரென் றிலையென்றே ஒன்றா யானார்;
இதயத்தில் தீப்பற்றப் பிரிந்து சென்றார்.

சீதையின் முகம் வாடிவிட்டது. காரணம் கேட்ட தோழி நீலமாலையிடம் சீதை ராமனின் அழகைப் பற்றி வர்ணிக்கிறாள். அவனைப்பார்த்தால் ஒரு அரச குமாரன் போல தெரிகிறது. பாவம் அவன் வீதியில் நடந்து போகிறானே என்று நான் பார்க்க அவன் என் கண்வழி நுழைந்து நெஞ்சுக்குள் சென்றுவிட்டான் என்று சொல்கிறாள்

‘பெண் வழி நலனொடும், பிறந்த நாணொடும்,
எண்வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன் –
மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்

சீதை அந்தப்புரம் சென்று தனது மலர் மஞ்சத்தில் படுத்தாள். மலர்கள் கருகிப் போயின. நெஞ்சில் தாபமும், ஏக்கமும் கொண்டு கண்ணீர் விட்டு அழுதாள். அவள் ஏன் இப்படி அழுகிறாள், வருத்தப்படுகிறாள் என்ற விவரம் அறியாத தோழியர்கள் அவளுக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆரத்தி சுற்றினர். மஞ்சத்தில் படுத்திருந்த சீதையின் மனதில் இராமன் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். அவன் நினைவு மட்டுமே அவள் மனதில் இருந்தது. யார் அவன்? தேவனோ? இருக்காது, ஏனென்றால் அவன் பார்க்கும் போது கண் இமைத்தானே. கையில் வில் ஏந்தியிருக்கிறான்; மார்பில் முப்புரி நூல் அணிந்திருக்கிறான், எனவே அவன் ஒர் மானிடன்தான். அதிலும் அரச குமாரன். மாதர் நலம் அனைத்தையும் என்னிடமிருந்து கவர்ந்து கொண்டு, என் கண்வழி புகுந்து நெஞ்சைத் திருடிச் செல்லும் கள்வனோ? ஐயோ! என்ன அவன் அழகு! இப்படியெல்லாம் இராமனின் அழகையும் அவன் உருவம் தன் மனத்துக்குள் புகுந்து செய்யும் மாற்றங்களையும் சீதை உணர்ந்து அவனிடம் காதல் வயப்பட்டாள்.

‘நீங்கா மாயையவர் தமக்கு நிறமே தோற்றுப் புறமே போய்,
ஏங்காக் கிடக்கும் எறி கடற்கும், எனக்கும், கொடியை ஆனாயே-
ஓங்கா நின்ற இருளாய் வந்து, உலகை விழுங்கி, மேன்மேலும்
வீங்கா நின்ற கர் நெருப்பினிடையே எழுந்த வெண் நெருப்பே

‘கொடியை அல்லை; நீ யாரையும் கொல்கிலாய்;
வடு இல் இன் அமுதத்தொடும், வந்தனை,
பிடியின் மென் நடைப் பெண்ணொடு; என்றால், எனைச்
சுடுதியோ?-கடல் தோன்றிய திங்களே!

ராமனின் குழப்பம்

இங்கே, ராமன் லக்ஷ்மணன் இருவரும் விஸ்வாமித்திரருடன் ஜனகரின் மாளிகைக்கு வந்துச் சேர்கிறார்கள். ஜனகரின் குல குரு சதானந்தர் அவர்களை வரவேற்று விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கிறார். இரவு ஆகிவிட்டது. தாடகை வதம் அகலிகை சாப விமோசனம் முடிந்து காடுகளின் வழியே நடந்து வந்த களைப்பு. ராமனைத்தவிர மற்றவர்கள் உறங்கிவிட்டனர்.

ராமனுக்கு தூக்கம் வரவில்லை. நீங்கள் நினைக்கலாம் சீதையைப் பார்த்ததால் ராமனுக்கு தூக்கம் வரவில்லை என்று. ஆனால் காரணம் அதுவல்ல. ஆணின்  கம்பீரம் அவனது தெளிவில் தான் உள்ளது. மனதிலே அசையாத தன்மை இருப்பவன் எவனும் ஆண்மகனே. ராமன் நினைக்கிறான் இதுவரை எனது உள்ளம்  ஒரு பெண்ணையும் பார்த்து ஆசைபட்டதில்லையே? இன்று, ஒரு பெண்ணைப் பார்த்ததும் இவள் என்னுடையவள் ஆகவேண்டும்; இவள் எனக்காக வேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டதே. நான் தவறு இழைத்துவிட்டேனோ? என்று ராமன் மனதிலே ஒரு குழப்பம். 

என்ன குழப்பம்? சீதை மாடத்திலே நின்றாள். ராமானால் தொலைவிலிருந்து தான் அவளைப் பார்க்கமுடிந்தது  ராமன் “நான் தொலைவில் மாடத்தில் இருக்கும் பெண்ணைப் பார்த்து இவள் என்னுடையவள் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டேனே. ஒரு வேளை,  அவள் வேறு யாருடைய மனைவியாக இருந்திருந்தால்?” என்று நினைக்கிறான்.  அவனுடைய ஒழுக்க மனம் துன்பப்படுகிறது. ஒருவேளை அவர் மற்றவரது மனைவியாக இருந்திருந்தால் நான் ஆசைப்பட்டது எவ்வளவு பெரிய தவறு? என்பதே ராமனின் எண்ணம். நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’… என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வருகிறான்.

இதிலிருந்து,  ராமன் வளர்க்கப்பட்ட விதமும் நமக்குத் தெரிய வருகிறது. அவனுள் அறம்  வேரோடிக் கிடந்தது. நெடு நேரம் யோசித்து கடைசியில் ராமன் ‘இவள் திருமணம் ஆனவள் இல்லை’ என்று ஒரு முடிவுக்கு வருகிறான். தான் பார்த்த பெண் நெற்றியில் குங்குமம் இட்டுள்ளாளா ? அவள் கழுத்தில் திருமாங்கல்யம் உள்ளதா? இப்படி புறப்பொருட்கள் எதையும் தனது முடிவுக்கு சாட்சியாக ராமன் கருதவில்லை.  “என்னுடைய மனம் ஒரு விஷயத்திலே சென்றால் இதுநாள் வரைக்கும் நல்ல வழியில் தான்    சென்றுள்ளது. கெட்ட வழியில் சென்றதில்லை. நானே என்  மனதை அப்படிச் சுதந்திரமாகச் செயல்பட விட்டாலும் அது கெட்ட வழியில் செல்லாது” என்று ராமன் நினைப்பதைக்  கம்பன் இந்தப் பாடலில் சொல்லுகிறான்

ஏகும் நல்வழி அல்வழி என் மனம்

ஆகுமோ இதற்கு ஆகிய காரணம்

பாகு போல் மொழி பைம் தொடி கன்னியே

ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே

ஒன்றைப் பழக்கப் படுத்தி விட்டால் அது வழக்கமாகி விடும்.
நல்ல விஷயங்களை நம் உடலுக்குப் பழக்கப் படுத்தி விட்டால் பின் எப்போதும் அதை மறக்காது . இறுதிக் காலத்தில் அறிவு குழம்பும், நினைவு தப்பும், புலன்கள் தடுமாறும்…எப்போதும் நல்லதையே செய்து பழக்கப் படுத்திவிட்டால் புலன்கள் அப்போதும் நல்லதையே செய்யும். சுந்தரர் சொல்கிறார், “என் மனம் மறக்கினும், என் நினைவு உன்னை மறக்கினும் .. நற்றவா உன்னை நான் மறக்கினும் நா சொல்லும் நமசிவயமே” என் நாக்கு நமச்சிவாய  என்று சொல்லிக் கொண்டே இருக்கும் என்று சொல்லுகிறார். அதையே தான் ராமனும் சொல்லுகிறான். இது தான் ராமன். ராமனின் ஆளுமை.

ராமன் ஜனகனின் அவையை அடைதல்

பொழுது புலர்ந்தது. ராமரும் லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரருடன் சபா மண்டபத்திற்கு வந்தனர். அங்கு மன்னன் ஜனகன் வேள்வி முடித்துவிட்டு மண்டபத்திற்கு வந்தான். முனிவரை வணங்கி அவருடன் இருக்கும் ராமர்  இலட்சுமணரைப் பற்றி கேட்டான்.. ”அரசே இவர் விருந்தினர்; உன் வேள்வி காண வந்தார்; வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தசரதன் தன் புதல்வர்”  என முனிவர் பதிலுரைத்தார் வில்லை முறித்து சீதையை மணம்புரியும் ஆற்றலும் உண்டு என்பதைக் குறிப்பாலும் நயமாகவும் உணர்த்துகிறார். . ராமனின் புகழையும் இட்சவாகு வம்சத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும். அதுதான் கம்பனின் குறும்பு. ராமன் பெருமை மிக்க தசரதனின் மகன் என்று சொல்லி விட்டு  கம்பன் இந்த பாடலையும் பாடுகிறான்.

‘திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!-உபநயன விதி முடித்து,
மறை ஓதுவித்து, இவரை வளர்த்தானும் வசிட்டன்காண்.

ஒரு பெண்ணைப் பெற்றவன் என்ன நினைப்பான்? தனக்கு மாப்பிளையாய் வருபவன் ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று தானே. விஸ்வாமித்திரர் புத்திசாலி மட்டுமல்ல சமயோசிதம் தெரிந்தவர். ராமர் தசரதனின் மகன் என்று சொன்னவுடன் சற்று யோசிக்கிறார். தசரதன் என்று சொன்னவுடனேயே எல்லோருக்கும் முதலில் தோன்றுவது தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர் என்றுதானே. அதை சொன்னவுடனேயே விஸ்வாமித்திரர் சுதாரித்துக்கொண்டு  பெயரளவில் தான் இவன் தசரதனின் மகன் ஆனால் இவனை வளர்த்து ஆளாக்கி கல்வி கற்றுக்கொடுத்து ஒழுக்கசீலனாக ஆக்கியவர் வசிஷ்டர் என்ற குலகுரு. அதாவது வசிஷ்டர் எப்படி அனுசூயை என்ற தனது ஒரே பத்தினியுடன் சிறப்பாக வாழ்க்கை நடத்துகிறாரோ அதுபோல இந்த ராமனும் ஒரே மனைவியுடன் வாழ்வான். நீங்கள் தைரியமாக இவனுக்கு உங்கள் பெண்ணை மணமுடிக்கலாம். அதற்க்கு நான் உத்தரவாதம் என்பது போல விஸ்வாமித்திரரின் பதில் உள்ளது. 

சிவதனுஷின் வரலாறு

சதானந்த முனிவர் அவர்களிடம் அந்த சிவ தனுஸ் ஜனகரிடம் வந்த வரலாறு பற்றி சொல்லுகிறார். “ஒரு முறை பார்வதியின் தந்தையாகிய தக்ஷன் என்பவன் சிவனை அழைக்காது ஒரு பெரும் யாகத்தை துவக்கினான். தன்னை மதிக்காது தக்ஷன் செய்த யாகத்தையும் அதில் கலந்துகொண்டவர்களையும் அழித்துவிட்டு வருமாறு சிவபெருமான் தனது கண்களில் இருந்து உருவாக்கிய வீரபத்திரரை பணித்தார். தானும் ஒரு மிகப் பெரிய தனுசை எடுத்துக்கொண்டு வேள்விச் சாலையை அடைந்தார். அங்கு தேவர்கள் அனைவரையும் அழித்தார். பின்னர் சினம் தணிந்து அனைவரையும் உயிர்ப்பித்தார். சினம் தணிந்த நிலையில் தன் கையில் இருந்த அந்த பெரிய வில்லை, ஜனகனின் முன்னோர்களில் ஒருவனுக்கு கொடுத்துவிட்டதாக வரலாறு. அதுவே இந்த திரயம்பகம் எனப்படும் சிவதனுசாகும்.” என்று கூறி முடித்தார் சதானந்த முனிவர்.

ஒருமுறை சீதை தனது தோழிகளுடன் அம்மானை ஆடிக்கொண்டிருந்தபோது அதில் ஒரு காய் சிவ தனுஷின் கீழ் சென்றுவிட சீதை எளிதாக அந்த வில்லை தனது இடது கையால் தூக்கி, அந்த காயை எடுத்துவிடுகிறாள். அதைப் பார்த்துகொண்டிருந்த ஜனகருக்கு சீதைக்கு கணவராக வருபவன் வில்லைத் தூக்கும் அளவுக்கு பலசாலியாக இருக்கவேண்டும் என்றுதீர்மானித்து அந்த வில்லை வளைத்து நாணேற்று பவருக்கே சீதையைத திருமணம் செய்து கொடுப்பேன் என்று பிரதிஞ்ஞை செய்துவிடுகிறார்.

இதனிடையே சீதையின் அழகைக் கண்டு அவளை மணமுடிக்க விண்ணோர்களும் மண்ணோர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு வந்தனர். ஆயினும் அந்த வில்லை வளைக்கமுடியாமல்   அவர்கள் அனைவரும் தோல்வியடைந்து திரும்பினர். பலர் சினம்கொண்டு ஜனகன் மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் அனைவரையும் தேவர்களின் உதவியுடன்  ஜனகன் புறமுதுகிட்டு ஓடச் செய்துவிட்டான். வால்மீகி ராமாயணத்தின் படி ஜனகர் ராமன் வில்லை வளைத்தால் ராமனுக்கே சீதையைத்திருமணம் செய்துகொடுப்பதாகச் சொல்கிறார்.

நலுங்கு மெட்டு ராமாயணம்

பூர்வமொரு காலந்தன்னில்

புரமெரித்தோன் தந்த வில்லை

நீர்மையுள்ள ஜனகன் முன்னோர்

நியமத்தோடு வைத்திருந்தார்

சீதை விளையாடையிலே

சிறு விரலாலதைத்தள்ளச்

சேதிகேட்டு அரசனப்போ

சீதை சக்திக் கதிசயித்து

இவளையுந்தான் அடக்கியாள

இவ்வுலகில் புருஷனுண்டோ?

சிவன்வில்லை எடுத்தவளாம்

சீதை சக்திக் கிணையாகவே

எவனொருவன் அந்தவில்லை

எடுத்து வளைத்திடுவானோ

அவனுக்கிந்தச் ஜானகியை

அளிப்பெனென்று பிரதிஞ்ஞைசெய்தான்

சிவதனுசு அவையை அடைதல்.

ஜனகர் சிவதனுசை கொண்டுவரும்படி பணிக்கிறார். எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து


‘உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்

எனக்கம்பன் வர்ணிக்கும் அறுபதாயிரம் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.


சபைமுழுவதும் ஆர்வமாய்க் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.

மிதிலை மக்களின் கவலைஎன்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!”. “திண்நெடுருவைத்திரட்டிற்றோ…..மேருமலைத்திரட்டி இந்தவில்லைப் பண்ணினார்களா?.”வண்ண வான்கடல் பண்டுகடைந்த மத்தென்பர்……கடலில் மந்தரமலையைக்கடைந்த அந்தமலையே திரும்பவும் வந்துவிட்டதா? அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?………பாம்புக்கெல்லாம் அரசனாக இருக்குமோ? விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?….. வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா? என்று அந்த மக்கள் பேசிவியக்கிறார்கள்

மிதிலாபுரி வீதிகளில் ராமன், முனிவருடனும் லட்சுமணனுடனும் வந்து கொண்டிருந்ததைப் பார்த்திருந்த மக்கள், ராமன்தான் தனுசில் நாணேற்றப்  போகிறான் என்பதை ஊகித்துப் பெரும் திரளாக அரசவையில் பார்வையாளர்கள் பகுதியில் வந்து நிறைந்தார்கள். வில்லைப் பார்த்ததும் கூடியிருந்த மக்கள் திகைத்துப் போய்விட்டனர். இவ்வளவு பெரிய வில்லை யாரால் வளைக்க முடியும்? இங்கு அமர்ந்து இருக்கும் ராமன் மிகச் சிறிய பையன்.  இவனால் இந்த வில்லை வளைக்க முடியுமா? இவனால் வளைக்க முடியாவிட்டால் நம் சீதையின் நிலை என்னாகும்?

‘வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்,
“கொள்” என் முன்பு கொடுப்பதை அல்லால்,
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை’ என்பார்.  

ஜனக மன்னன் தன மகளாகிய சீதையை ராமனுக்கு ராமனுக்கு மணமுடிக்க விரும்பினால் என்ன செய்து இருக்கவேண்டும்? “இந்தா! பெற்றுக்கொள்” என்று கூறித் தானே தாரை வார்த்துகே கொடுத்து இருக்கவேண்டும். அவ்விதம் செய்யாமல் இவ்வளவு பெரிய சிவ தனுஷைக் கொண்டு வந்து நாணேற்றுமாறு இந்த சிறுபிள்ளை முன் வைப்பது அறிவீனம்” என்று மிதிலை வாசிகள் கூறினாராம்.

ஞான முனிக்கு ஒரு நாண் இலை’ என்பார்;
‘கோன் இவனின் கொடியோன் இலை’ என்பார்;
‘மானவன் இச் சிலை கால் வளையானேல்,
பீன தனத்தவள் பேறு இலள்’ என்பார்.

இன்னும் சிலரோ நம்ம மன்னர் தான் அறிவில்லாமல் இப்படிச் செய்கிறார் என்றால் இந்த முனிவருக்கு புத்தி எங்கே போயிற்று? கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி அமர்ந்துள்ளாரே. இவராவது மன்னருக்கு எடுத்துச் சொல்லியிருக்கக் கூடாதா?  நமது மன்னன் ஜனகனைப் போன்று கொடிய மனம் கொண்டவர் வேறு எவருமில்லர்.  இந்தத் தம்பி இந்த வில்லை வளைக்காவிட்டால் நம் சீதைக்கு அதிர்ஷ்டம் இல்லை” என்று பேசினர்,

கவிஞர் ஜவகர்லால்

சனகனவன் நெஞ்சமுலைக் களமா யாச்சு;
தனயனுக்குச் சீதையென நெஞ்சம் சொல்லும்;
மனமயக்கம் சிவதனுசு முழுதா யீயும்;
வளைத்தவனுக் கல்லவோயிச் சீதைஇந்த
வனக்களிறு வில்வளைக்க வேண்டு மென்று
மனசுக்குள் யாகமொன்று செய்தான்மாந்தர்
சனகனவன் அறிவையெடை போட்டார்இங்கே
தடையாக வில்லைவைத்தான் மடைய னென்றார்

வில் வளைத்தல்வந்த மன்னர் எல்லோரும் வில்லை வளைக்க முயற்சி செய்து தோல்வியுற்று வெளியேறினர். வந்திருந்த மிதிலை மக்கள் ஒவ்வொருவர் கண்களிலும் துடிப்பு மின்னியது. ‘‘பேரழகன் இவன். நம் சீதைக்கு மிகவும் பொருத்தமானவன். இவன் வில்லை வெல்ல வேண்டும். நாணேற்றி நிறுத்த வேண்டும். நம் சீதையை மணக்க வேண்டும். இந்த நல்ல தருணத்திற்காகத்தான் இவனுக்கு முன் வந்தவர்கள் யாராலும் நாணேற்ற முடியவில்லை போலிருக்கிறது. அவர்கள் தோற்றதும்தான் இப்போது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! திண்ணிய தோளும், அகன்ற திருமார்பும் கொண்ட இந்த ஆணழகனுக்காகவே காத்திருந்தது போலிருக்கிறது…’’


ஜனகபுரி மக்களின் எண்ண ஓட்டம் இவ்வாறிருக்க, அந்தப்புரத்தில் சீதையின் உள்ளமும் உடலும் பதறிக் கொண்டிருந்தன. ‘‘என் விழிகளை சந்தித்தவன் சிவதனுசைக் கையிலேந்தப் போகிறான் என்று   தோழியர் சொன்னார்களே, அது உண்மையாக இருக்க வேண்டுமே… அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த தனுசு அவனது சிவந்த, பரந்த கைகளுக்குள் குழைந்து நிற்க வேண்டுமே… குழைவதோடு, அவன் நாணேற்றும்போது மறுக்காமல், விரைக்காமல், விநயமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே… என் அன்பு சிவதனுசே, நான் பிறந்த நாள் முதல் உன்னை இந்த அரண்மனையில் பார்த்து கொண்டிருக்கிறேன். பாரம்பரிய வழக்கமாக உன்னை பூஜித்திருக்கிறேன். உன் பக்தையாக நான் உன்னை மலரிட்டு அலங்கரித்திருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே. என்னைக் கவர்ந்தவன் கைப்பிடிக்குள் இணக்கமாகிவிடு. அவனிடம் அடங்கிவிடு. என்னை உன் இளைய சகோதரியாக நினைத்துக்கொள். ஒரு அண்ணனாக, என் மனவிருப்பத்தை நிறைவேற்றி என் உயிரை நிலைக்கச் செய்…’’என்று சிந்தனையுடன் இருந்தாள்

சபையில் ஜனகனின் முகம் இறுகியது. அவனைக் கவலை சூழ்ந்து கொண்டது.நிபந்தனை விதித்து நாம் தான் தவறு செய்துவிட்டோமோ? சீதைக்குத தகுதியான மணாளனைத் தேர்ந்தெடுக்க இதை விட்டால் வேறு வழி இல்லையோ?

நலுங்கு மெட்டு ராமாயணம்

கருணையுள்ள ஜனகராஜன்

கவலைகொண்டு என்ன செய்வோம்

அருமையான புத்திரியை

ஆலவொரு தீரமான

மருமகனை அடைவதற்கு

மார்கமேதோ அறியிலையே

ஈசனிந்தக் கவலைதந்து

ஏனென்னை வருத்துகிறான்

நேசம்கொண்டவனேந்தன்

நெஞ்சக்குறை தீர்க்கவேண்டும். 

ஒரு காலத்தில் பெருமிதகாக நினைத்த இந்த வில் சீதையின் திருமணத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று நினைத்த ஜனகனின் மனதை இந்தப் பாடல் மூலம் விளக்குகிறார்.

 போதகம் அனையவன் பொலிவை நோக்கி, அவ்

வேதனை தருகின்ற வில்லை நோக்கி, தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல்மேயினான்
:

 குட்டி யானையைப்  போன்ற  ராமனின் அழகைக்  கண்டு (நோக்கி) இவ்வளவு அழகாக இருக்கும் ராமனுக்குத் தனது மகளை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற விருப்பத்திற்குத்  தடையாய்  இருக்கும் வில்லைப் பார்த்து (நோக்கி), பின் தனது மகளைக் கலக்கத்துடன் நோக்கிய ஜனகனின், மனத்தை நோக்கிய சதானந்தன் விஸ்வாமித்திரரை நோக்கினான். இங்கு எல்லா நோக்கிகளுக்கும் ஒரே பொருள்தான் ஆனால் அது அழகானது. சதானந்தரைப்  புரிந்துகொண்ட கௌசிக முனிவன் தனது கூந்தலை முடிவது போல ராமனை நோக்கினான். குருவின் பார்வையைப் புரிந்து கொண்ட ராமன் தனது இருக்கையை விட்டு எழுந்தான். இங்கும் கம்பன் ராமனின் எழும் அழகைக் கவிதையில் வடித்துள்ளான்.

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
அழிந்ததுவில்‘ எனவிண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள்முப் பகை வென்றார். 

வேள்வியில் வளர்க்கப்படும் நெருப்பில் நெய் ஊற்றும்போது எப்படி சிறிது சிறிதாக பொங்கி நெருப்பு மேல் எழுமோ அதுபோல ராமன் தன இருக்கையை விட்டு எழுந்தான் என்று கம்பன் கூறுகிறான். ராமன் வில்லை உறுதியாக முறிக்கப்போகிறான் என்பதைத் தெரிந்து கொண்ட தேவர்கள் ‘அமிழ்ந்தது வில்” என ஆரவாரம்  செய்தனராம். இராமன் வில்லை நோக்கி நடந்து சென்ற அழகை கம்பர் கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

மாக மடங்கலும்மால் விடையும்பொன்
நாகமும்நாகமும்நாண நடந்தான்.

பெரிய காளையும், பொன் மலையான மேருவும், யானையும் வெட்கம் அடையுமாறு சென்றானாம் ராமன். அதாவது இராமன் நடக்கும்போது அவனது பெருந்தோற்றம் கண்டு மேருமலையும். இவனைப் போல மிடுக்கோடு நடக்க முடியாமை பற்றிக் காளையும் யானையும் நாணினவாம்.

.ராமன் அந்த வில்லை எப்படி எடுத்தான். அதற்கும் கம்பன் அழகான உதாரணம் கூறுகிறான்.

தேட அரு மா மணிசீதை எனும் பொன்
சூடக வால் வளைசூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது‘ என்னஎடுத்தான்

பொன் வளையல்களை அணிந்த கிடைத்தற்கரிய  ரத்தினமாம் சீதைக்கு மலர்ந்த பூ மாலையைச் சூட்டுவது போன்று அந்த சிவதனுசை மெதுவாக கையில் எடுத்தான் ராமன் என்கிறான் கம்பன். மலர்ந்த மலர்களால் ஆன மாலை என்பதால் உதிர்ந்துவிடக்கூடும்  என்று கவனமாக எடுத்தான் ராமன் என்று நாம் பொருள்கொள்ளவேண்டும்.

இப்போது அந்த தனுசு ராமனைப் பார்த்து பேச ஆரம்பித்தது  ‘‘இது சும்மா சம்பிரதாயம்தான் ராமா. உனக்குத்தான்  சீதை  என்ற பாற்கடலிலேயே  முடிவாகிவிட்டதே. அதில் தவறு வருமா  என்ன?  சீதையை  அவளுடைய தகுதிக்குக் குறைந்தவன் எவனும் கரம் பற்றிவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தால் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் போட்டி. இதில் வெற்றி பெறுவதற்கென்றே நீ இருக்கும்போது, மற்றவர்கள் என்னைப் பற்றிடவும் நான் அனுமதிப்பேனோ..? அதனால்தான் யாரையும் என்னில் நாணேற்றிட நான் அனுமதித்ததில்லை. வா,  ராமா என்னை நீ ஆட்கொள்” என்றது.

ராமன் விஸ்வாமித்திரரைப் பார்த்தான். அவர் சம்மதமாய் தலையசைத்தார்.   ஜனகரைப் பார்த்தான். அவர் கண்களில் பேரார்வத்துடன் மலர்ந்திருந்தார். தனுசைப் பார்த்தான். அதில் சிவ அம்சத்தைக் கண்டு நமஸ்கரித்தான். ‘என் வெற்றிக்கு உதவுங்கள்” என்று மானசீகமாகக் கும்பிட்டான்  சுற்றி நின்றிருந்த அனைவரும் ராமன் வெல்வானோ, சீதையைக் கரம் பிடிப்பானோ என்றெல்லாம் கண்களில் ஆர்வம் மின்ன படபடக்கும் இதயத்துடன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தனுசைப் பார்த்து வணங்கிய தன் கரங்களைப் பிரித்தான் ராமன். தனுசின் நடுப்பகுதியைத் தன் இடது கையால் பற்றினான். அப்படியே தூக்கினான். மேடையிலிருந்து கீழே இறங்கினான். தனுசின் கீழ்ப் பகுதியை நாணின் ஒரு முனை பற்றியிருக்க அடுத்த முனையை இழுத்து மேல் பகுதியுடன் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதி தரையில் சறுக்கி நழுவிவிடாதிருக்க, தன் வலது பாதத்தால் அதைப் பற்றிக்கொண்டான். இணைக்கப்பட வேண்டிய நாண் முனையை வலது கையால் எடுத்தான். மேல்நோக்கி இழுத்துச் சென்றான்.தனுசின் மேற்பகுதி ராமனுடைய சிரசைத் தரிசித்தது. அவனுடைய முக அழகை ரசித்தது. இடுப்பு வரை அவனுடைய கம்பீரத்தைக் கண்டு பிரமித்தது. ஆனால், அவனது பாத அழகு எப்படி இருக்கும்? தன்னால் அந்த சௌந்தர்யத்தைப் பார்க்க முடியவில்லையே… ஆனால், கீழ்ப் பகுதிக்குதான் எத்தனை பெரிய பாக்கியம்! ராமன் தன் பாதத்தால் பற்றக்கூடிய பெரும் பேறு பெற்றிருக்கிறதே! இது அநியாயம். என்னில் ஒரு பகுதி என்னைவிட பெருமை அடைவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சிரம் பார்த்து, முகம் பார்த்து, மார்பழகு கண்டு, இடுப்பு எழில் நோக்கினாலும் பாதத்தைச் சரணடையும் பக்குவம் எனக்கு இல்லை என்று நினைத்தானோ ராமன்? மேல் பகுதிக்கு ஆதங்கம் தாங்கவில்லை. மாட்டேன், நானும் அண்ணலின் பாதம் பணிவேன். என்னையும் அவர் பாதம் ஸ்பரிசிக்க வேண்டும். எனக்கும் அந்தப் பேறு கிட்ட வேண்டும்… அப்படியே குனிந்தது மேல் பகுதி. கீழே… கீழே… குனிந்தது. ராமனின் பாதத்தைத் தானும் தொட்டுவிடும் வேட்கையில் குனிந்தது. தன்னை அவன் பாதம் தீண்டாவிட்டாலும், தானாக முயன்று தொட்டுவிட குனிந்தது. நாணை தனது வலது கரத்தால் பற்றி காதுவரை இழுத்தான்.

அவ்வளவுதான். பேரொலியுடன் இரண்டாக முறிந்து வீழ்ந்தது தனுசு. ஒன்றாக இருந்தபோது ராமனின் கரம் பற்றிய பேறு கொண்ட அந்த தனுசு, இப்போது இரண்டாகி அவன் பாதத்தைச் சரணடைந்திருந்தது

இவையெல்லாம் ஒரு நொடியில் முடிந்தன. எல்லோரும் ராமன்  கையில் வில்லை எடுப்பதைத்தான் கண்டனர். மறுநொடி வில் முறிந்தப் பேரொலியைக் கேட்டனர். இதைத்தான் கம்பர் இந்தப் பாடலில் சொல்கிறார்

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்
.

கம்பர், ‘எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ என்றாரே தவிரவில் உடையும் ஒலியை அவர் பதிவு செய்ய வில்லை. அந்தக் குறையை அருணகிரிநாதர் நீக்குகிறார்:

சிலை மொளுக்’ கெனமுறிபட
மிதிலையிற் சனகமனருள்
திருவினைப் புணரரி

– (திருவிடைக்கழி) திருப்புகழ்

(வில் மொளுக்‘ கென்று முறியமிதிலையில் ஜனக ராஜன் அருளின திருவாகிய சீதையை அணைந்த திருமாலின் மருகனே) !ராமர் அந்த வில்லை முறித்த போது மொளுக்கென்று சத்தம் கேட்டதாம். பல காலமாக யாராலும் அசைக்கக் கூட முடியாமல் இருந்த அந்த வில்மிகுந்த பலசாலியான ராமருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மொளுக்கென உடைந்து விட்டது. அது மட்டுமல்லஅந்த வில் படீர்’ என உடைந்தது- என்றால்ராமர் கொஞ்சமாவதுக் கஷ்டப்பட்டிருப்பார் என்று தோன்றும். ஆனால்அப்படி யல்ல… ராமர் மிகவும் சுலபமாக வில்லை முறித்தார். இதை நம் மனதில் பதிய வைக்கவே அருணகிரிநாதர், ‘மொளுக்’ என்ற வார்த்தையைப் போட்டார்.

கவிஞர் ஜவகர்லால்

உருவத்தால் அச்சுறுத்தும் வில்லை வீரர்
ஓரறுப தினாயிரம்பேர் இழுத்து வந்தார்;
பெருமன்னர் பலர்வில்லை வளைக்க எண்ணிப்
பலமிழந்து முதுகெலும்பு வளைந்து சென்றார்;
புருவத்தை வளைத்துவில்லை இராமன் பார்த்தான்;
‘படக்’கென்ற ஒலியினையே மற்றோர் கேட்டார்
புருவத்தின் வளைப்பாலே போதை யீந்த
பெண்ணழகின் வெறிமுன்னே வில்லா நிற்கும்?

தேவர்கள் பிரம்மாண்டம் பிளந்தது என்று நடுநடுங்கினர். சபையில் பலரும் மயங்கி விழுந்தனர்.தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். சமுத்திரம் முத்துக்களைத்தூவி ஆர்ப்பரித்தது. மிதிலை நகரத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து ஆனந்தக் கூத்தாடினர். முனிவர்கள் ஆசி வழங்கினர். ஜனக மன்னனோ என் நல்வினைப்பயனே இன்று ராமன் உருவில் வந்தது என்று மகிழ்ந்தார்.

கவிஞர் ஜவகர்லால்

மலர்பூத்து மகிழ்ந்தனவாம் மரங்க ளெல்லாம்;
மனம்பூத்து மகிழ்ந்தனராம் மிதிலை மக்கள்;
அலைபூத்து மகிழ்ந்தனவாம் நுரைகள்தூய
அகம்பூத்து மகிழ்ந்தனராம் சான்றோர்பொங்கும்
அலைபூத்த கமலத்தாள் நல்லோர் நெஞ்சின்
அடிபூத்த பெரியவனை மிதிலை மண்ணில்
நிலைபூத்து மணங்கொண்டு மகிழ்ந்த கோலம்
நெஞ்சுபூத்து நினைவாக்கிக் கொண்டார் மாந்தர்.

இதைப்பற்றி வால்மீகி என்ன சொல்கிறார்

வில்லின் வரலாற்றை சொன்ன ஜனகன் விஸ்வாமித்திரரிடம் “முனி புங்கவரே, ராஜ குமாரர்களுக்கு காட்டுங்கள். விஸ்வாமித்திரர் ஜனகர் சொல்லி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, -வத்ஸ, ராமா, தனு:பஸ்ய குழந்தாய், ராமா வில்லைப் பார்- என்றார். ப்ரும்மரிஷி சொன்னபடி, ராமர் வில் இருக்கும் இடம் வந்து, பெட்டியைத் திறந்து வில்லைப் பார்த்து சொன்னார். முனிவரே , இந்த புனிதமான வில்லை நான் கையினால் தொடட்டுமா? இதை தூக்கி, நாணைப் பூட்டவும் முயற்சி செய்கிறேன்- என்றார். அப்படியே செய் என்று முனிவரும், அரசனும் சம காலத்தில் சொன்னார்கள். முனி வசனத்தை ஏற்று, விளையாட்டாக, வில்லின் நடுவில் பிடித்து, நூற்றுக் கணக்கான அரசர்கள், மற்றும் பலர் பார்த்துக் கொண்டுஇருக்க, ரகுநந்தனன் விளையாட்டாக வில்லைத் தூக்கி நிறுத்தினார். நிறுத்தி வைக்கப்பட்ட வில்லில் நாணைப் பூட்ட முனைந்தார். நாணை இழுக்கவும் அந்த வில் நடுவில் முறிந்தது

. மகானான அந்த ராமனின்  கையில் இருந்து வில் முறிந்த சத்தம் மிகப் பெரியதாகக் கேட்டது. அந்த பெரும் ஓசையில் பூமி நடுங்கியது. மிகப் பெரிய பர்வதம் பிளந்ததோ,என்று இருந்தது. இந்த சத்தத்தினால் மூர்ச்சித்து விழுந்தவர் பலர். முனிவரரான விஸ்வாமித்திரரையும், ஜனக ராஜாவையும், இரண்டு ராஜ குமாரர்களையும் தவிர மற்றவர் அனைவரும் மயங்கினர். ஜனங்கள் சுய நினைவு திரும்பியதும், கவலை நீங்கிய அரசன் முனி புங்கவரிடம் சொன்னார். –பகவானே, ராமனுடைய வீரத்தைக் நான் கண்டு கொண்டேன். தசரதரின் மகனின், ஒப்பற்ற, மனதால் கூட எண்ணிப் பார்க்க முடியாத இந்த சிறுவனின் வீரம், நான் சற்றும் எதிர் பாராதது. தசரதன் மகனான இந்த ராமனைக் கணவனாக அடைந்து, என் மகள் சீதா, ஜனக வம்சத்திற்கே, மிகப் பெரிய புகழையும், பெருமையையும் தரப் போகிறாள். என் ப்ரதிக்ஞையும் நிறைவேறியது.  வெற்றி பெற்றவனுக்கே என் மகள் என்று நான் வைத்திருந்த பணயம் வென்றது. என் உயிருக்கும் மேலாக நான் அன்பு வைத்துள்ள சீதையை, என் மகளை ராமனுக்குத் தருகிறேன். முனிவரே  அனுமதி தாருங்கள். மந்திரிகள் சீக்கிரம் கிளம்பிச் செல்லட்டும். அயோத்தி நோக்கி ரதங்களில் செல்லட்டும். கௌசிகரே, உங்களுக்கு மங்களம். ராஜாவை தகுதியான வார்த்தைகளைச் சொல்லி, மந்திரிகள் என் ஊருக்கு அழைத்து வரட்டும். ராமன் தன் வீர்யத்தால் வெற்றி கொண்ட கன்னியைத் தருகிறேன் என்ற கதையை விவரமாக சொல்லுங்கள். 

இப்போது துளசிதாசர் சொல்வது

ராமரும் லக்ஷ்மணனும் விஸ்வாமித்திரருடன் அரச மண்டபத்தை அடைந்தனர். அங்கு பல தேசத்து மன்னர்கள் இருந்தனர். அவர்கள் ராமனின் அழகைப் பார்த்தவுடன் சந்தேகமே இல்லாமல் சிவ தனுசை முறித்து சீதைக்கு மாலையிடுவான் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஜனகன் சீதையை அழைத்து வரும்படி உத்திரவிடுகிறான். தோழியர் சீதையை அழைத்து வருகின்றனர். கம்பனைப்போல் துளசி தாசரும் சீதையின் அழகை பல சௌபாயிகளில் சொல்கிறார்.

सिय सोभा नहिं जाइ बखानी। जगदंबिका रूप गुन खानी
उपमा सकल मोहि लघु लागीं। प्राकृत नारि अंग अनुरागीं 

एहि बिधि उपजै लच्छि जब सुंदरता सुख मूल
तदपि सकोच समेत कबि कहहिं सीय समतूल

भूषन सकल सुदेस सुहाए। अंग अंग रचि सखिन्ह बनाए
रंगभूमि जब सिय पगु धारी। देखि रूप मोहे नर नारी2

பல இடங்களில் துளசி தாசரின் கருத்துகள் கம்பரின் கருத்துக்களை ஒத்திருக்கின்றன. சபைக்கு வந்த சீதை ராமரைக் கண்டதும் விழிகள் அங்கேயே தங்கிவிட்டன. கம்பர் சொன்னதைப் போலவே துளசிதாசரும் ‘இந்த மன்னனுக்கு புத்தி கெட்டுப் போய்விட்டது. கடவுளே! எந்த வித யோசனையோ நிபந்தனையோ இல்லாமல் சீதையை ராமனுக்கு திருமணம் செய்து வைக்கும்படி மன்னனின் மனதை மாற்று என்று மக்கள் வேண்டிக்கொண்டதாக சொல்கிறார்.

மன்னன் தனது நிபந்தனையை அறிவிக்க மன்னர்கள் வில்லை வளைக்க முயன்று தோற்றுப் போகின்றனர். ஜனகனுக்குக் கவலை ஏற்பட்டது. ‘பிரம்மனே இந்த வில்லை வளைக்கும் ஒரு வீரனை  நீ இந்த பூமியில் படைக்கவில்லையா? என்று சபையில் குரல் கொடுக்கிறார்.  என் ஜானகியின் வாழ்வில் திருமணம் என்று ஒன்று கிடையாதோ” என்று சோகத்தில் மூழ்குகிறான்.

அதைகேட்ட லக்ஷ்மணன் கொதித்து எழுகிறான். ‘எங்கள் ரகு வம்சத்தில் இல்லாத வீரர்களா’ ஆணையிடுங்கள் இந்த வில்லை நான் முறிக்கிறேன்’ என்று உரைக்கிறான். விஸ்வாமித்திரர் லக்ஷ்மணனை அமைதிப்படுத்தி ராமனிடம் வில்லை வளைக்குமாறு பணிக்கிறார்.

முனிவரின் ஆணையை கேட்ட ராமன் சிங்கம் போல எழுந்ததாக துளசிதாசர் சொல்கிறார்

सुनि गुरु बचन चरन सिरु नावा। हरषु बिषादु  कछु उर आवा
ठाढ़े भए उठि सहज सुभाएँ। ठवनि जुबा मृगराजु लजाएँ

ராமன் வில்லின் அருகில் சென்று தனது முன்னோர்களையும் தேவர்களையும் நமஸ்கரித்தான்.  அங்கு அமர்ந்து இருந்த சீதையோ பார்வதி தேவியிடம் ராமனுக்கு வில்லை ஒரு கரும்பை முறிப்பது போல முறிப்பதற்கு உதவி செய்யவேண்டும் என்று  வேண்டுகிறாள். சீதையின் கவலை தோய்ந்த முகத்தை ராமன் பார்க்கிறான், 

வில்லைக் கையில் எடுத்தான். ஒரு மின்னல் . ஒரு சத்தம். வில் ஒடிந்து விழுந்தது.

                             लेत चढ़ावत खैंचत गाढ़ें। काहुँ  लखा देख सबु ठाढ़ें

तेहि छन राम मध्य धनु तोरा। भरे भुवन धुनि घोर कठोरा

 கம்பரைப் போலவே துளசிதாசரும் ராமன் அந்த வில்லை எப்போது எடுத்தான் எப்போது வளைத்தான் என்று எவரும் கண்டிலர் என்று எழுதுகிறார்.

வெற்றிச் செய்தியை சீதையிடம் அறிவித்தல்

பதைபதைப்புடன் காத்திருக்கும் சீதையிடம் ராமன் வில் முறித்த செய்தியை பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை கீழே எடுத்துரைக்கிறார்.

 “மணவில்லை வீரன் இறுத்தான் என்னும் செய்தியைச் சீதையிடம் அறிவிக்குமாறு நீலமாலை யென்னும் தோழி விரைந்தோடிச் செல்கின்றாள். ஆடையும் அணிகளும் அலைந்து குலையக் கன்னிமாடத்தை யடைந்த நீலமாலைவழக்கம் போல் அடிபணிந்து அடங்கி நில்லாதுஅளவிறந்த மகிழ்ச்சியால் ஆடுகின்றாள். பாடுகின்றாள். மதுவுண்டவள் போல் களித்தாடும் மாலையை நோக்கி, ‘கந்தரிஎன்ன நிகழ்ந்ததுசொல்‘ எனச் சீதை வினவுகின்றாள். வில்லொடிந்த செய்தியை நேராகக் கூறாதுநீலமாலை நெடுங்கதை நிகழ்த்துகின்றாள். மாதரசிதசரதன் என்னும் பெயர் வாய்ந்த மன்னன் ஒருவன் உள்ளான்அவன் கரிபரிதேர்காலாள் என்னும் நால்வகைச் சேனையுடையான்சிறந்த கல்வி கேள்வியுடையான் நீதிவழுவாத நிருபன். மாரி போல் வழங்கும் வள்ளல். அன்னவன் மைந்தன் அனங்கனையும் வெல்லும் அழகுடையான்மரா மரம் போல் வலிய தோளுடையான்திருமாலின் குறியுடையான். இராமன் என்னும் பெயருடையான். அவன் தம்பியோடும் முனிவரோடும் நம் பதி வந்தெய்தினான். திரிபுரமெரித்த புனிதன் எடுத்த வரிசிலையைக் காண விரும்பினான். வில்லை எடுத்து வருமாறு நம் மன்னன் பணித்தான். அது வந்தடைந்தது. முன் பழகியவன் போல் நொடிப் பொழுதில் அதனை எடுத்தான். வளைத்தான். கண்டோர் நடுங்குற வரிசிலை முறிந்து வீழ்ந்ததுஎன்று சொல்லி முடிக்கின்றாள்.இவ்வாறு நீலமாலை நெடுங்கதை நிகழ்த்தும் பொழுது  சீதையின் மனம் ஊசலாடுகின்றது. முனிவனோடும் தம்பியோடும் போந்த தசரத ராமன் மணவில்லை இறுத்தான் என்று நீலமாலை கூறுகின்றாள். ” வில்லை வளைக்கும் திறல் வாய்ந்த வீரனுக்கு என்னை மணஞ்செய்து கொடுப்பதாக வாய்மை தவறாத மன்னன் வாக்களித்துள்ளான். இன்று வில்லை யிறுத்த வீரன் நான் வீதிவாய்க் கண்டு காதலித்த தலைமகனோ? அன்றி வேறொருவனோ? முனிவனோடு வந்த மேக வண்ணன், தாமரைக் கண்ணன், சிலையை ஒடித்தான் என்று தோழி கூறினாள். ஆம், நான் கண்ட காதலனே அவன்!” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ? அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன்? நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனும் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன்! “ என்று உறுதி கொள்கின்றாள்.”

 வில்லை யொடித்தமையால் மிதிலை மன்னன் மங்கையை மணத்தற்குரியனாய இராமன் மாளிகையில் விருந்தின னாயிருக்கின்றான். மண மகனாக அனைவராலும் மதிக்கப்படுகின்றான். எனினும் அவன் உள்ளம் அமைதியுறவில்லை; வில்லிறுத்ததன் பயனாகப் பெற்ற மங்கை, மேடையிலே கண்ட மாதோ, அல்லளோ என்னும் ஐயத்தால் அலமருகின்றது. அம் மங்கையை நேராகக் கண்டாலன்றி ஐயம் தீருமாறில்லை எனக் கருதி அவ்வேளையை எதிர்பார்க்கின்றான்”

தசரதனுக்குச்  செய்தி அனுப்புதல்

ஜனகன் பேருவகை கொண்டான். சிவதனுசை வளைக்க யார் வருவார் என்று காத்திருந்து இப்போது இராமன் வில்லை முறித்தவுடன் அவனுக்குச் சீதையின் திருமணத்தை உடனே முடித்துவிட வேண்டுமென்று அவசரம். கெளசிக முனிவரை நோக்கி “முனிவர் பெருமானே, இராமன் சீதை திருமணத்தை இன்றே முடித்து விடலாமா? அல்லது முறைப்படி தசரத சக்கரவர்த்தியை அழைத்து, நாடெங்கும் திருமணச் செய்தியை முரசு அறைந்து அறிவித்துவிட்டு உரியவாறு நடத்தலாமா, தங்கள் கருத்து யாது?” என்று கேட்டான். அதற்கு முனிவர் சொன்னார்: ” தசரத சக்கரவர்த்திக்கு செய்தி அனுப்பி, அவரை வரவழைத்துத் திருமணம் செய்வதே முறை, நீ அப்படியே செய்” என்று சொன்னதும், ஜனகன் தூதர்களை அயோத்திக்கு அனுப்பி, இங்கே நிகழ்ந்தவற்றைத் தசரத சக்கரவர்த்தியிடம் கூறி, அழைத்து வரும்படி ஓலை கொடுத்து அனுப்பினான். தூதுவர்கள் அயோத்தி சென்று மன்னனைக் கண்டு செய்தியைக் கூறினர். மன்னன் தூதர்களின் ஓலையை வாசிக்கச் செய்து கேட்டான். குலகுரு வசிஷ்டர் மகிழ்ந்து மன்னனிடம் ‘நான் விஸ்வாமித்திரருடன் ராமனை அனுப்பும்போதே “ராமனுக்கு இதனால் பல நன்மைகள் நடக்கும் என்று சொன்னேனல்லவா?’ என்றார் 

தசரதனுக்கு மிக்க மகிழ்ச்சி. முரசறைந்து நாட்டு மக்களுக்கு இந்தச் செய்தியை தெரிவித்தான். மக்கள் மகிழ்ந்தனர். தசரதன் தனது படை, மக்கள் அந்தணர்களுடன் மிதிலைக்குப் புறப்பட்டான். ஜனகனைச் சந்தித்தான் .மறுநாள் திருமணம். நகரமே விழாக்கோலம் பூண்டது.

ராமன் தனது தம்பியருடன் திருமண மண்டபத்திற்குப் புறப்பட்டான். வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம். குறிப்பாக பெண்கள்.  சிலபெண்களின் கண்கள் அவன் தோளில் ஆழ்கின்றன. சில பெண்களின் கண்கள் அவன்  தாளில் வீழ்கின்றன..

கம்பனைத் தவிர வேறெந்தக் கவிஞனாலும்   வரைய முடியாத காவிய வரிகள்! 
"தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே!"
 

மலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள் மலைத்துப் போகும்! நிலைகுலைந்த நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்! இராமனின் தோள் சேரும் பேறு சீதைக்கு மட்டுமே என்றாலும் வாராதோ தங்களுக்கும் அப்பேறு என்ற ஏக்கம்! விளைவுபதிந்த இடத்தை விட்டு நகர மறுக்கும் விழிகள் – உள்ள(த்)தைப் பகர முடியாத மொழிகள்! புவனமே புரண்டெழுந்து வந்தாலும் அவர்கள் கவனம் என்னவோ அவனின் தோள் மீதுதான்!

வேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் :கல்லையும் பெண்ணாய்க் கனிய வைத்தனவாமே காகுத்தனின் கமலப் பாதங்கள் - இப்போது
தங்களையும் அப்படிச் செய்யுமா, தங்கள் வாழ்வும் விமோசனம் பெற்று உய்யுமா? பாவப்பட்ட பெண்கள் அங்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு தாள் கண்டார் தாளே கண்டார்!

நிச்சயதாம்பூலம்

 அது திருமண நிச்சயதார்த்த நிகழ்வு. வந்தவர்எல்லோரையும் ஜனகன் வரவேற்றான்.சீதையை அழைத்து வரும்படி  வசிஷ்டர் கேட்டுக்கொண்டார். பணிப்பெண்கள்  சீதைக்கு அலங்கரித்ததை பல பாடல்களால்வர்ணித்துள்ளார் கம்பர்  
 

அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு

அணி என அமைக்குமா போல்
உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை

உருவினை மறைப்பது ஓரார்
அமிழ்தினைச். சுவை செய்தென்ன

அழகினுக்கு அழகு செய்தார்
இமிழ் திரைப் பரவை ஞாலம்

ஏழைமை உடைத்து மாதோ”.)

அழகிய கண்களை மூடி மறைக்கின்ற இரண்டு இமைகளைஅக்கண்களுக்கு அழகு தருவன! எனப் படைக்கப்பட்ட விதத்தைப் போலசீதையின் அழகு மேனியை ஒளிவீசும் அணிகலன்கள் மறைக்கின்றன! என்பதை அறியாதவர்களாகச் சீதையின் தோழியர்அமுதத்திற்கு இனிமை சேர்ப்பதைப் போலஇயற்கையிலேயே அழகான சீதைக்கு அணிகலன்களின் மூலம் செயற்கை அழகினைச் சேர்த்தார்கள். சீதையின் அழகைக் கண்டு எல்லோரும் அதிசயித்தனர்:

 

நலுங்கு மெட்டு ராமாயணம்

மாணிக்கச் சுடர்போல்

மாதேவி ஜானகியாள்

காணுமொரு அதிசயமும்

கண்டுமிக மனங்களித்துப்

பொன்சிலையோ?

மான்கொடியோ?

பூங்கிளையோ?

பூமகளோ?

என்சொல்வோம் ஜானகியை

என்றுபல ரதிசயித்தார்

சீதை அங்கிருந்து கிளம்பி மண்டபத்தைஅடைந்தாள். அவள் அழகை கம்பன் சொல்லும் பாடல் 

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் 
 

சபையில் எல்லோரையும் வணங்கி சீதை தனது தந்தை  ஜனகனின் அருகே அமர்ந்தாள். கன்னி மாடத்தில் தொலைவில் இருந்த ராமனைக் கண்டபிறகு இன்று தான் முதன்முறையாக  இருவரும் நேரில் சந்தித்தக் கொள்கின்றனர். அன்று வில்லை முறித்தவனின் அங்க அடையாளங்களை தோழி நீலமாலை சொன்னபோதும் ஒரு வித சந்தேகத்தில் இருந்த சீதைக்கு இன்று ராமனை நேரில் கண்டதும் இவன்தான் நீல மாலை சொன்ன அந்த இளவரசன் என்று தெரிந்து கொண்டு நிம்மதி அடைந்தாள். எனினும் தனது கைவளையல்களை சரி செய்வது போல மீண்டும் மீண்டும் ராமனைப் பார்க்கின்றாள்,

இது போல ராமன்,  சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் தொகுக்கிறார் கம்பர்

அன்னவளை அல்லள் எனஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்

சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரைராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம். ‘நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும்இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானாஇல்லையா?’ என்று தவிக்கிறான். இப்போதுஅவளை நேரில் பார்த்தாகிவிட்டது. அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான்

அங்கு தசரதனின் முன்னோர்களைப்பற்றிய விவரங்களுடன் கூடிய  லக்ன பத்திரிகையை வசிஷ்டர் படிக்க இங்கு ஜனகனின் முன்னோர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய லக்ன பத்திரிகையை சதானந்தர் படிக்க மறுநாள் திருமணம் என்ற அறிவிப்புடன் நிச்சயதார்த்த விழா நிறைவுகிறது. 

சீதா கல்யாணம்

உடனே ஜனகன் மகிழ்ச்சியுடன் சீதைக்குநாளை திருமணம்’ என்று அறிவித்தான், ‘ஆகவேஇந்த அழகிய மிதிலா நகரத்தைப் பூக்கள்சிறந்த மணிகள்ஆடைகளைக் கொண்டு மேலும் அலங்கரியுங்கள்’ என தன் மக்களுக்கு ஆணையிட்டான்.

 .

உடனடியாகமிதிலை நகரம் அருமையாக அலங்கரிக்கப்பட்டது. அப்போது அந்த ஊரில் நிலவிய செல்வச் செழிப்பையாரும் ஓர் இடத்தில் பார்த்திருக்கவே முடியாதுஅவ்வளவு ஏன்உலகில் இத்துணைச் செல்வம் இருக்குமா என்று மனத்தால் கற்பனை செய்வதுகூட சிரமம்.

சீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம்முந்நாளில் மயன் என்ற சிறந்த தச்சனால் செய்யப்பட்டது. ஆனால்இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தைப்போல் அது தெரிகிறது. ஏன்?

அந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர்அவர்களுடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால்அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.

அங்கே பெண்கள் பலர் கூடியுள்ளனர்அவர்களது இடையைப் பார்க்கும்போதுமின்னல்கள் உள்ளன எனலாம்.

பல அரசர்கள் வந்துள்ளார்கள்அவர்களெல்லாம் பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.

இந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளனஇவர்களெல்லாம் சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்தசரதனும்ஜனகனும் அங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளனர். இவர்கள் சூரியசந்திரர்களைப்போலத் திகழ்கிறார்கள்.

இப்படி மேகம்நட்சத்திரம்மின்னல்சூரியன்சந்திரன் எல்லாம் உள்ள இதுஉண்மையில் அயன் படைத்த அண்டமாஅல்லது மயன் செய்த மண்டபமா?

சிறந்த மன்னவர்களின்  நடுவேகொற்றவன் தசரதன் வீற்றிருக்கிறான். அப்போதுமாப்பிள்ளை ராமன் தேரேறி வருகிறான்! மண்டபத்தினுள் நுழைகிறான்.

பகைவர்கள்மீது கோபத்தைச் செலுத்துகிற வில்லைப் பயன்படுத்துவதில் சிறந்தவன் அந்த ராமன்இப்போது திருமண அலங்காரங்களுடன் அவனைப் பார்க்கும்போதுமேரு மலையில் சூரியன் உதித்ததுபோல் இருக்கிறது!

ராமன் மட்டுமா? சீதையும் மலையில் உதிக்கிற பிரகாசத்துடன்தான் வருகிறாள்!

சீதையின் உடல்சிவந்தபொன் போன்ற ஒரு பூக்கொம்பு. புருவங்கள்இரு வில்கள்அவற்றுக்குக் கீழேகண்களாக இரண்டு கயல் மீன்கள்முகம்ஒளி நிறைந்த சந்திரனைப்போல.

இப்படிப்பட்ட சந்திரனுக்கு மத்தியில் ஒரு முல்லை அரும்பு மலர்ந்தால் எப்படி இருக்கும்அப்படி ஒரு புன்சிரிப்பு சீதையின் முகத்தில்!

முன்பு ஒருநாள்அலைகள் நிறைந்த பாற்கடலில் தோன்றிய திருமகள் அவள்இப்போது பூமியில் சீதையாகப் பிறந்திருக்கிறாள்தேர் மேல் ஏறிகிழக்குத் திசையில் உள்ள மண்டபத்தில் வந்தாள்!

முதலில்இந்திரன் தன்னுடைய மனைவியாகிய இந்திராணியுடன் வந்தான்!

அடுத்துதலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான்தன் மனைவி உமையுடன் வந்தான்!

பின்னர்தாமரை மலரில் வாழும் பிரம்மன்தன் மனைவியாகிய சொல்லரசிசரஸ்வதியுடன் வந்தான்!

இந்திரன் சசியொடும் எய்தினான், இளம்
சந்திரன் மௌலியும் தன் தையலாளுடன்
வந்தனன், மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே!

ராமனும், சீதையும் திருமண மேடையில் ஏறிவிட்டார்கள். அவனோ, வெற்றியையும் பெருமையையும் உடைய வீரன். அவளோ, அவனது அன்புக்கு உரியவள், இனிய துணையாகத் திகழும் அன்னம். இவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்கும்போது, போகமும் யோகமும் ஒன்றாகச் சேர்ந்துவந்தாற்போல் இருக்கிறது.

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.

சக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு எதிரே வந்து நின்ற ஜனகன், அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்துச்  சீதையைத் கன்னிகாதானம்  செய்துகொடுத்தான்.

’பரம்பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளையும்போல, என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க!

கோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்
’பூமகளும் பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்.

வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்,
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்

வலம்கொடு தீயை வணங்கினர்வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்துஎதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்

நலுங்கு மெட்டு ராமாயணம்

சீதையை ஸ்ரீராமனுக்கும்

சிறு பெண்களை அனுஜருக்கும்

ஒதும்வேத விதிப்படியே

உண்மையாகத் தாரை வார்த்து

மேதினியில் புகழடைந்தான்

மெய்ஞ்ஞான ஜனகராஜன்

பேதமிலாத் தசரதனும்

பெருமையுடனே

கலந்துகொண்டான்

மங்களவாத் தியமுழங்க

வானவர் பூமழைபோழியப்

பொங்கும் அக்னி சாட்சியாகப்

பொருந்து மிகச்சிறந்தான்

மங்கல்யாதி தரித்துடனே

மனதைக்கிய பாணிக்கிரகம்

பாங்குடனே நடந்துமனம்

பரிபூர்ண மானதன்மேல்…..    

வீரனாகிய ராமன், திருமணத்துக்குரிய மந்திரங்கள் முழுவதையும் சொன்னான், சூடான நெருப்பில் நெய் ஊற்றித் திருமணத்துக்குரிய ஹோமங்களை முறைப்படி செய்து முடித்தான். தளிரைப்போல் மென்மையான பெண்ணாகிய சீதையைக் கைபிடித்துப் பாணிக் கிரகணம் செய்துகொண்டான் இருவரும் அக்னியை வலம் வந்தனர்.பொரி இட்டு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சீதையின் கழுத்தில் மங்கள நாண்  பூட்டினான்.

இங்கு வால்மீகி என்ன சொல்கிறார்

வசிஷ்டரும், விச்வாமித்திரரையும், சதானந்தரையும் உடன் அழைத்துக் கொண்டு வேதியை கந்த புஷ்பங்களால் அலங்கரித்து, நீர்முதலியவைகளை கொண்டு முறைப்படி வேதியை தயார் செய்து, சுவர்ணபாலிகைகளும், துவாரம் உள்ள கும்பம்,முளை கட்டிய பயிர்களுடனும், முளை வந்த பயிர்கள் உள்ள பாத்திரங்கள், தூ4ப பாத்திரங்கள் தூ4பத்துடனும், சங்க பாத்திரம்,அர்க்யம் நிரம்பிய பாத்திரத்தில் கரண்டிகள், பொரி நிரம்பிய பாத்திரங்கள்,நன்றாக தயாரிக்கப்பட்ட அக்ஷதைகள், இவைகளுடன் தர்ப்பங்களை சமமாக பரப்பி மந்திரங்கள் சொல்லி, வேதியில் அக்னியை வளர்த்து, முறைப்படி அக்னியில் ஹோமம் செய்தார், வசிஷ்ட மகா முனிவர். பிறகு எல்லாவிதமான ஆபரணங்களையும் அணிவித்து, சர்வாலங்கார பூஷிதையாக சீதையை அழைத்து வந்து, ராகவனான ராமனுக்கு எதிரில், அக்னிக்கு முன்னால் நிறுத்தி, ஜனக ராஜா சொன்னார்.

इयम् सीता मम सुता सह धर्म चरी तव || १-७३-२६
प्रतीच्छ च एनाम् भद्रम् ते पाणिम् गृह्णीष्व पाणिना

இந்த சீதை , என் மகள், உன் சகதர்மிணியாக இருப்பாள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவளை ஏற்றுக் கொள். இவள் கைகளை உன் கைகளால் பற்றிக் கொள் என்று சொல்லி, பதிவிரதையாக, நல்ல அதிர்ஷ்டம் நிரம்பியவளாக, எப்போதும் உன் நிழல் போல உன்னையே அனுசரித்து வாழ்வாள் என்று சொல்லி, மந்திரம் சொல்லி பவித்திரமான ஜலத்தை விட்டார். இந்த இயம்  சீதா மம சுதா என்பதற்கு ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் விளக்கங்கள் அளித்துள்ளனர்.

திரு வேளுக்குடி ஸ்வாமிகள் இதற்கு புதிய விளக்கம் சொல்லுகிறார்:

ஸ்ரீவால்மீகி பகவான், ஸீதா கல்யாணத்தை ஒரே ஒரு ஸ்லோகத்தில் முடித்து விட்டார். அந்த ஸ்லோகம் மிகவும் அருமையானது; மிக ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியது.



“ இயம் ஸீதா மம சுதா சஹதர்ம கரீசி தவ |
ப்ரதிச்ச ச ஏனம் பத்ரம் தே பாணீன க்ருஹநீஷ்வ பாவீனா ||
[1.73.26]

இயம் = இது, this
மம = என்னுடைய, mine
தவ  = உன்னுடைய, yours

என்ற மூன்று வார்த்தைகளும் மிக ஆழமான அர்த்தங்கள் கொண்டவை.

இயம் ஸீதா = இது ஸீதா (வேறு யாரோ என்று எண்ணி விடாதே.)

மம சுதா (Mama Sutaa) = என்னுடைய பெண் (அழுத்தமாக ஜனகர் சொல்லுகிறார் – என்னுடைய
  பெண்.)

தவ = உன்னுடைய;   சஹதர்ம = எல்லா தர்ம காரியங்களிலும்
கரீசி = உடன் இருப்பாள்.

என்ன ஒரு அர்த்தமுள்ள  அறிமுகம் !!சீதையை ராமருக்கு ஜனகர்  கன்யாதானம்  பண்ணிக் கொடுக்கவில்லை. Siitaam Dadaami என்று சொல்லவில்லை. ஏன்? சீதாதான் மஹாலக்ஷ்மி. மஹாலக்ஷ்மியும் பகவானும் இந்நாள் வரை பிரிந்து இருந்தார்கள். இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள். அவள் பகவானின் சொத்து. அத்தாயை  இதுவரை ஜனகர் போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தார், பகவான் மீண்டும் வந்ததும் அவரிடமே அவர் சொத்தை திருப்பிக் கொடுக்கத்தான் இந்த திருமணமே. பகவானின் சொந்த பொருளை ஜனகர் எப்படி ”கன்யாதானம்” பண்ணிக் கொடுக்க முடியும்?


எனவே ஜனகர் கூறுகிறார் — ப்ரதிச்ச ச ஏனம் – இவளை மீண்டும் மனப்பூர்வமாக எடுத்துக் கொள்; பத்ரம் தே = (இவள் உன்னுடன் இருக்கும்போது) நீ பத்திரமாக, பாதுகாப்பாக இருப்பாய். பாணீன க்ருஹநீஷ்வ பாவீனா – உன் கையால் இவளது கரத்தைப் பற்று. பாணிக்கிரஹணம்.

இதற்க்கு சமமான பாடல் மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் பாடியுள்ளார்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று,
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்,
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க,
எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க,
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க,
இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு, ஏலோர் எம்பாவாய்
.

எங்கள் தலைவனே! உன் கையில் சேர்க்கப் பெறும் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற அந்தப் பழமொழியை மீண்டும் சொல்வது பொருத்தமன்று என்று தெரிந்தும், எங்கள் அச்சத்தால் அதனையே சொல்கிறோம். எங்கள் இறைவனாகிய உனக்கு நாங்கள் சொல்வது ஒன்று உண்டு. எங்கள் உடல் உன் அன்பர்கள் அல்லாதார்க்கு உரிமையாக வேண்டாம். எங்கள் கைகள் உன்னையன்றி வேறு ஒருவருக்கும் தொண்டு செய்ய வேண்டாம். எங்கள் கண்கள் இரவிலும் பகலிலும் உன்னையன்றி வேறு ஒரு பொருளையும் காணாதிருக்க வேண்டும். இவ்வுலகத்தில், எங்கள் அரசனாகிய நீ, இவ்வாறே எங்களுக்கு அருள் செய்வாயானால், கதிரவன் கீழ்த்திசையிலன்றி வேறு எந்தத் திசையில் உதித்தால் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம்!

ராஜ ராஜ சோழன் படத்தில் வரும் பூவை செங்குட்டுவன் எழுதிய பாடலை இங்கு நினைவு கூர்வோம்.

உன் கையில் என் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை இன்று நம் மன்னன் கொடுத்தான்

மன்றத்தில் மணம் முடித்து மகிழ்வோடு சீர்க்கொடுத்து
மணமகன் கைப்பிடித்து தன் மனதையும் சேர்த்தெடுத்து
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை இன்று நம் மன்னன் கொடுத்தான்

துளசிதாசர் சொல்வது

ராமன் வில்லை வளைத்ததைக் கண்ட சபையிலிருந்த எல்லோரும் மகிழ்ந்தனர். சதானந்த முனிவர் சீதையை ராமனுக்கு மாலையிடச் சொல்லுகிறார். சீதைக்கு ஒரு புறம் மகிழ்ச்சி ஒரு புறம் நாணம். மெதுவாக நடந்து வந்து ராமனுக்கு மாலை சூடுகிறாள். வில்லை வளைக்க முடியாமல் தோற்ற அரசர்களுக்கு கோபம் ஒருபுறம் அழகான சீதையை அடைய முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு புறம். அவர்கள் எல்லோரும் நாம் ராமனை வென்று சீதையை தூக்கிச் செல்வோம் என்று கொக்கரிக்கின்றனர். இதைக் கண்ட சீதை பயத்துடன் தனது தாயிடம் ஒதுங்கினாள். ராமனும் லக்ஷ்மணனும் அந்த மன்னர்களை கோபத்துடன் பார்த்தனர். அப்போது அங்கு ஒரு சலசலப்பு. திடீரென்று பரசுராமர் உள்ளே நுழைந்தார். பரசுராமரைக் கண்ட மன்னர்கள் புறமுதுகிட்டு வெளியே ஓடினர். பரசுராமருக்கும் ராமருக்கும் வாதம் நடந்தது. இதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். ராமன் பரசுராமரின் செருக்கை அடக்க, பரசுராமர் ராமன் சீதை இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு வெளியேறினார்.

விஸ்வாமித்திரர், சதானந்தர் இருவரும் ஜனகனிடம் தசரதனுக்குச் செய்தி தெரிவித்துத் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்படி பணிக்க ஜனகரும் அவ்வாறே செய்தார். தசரதரும் தமது சுற்றத்தினர், பரிவாரங்களுடன் வந்து சீதையின் திருமணத்தில் கலந்து கொண்டனர். ராமன் சீதையை பாணிக்ரகணம் செய்துகொண்டான்.

அப்போதுஎங்கும் இனிய முழக்கங்கள் கேட்டனபேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தனநான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவினவானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள்பலவிதமான நூல்களும் மகிழ்ந்து கூவினபெண்கள் பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டதுவண்டினங்கள் சத்தமிட்டனகடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது!

கவிஞர் ஜவகர்லால்

கண்டவர்கள் விண்டுரைக்க மாட்டா ராகிக்
கைச்சாடை முகச்சாடை காட்டி னார்கள்;
கொண்டார்கள் மணக்கோலம்; தாமே பேசிக்
கொள்ளைபோன நெஞ்சத்தைத் தேடி னார்கள்;
விண்டார்கள்; வாயுரைத்த சொற்க ளெல்லாம்
வெறுஞ்சொற்க ளாகிடவே மயங்கி னார்கள்;
கண்டார்கள் விண்ணுலக மணக்கோ லத்தைக்;
கமலமகள் மாயவனை இணையக் கண்டார்.

கண்ணிரண்டு போதாமல் அள்ளிக் கொண்டு
கருத்துக்குள் குவித்தார்கள்; மணக்கோ லத்தை
எண்ணிமனம் நிறையாமல் ஏங்கி யேங்கி
எங்கெங்கோ திரிந்தார்கள்; இருண்ட மேக
வண்ணனவன் பொன்மேனி இணையக் கண்டு
வாழ்க்கையது நிறைந்ததென்றே ஆர்த்து நின்றார்.
எண்ணமெலாம் நிறைந்திட்ட இருவர் தம்முள்
இணைந்தகோலங் கண்டுமனம் மகிழ்ந்தார் மக்கள்.

 அதே நேரத்தில் அதே மண்டபத்தில் லக்ஷ்மணன் ஜனகனின் இன்னொரு மகளான ஊர்மிளையைத் திருமணம் செய்துகொண்டான். ஜனகனின் சகோதரின் மகள்களான மாண்டவியையும், ச்ருதகீர்த்தியையும் முறையே பரதனும், சத்ருக்கணனும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆர்த்தன பேரிகள்ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நான்மறைஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல்கலைஆர்த்தன பல்லாண்டு,

இத்துடன் சீதா கல்யாணம் நிறைவுற்றது. இதைப்படித்தவர் அனைவரும் எல்லா நலனும் பெறவேண்டும் என்று அன்னை சீதா மற்றும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வேண்டுகிறேன்.  அடுத்து பரசுராம படலத்துடன் இத்தொடர் நிறைவுறும். படித்த அனைவருக்கும் எனது நன்றி.