Monthly Archives: நவம்பர் 2020

அகலிகை சாப விமோசனம்

பதிவின் வடிவம்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்

அகலிகை சாப விமோசனம்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

வணக்கம். எல்லோரும் ராமாயணத்தில் விஸ்வாமித்திரரின் பங்கை விவரிக்கும் கட்டுரையில், சென்ற முறை  தாடகை வதம் பற்றிப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தக் கட்டுரையில் அகலிகையின் சாப விமோசனம் பற்றி மூன்று ராமாயணங்கள் போக நான் தெரிந்து கொண்ட விஷயங்களை எல்லாம் தொகுத்தளித்துள்ளேன்.  இதில் அகலிகை வெண்பா என்னும் குறுங்காப்பிய ஆசிரியர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்(1857-1046), சா.து. சுப்பிரமணிய யோகியார், ஆகியோரின் படைப்புகளிருந்து கருத்துக்களும், மற்றும் விகடன் இதழிலிருந்து கருத்துக்களும்   இடம் பெற்றுள்ளன அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுபாகு வதம்

தாடகை வதம் முடிந்து விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை சித்தாஸ்ரமம் என்ற அமைதி தவழும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அது மகாவிஷ்ணு தவம் செய்த இடம் வாமனர் இருந்த இடம். மகாபலி சக்கரவர்த்தி தவம் செய்த இடம். அங்கு தான் விஸ்வாமித்திரர் தனது யாகசாலையை அமைத்து இருந்தார். அந்த இடத்தைக் கண்டு மகிழ்ந்த ராமர், விஸ்வாமித்திரரை தனது யாகத்தைத் தொடர வேண்டுகிறார். அரக்கர்கள் யாக குண்டத்தில் தேவையற்றதை போட்டு விடக்கூடாது என்பதற்காக யாக சாலை மீது  அம்புகளால் ஆன கூடாரத்தை அமைக்கிறார். ராமர், அந்த இடத்தை கண்ணை இமைகாத்தது போலக் காத்தார் என கம்பர் சொல்கிறார்.

கண்களின் மேல் இமை பெரியது. கீழ் இமை சிறியது.  மேல் இமையால் தான் இயங்கமுடியும். கீழ் இமை அப்படியே இருக்கும். ராமர் மேல் இமை. லக்ஷ்மணர் கீழ் இமை. லக்ஷ்மணர் யாக சாலையின் முன் புறம் நின்று காவல் காத்தார். ராமர் யாக சாலையைச் சுற்றி வந்து யாக சாலையையும் இலக்ஷ்மணரையும் கண்ணை இமை காத்ததுபோலக் காத்தார் எனக்  கம்பர் கூறுகிறார்.

அந்நேரம், சுபாகு, மாரீசன் இருவரும்  அரக்கர்களுடன் யாகத்திற்கு இடையூறு விளைவிக்க முயல்கின்றனர். ராமர் மாரீச்சனைத்தவிர எல்லோரையும் கொன்று விடுகிறார். மாரீசன் கடலுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான்.

பிறகு விஸ்வாமித்திரர் சித்தாஸ்ரமத்திலிருந்து கிளம்பினார்  அவர் ராமனிடம் “மிதிலாதிபதியான ஜனகராஜா, தர்மம் அறிந்தவர். அவர் ஒரு யாகம் செய்கிறார். நாங்கள் எல்லோரும் அங்கு போகப் போகிறோம். மனிதர்களில் சிங்கமான, ராமா, நீயும் எங்களுடன் அந்த யாகத்துக்கு வா. அங்கு அதிசயமான ஒரு வில் இருக்கிறது. அதையும் பார்க்கலாம் வா, தேவர்கள் ஜனகரின் முன்னோர்களிடம்  கொடுத்த அந்த வில். பிரகாசமாக, பலமுடையதாக, கண்ணால் காணவும் பயங்கரமாக இருக்கும், இந்த வில் ஒரு யாகத்தில் அவருக்குக் கிடைத்தது. தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ இதில் நாணேற்ற சக்தியுடையவர்கள் இல்லை. மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்.

இந்த வில்லின் பெருமையைக் கேட்ட அரசர்கள், அதைச் சோதித்துப் பார்க்க விரும்பினர். ஆனால்,  யாராலும் நாண் ஏற்ற முடியவில்லை. மகா பலசாலியான அரச குமாரர்களும் தோற்றனர். மிதிலா தேசத்து அரசனுடைய உத்தமமான வில்லை நீ பார்க்க வேண்டும். கூடவே யாகமும் நல்ல முறையில் நடக்கும்.. மற்ற தேவதைகளோடு பூஜிக்கத் தகுந்த தேவதையாக இந்த வில் அவருடைய அரண்மனையில்  இன்றளவும் இருக்கிறது. பலவிதமான வாசனைப் பொருட்கள், தூப தீபங்கள், இவற்றால் அர்ச்சிக்கப்பட்டு, மரியாதையாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.” இவ்வாறு சொல்லிவிட்டு விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணருடன்  மிதிலையை நோக்கிப் புறப்பட்டார்.

வழியில் ஆளரவமற்ற பாழடைந்த ஆசிரமம் ஒன்று இருந்தது. ராமர் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்க, விஸ்வாமித்திரர் “இது கௌதமர் என்ற முனிவரின் ஆசிரமாக இருந்தது. தேவர்களும் கண்டு மயங்கும்படி மிக நன்றாக பராமரிக்கப் பட்டு வந்தது. ஞானத்திலும் ஆசாரத்திலும் மேலான கௌதமர், தனது மனைவி அகலிகையுடன்  இங்கு வசித்து,  தவம் செய்து வந்தார் அவருடைய கோபத்தால் இந்த வனம் சபிக்கப்பட்டு இப்படி அலங்கோலம் ஆனது” என்றார். இங்கு நாம் என்ன நடந்தது என்பதைப்பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

தேவர்களின் அரசனான இந்திரன் கௌதமரின் மனைவியாகிய அகலிகைமீது  காதல் கொண்டு அவளை அடையும் தீய நோக்கத்துடன், சதி செய்து  கௌதமரை அதிகாலையிலேயே,  அவருடைய இருப்பிடத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டு அகலிகையை  அடைகிறான். காலைக் கடன்களைக் கழிக்க, கங்கைக்குச்  சென்ற கௌதமர்,  தனது ஞானத்ரிஷ்டியால் தவறு நடந்துள்ளது என்று தெரிந்து கொண்டு,  வேகமாக தனது இருப்பிடத்திற்கு வருகிறார். அவரைக் கண்டதும் இந்திரன் அகலிகையை நீங்கி அவசர அவசரமாக  வெளியே செல்கிறான்.  நடந்ததை உணர்ந்த கௌதமர், அவனைச் சபித்து விடுகிறார். அதுபோல அகலிகைக்கும் சாபம் அளிக்கிறார். இங்கு ஒரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தில், விஸ்வாமித்திரர் கௌதமரின் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த உடன் அகலிகை சாப வரலாறு பற்றி ராமனிடம்  எடுத்துரைக்கிறார். ஆனால் கம்ப ராமாயணத்தில் கல்லாய்க் கிடந்த அகலிகை உயிர்த்தெழுந்தபின் தான் அந்த வரலாறு பற்றி எடுத்துரைக்கிறார்.

இங்கு நாம் சற்று அகலிகை  யார், இந்திரன் இங்கு அகல்யைத்தேடி வரவேண்டிய பின்னணி என்ன என்பதை முதலில்  தெரிந்து கொள்வோம். இந்த விவரங்கள் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் மற்ற புராணங்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

அகலிகை

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டது காமதேனு என்கிற தெய்வீகப் பசு. அதை மகரிஷிகள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாகத் தோன்றிய உச்சைசிரவஸ் என்ற வெண்ணிறக் குதிரையை மஹாபலி சக்ரவர்த்தி கைக்கொண்டான். பிறகு வெளிவந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பாரிஜாத மரத்தையும் தேவேந்திரன் ஏற்றான். பின்னர், அப்ஸர ஸ்திரீகள் புடைசூழ மகாலட்சுமி தோன்றினாள். அவளையும் கௌஸ்துபம் என்ற ரத்தின ஹாரத்தையும் ஸ்ரீமந் நாராயணன் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு மயக்கம் தரும் மதுவுக்குத் தலைவியான வாருணிதேவி தோன்றினாள். அவளை விஷ்ணுவின் அனுமதியுடன் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னும் பாற்கடலைத் தொடர்ந்துக் கடைந்தபோது, திவ்யாலங்கார பூஷிதையாக அழகான கன்னியொருத்தி தோன்றினாள். மேகக் கூட்டத்தில் ஒளிரும் நட்சத்திரமாகப் பிரகாசித்த அவள்தான் அகலிகை!

அகலிகையின் அழகு

அகலிகை என்றால் அளவுக்கு அதிகமாக அழகானவள் அழகின்மை என்பதே இல்லாதவள் என்று பொருளாம். வால்மீகி அகலிகையை सुसमाहिते என்று கூறுகிறார்.

அடுத்து அகலிகை வெண்பா என்னும்   குறுங்காப்பிய ஆசிரியார் வெள்ளக்கால் ப சுப்பையா முதலியார் தனது படைப்பில் அகலிகையின் களங்கமற்ற அழகைக்  கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

விரூபமிலள் என்றபொருள் மேவுபெயர் மின்னாள்
மரீஇயதுஉரு ஒன்றுமொரு மாசும் – இராதபெண்வேறு
இல்என்று உணர்த்திடுதற்கு என்னில் அவள்அழகு
சொல்லும் தரமுடைய தோ?

– (அகலிகை வெண்பா – 55)

(விரூபமிலள் = களங்கமில்லா அழகு; மின்னாள் = மின்னல் எனத்தக்கவள்; மரீஇயது = பொருந்தியது)

திருப்பாற்கடலில் இருந்து அமுது தோன்றியபோது அவ் அமுதை ஒத்த அகலிகையும் தோன்றினாள். முழு அழகே ஒரு பெண் உருவைக் கொண்டு வந்தது போன்று முற்றிய அழகை உடையவள். அவள் முகம், மதியை ஒத்திருந்தது; அவள் குளிர்ச்சி பொருந்திய கண்கள், அம்மதியில் உள்ள மானை ஒத்திருந்தன. அவள் மொழி, மதி பொழியும் அமுதை ஒத்துள்ளது; ஆம்பல் மலரை ஒத்த வாயிதழ்களின் உள்ளே உள்ள பற்கள், மதியில் விளையும் முத்தைப் போல் ஒளி சிந்தின. மின்னலைப் போன்று அழகுடைய அவள் புருவங்கள், மன்மதனின் கையில் உள்ள கரும்பு வில்லை ஒத்துள்ளன. அவள் கண்கள், மன்மதனின் கையில் உள்ள பூங்கணைகளை ஒத்துள்ளதால் அவளுக்கு வில்லும் அம்பும் மிகையானவை ஆகும்.

இங்கு நாம் குறிபிட்டுள்ளது ஒரு சில பாடல்கள் தான்.வால்மீகியோ கம்பரோ அகலிகையின் அழகை வர்ணிப்பதை ஒரு சில பாடல்களோடு நிறுத்திவிட்டனர். ஆனால் சுப்ரமணிய முதலியார் அவர்கள் தனது அகலிகை வெண்பாவில் அகலிகையின் அழகை எண்ணற்ற பாடல்களால் வர்ணித்துள்ளார். அவளுக்கு அகலிகை என்று பெயரிடப்பட்டதே மாதர்களுள் அவளைப்போல் சிறிதும் குறை இல்லாதவள் வேறு ஒருத்தியும் இல்லை என்பதை இந்த வையகம் தெரிந்து கொள்ளும் பொருட்டே. அவள் தனது கரிய புருவமாகிய வில்லையும் அழகிய கண்ணையும் மன்மதனுடைய ஆயுதங்களான கரும்பு வில்லாகவும், மலர் அம்பாகவும் கொண்டு, அவற்றின் உதவியால் உலகில் உள்ள ஆடவர்களை எல்லாம் தன்னை காமுறச் செய்து வெற்றி பெற்றவள். ஆகவே அவள் இருக்கும்கால் மன்மதனும் அவனது ஆயுதங்களும் தேவை இல்லை  என்று சுப்ரமணிய முதலியார் கூறுகிறார்.

ச.து. சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா ஒரு புதுமைப்படைப்பு. அவர் அகல்யாவின் அழகினை எதிர்மறைச் சொற்களால் வடித்துள்ளார்.

பூவாத பூங்கமலம் புரையாத மணிவிளக்கம்மோவாத
முத்தாரம்
முளையாத செங்கரும்புகாம்பின்றித் தன்னிலேதான்
கவின்விரியும்
கற்பகக்காகூம்புமிருள் மொட்டிலே குமையாத
மின்னல்வெள்ளம்
குவியாத சந்திரிகை குலையாத வானநிதிஅவியாத
மீனரசி அலையாத அமுதகும்பம்
– (தமிழ்க்குமரி – ப.39)
(புரையாத = குற்றமில்லாத; மோவாத = முகராத; 
குமையாத = அழியாத; சந்திரிகை = நிலவு)

அகலிகை  நான்முகனின் மகள். அழகின் திருவுருவாகப் படைக்கப்பட்டவள். ச.து.சுப்பிரமணிய யோகியார் அகலிகையின்  அழகை வடித்துத் தரும் அழகே, அழகு. அவ்வழகினை

அன்னையிலாக் கன்னிகையே யாருனக்கு யௌவனம்எனும்புன்னகையைத் தந்தானே, புதுவயிரப் பெட்டகமே!நள்ளிரவில் கனவாகி நாளோடும் பூத்தவளே!தெள்ளியதோர் தேன்வடிவே, தெய்விகமாம் பேரழகே!யாகக்கனற் கனவே, அருமறைக்கு நாயகியேபோகத்துப் பூங்கனவே, போதத்து அகலிகையே-(தமிழ்க்குமரி – ப.40)
(யாகக் கனல் = வேள்வித்தீ; அருமறை = அரிய வேதங்கள்; போகம் = இன்பம்; போதம் = அறிவு) என்று போற்றுகிறார் கவிஞர்.

அவளுடைய அழகில் மதிமயங்கிய இந்திரன், அவளைத் தன்னுடையவள் ஆக்கிக் கொள்ள விரும்பினான். அதே நேரம் மகா தவசீலரான கௌதம முனிவரும் அகலிகையைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார்.

இந்த இருவரும் தங்கள் விருப்பத்தைப் பிரம்மதேவரிடம் தெரிவித்தனர். உடனே  பிரம்மதேவர், ‘ஒரு போட்டியின் மூலமே இதற்குத் தீர்வு காண மமுடியும்!’ என்று கருதி, இருவரையும் நோக்கி, ”மகத்தானவர்களே… உங்கள் ஆசை நியாயமானதே! ஆனால், உங்களில் ஒருவர் மட்டுமே இந்த கன்னியை அடைய முடியும். நான் கூறும் நிபந்தனையை ஏற்று, யார் அதை முதலில் நிறைவேற்றுகிறீர்களோ அவருக்கே இவள் உரியவள். உங்களில் யார் முன்னும் பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!” என்றார்.

அதைக் கேட்ட தேவேந்திரன், ”முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட பசுதானே… இதோ, இப்போதே புறப்படுகிறேன். மூவுலகிலும் அப்படிப்பட்ட பசு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, வணங்கி இந்த அழகியின் கரம் பற்றுகிறேன்!” என்று கூறித் தனது மேக வாகனத்தில் ஏறி உலகங்களைச் சுற்றி வரப்புறப்பட்டான். கௌதமரோ பிரம்மனின் நிபந்தனையைக் கேட்டுச் சோர்வடைந்தார்.

‘முன்புறமும் பின்புறமும் முகங்கொண்ட பசு எங்குள்ளது? அதை இதுவரை நான் கண்டதே இல்லை. நான் எப்படி அதைக் காண முடியும்?’ என்று எண்ணியவர், ‘சரி! நம்மால் ஆவது எது? ஈசன் விட்ட வழி!’ என்று தீர்மானித்து ஈஸ்வர தியானத்தில் அமர்ந்தார்.

அப்போது நாரதர் அங்கே வந்தார். கௌதமர் அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது நாரதர், ”மகரிஷி! தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசையையும் பிரம்மதேவரின் நிபந்தனையையும் நான் அறிவேன், வாருங்கள். அருகில் ஒரு கோசாலை உள்ளது. அங்கே சென்று முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு உள்ளதா என பார்க்கலாம்!” என்றார்.

இதைக் கேட்டு கௌதமர் சந்தோஷமடைந்தார். பசுக்கள் நிறைந்த அந்த கோசாலைக்கு இருவரும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தேடிய பசு தென்படவில்லை. கௌதமர் மனம் சோர்ந்தார். நாரதரைப் பார்த்து, ”கர்ப்பத்தில் உண்டாகும் மாற்றங்களினால் அபூர்வமாக ஒன்றிரண்டு பசுக்கள் இரண்டு தலை கொண்ட கன்றை ஈனுவதைக் கண்டுள்ளேன். ஆனால், முன்னும் பின்னும் சிரங்கள் உள்ள பசுவை நான் கண்டதில்லை!” என்றார் விரக்தியுடன்.

தான் விரும்பிய அகலிகை தனக்குக் கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஆதங்கம் ஒரு புறம். போட்டியில் இந்திரன் வெற்றிகண்டால், அதனால் தான் அடையவிருக்கும் சிறுமை மறுபுறம். இதை எண்ணி பெரும் கலக்கத்தில் இருந்தார் கௌதமர்.

அப்போது, ”கௌதமரே! கவலைப்படாதீர். நான்முகன் கூற்று தவறாகாது. அதோ பாருங்கள், முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட கோமாதா!” என்று குதூகலத்தோடு ஒலித்த நாரதரின் குரலைக் கேட்ட கௌதமர், அவர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்.

அங்கே பசு ஒன்று, கன்றை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் வெளிப்பட்ட கன்றின் முகம் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. முன்னும் பின்னுமாக இரு பசு முகங்கள் தெரிவதுபோல் அந்தக் காட்சி சட்டென உணர்த்தியது.

அதைக் கண்டு உளம் பூரித்த கௌதமர், நாரதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, விரைந்து சென்று அந்தப் பசுவை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின்னர் நாரதர் உடன்வர, பிரம்மதேவரைச் சந்தித்து, முன்னும் பின்னும் முகம் கொண்ட பசுவைத் தான் பார்த்து வந்த விவரத்தைக் கூறினார். நாரதரும் கௌதமரின் கூற்றை ஆமோதித்தார். அதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த பிரம்மன், அகலிகையை கௌதமருக்கு வேதமுறைப்படி மணம் முடித்து வைத்தார்.

அப்போது, மூவுலகைச் சுற்றி வந்தும் பிரம்மன் குறிப்பிட்ட பசுவைக் காண முடியாமல் மனச் சோர்வுடன், பிரம்மனது இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். அங்கே கௌதமர், பிரம்மனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றி பெற்று அகலிகையின் கரம் பற்றி ஆனந்தமாக இருப்பதைக் கண்டான்.

‘எனக்குக் கிடைக்க வேண்டிய இந்த எழிலணங்கு போயும் போயும் மரவுரியணிந்து, தாடியும் மீசையுமாக ரோமக் காடாக இருக்கும் இந்த முனிவருக்கு மனைவியாகிவிட்டாளே! இது எந்த வகையில் நியாயமாகும்? இவள் இருக்க வேண்டியது தேவலோகமல்லவா?’ என்று பொருமினான்.

ஆயினும் அகலிகை மீது இந்திரன் கொண்ட வேட்கை சற்றும் தணியவில்லை. அது அவனுள் கனன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் விளைவுதான் பின்னர் ஒருநாள் அவன் அகலிகையின் இருப்பிடத்துக்குச் சென்று நெறிதவறி நடந்த அந்தச் செயல்!

இது தவிர இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. பிரம்ம தேவன் உத்தம  மங்கையரது உருவச் சிறப்பெல்லாம் ஒருங்கமையப் படைத்த அகலிகையை இந்திரன் ‘இத்தகையளை மணப்பதற்குத் தன்னையன்றி வேறு  யாருமில்லை என்ற செருக்குடன் இருந்ததாகவும், பிரம்மன் அவளை இந்திரனிடம் கொடுக்காது ‘காப்பாற்றுக’ என்று சொல்லி கௌதம முனிவரிடம் கொடுத்ததாகவும், முனிவரோ அவளிடம் காதல் கொள்ளாது காத்து பிரம்மனிடம் திருப்பிக்  கொடுத்ததாகவும்,  அது கண்டு வியந்த பிரம்மன் கௌதமருக்கே திருமணம் செய்து கொடுத்ததாகவும், அதனால் பொறமை கொண்ட இந்திரன் அவளது கற்பினை அழிக்க முயன்றான்  என்று வரலாறு ஒன்று உளது.

இந்திரனுக்குச் சாபம்

வால்மீகி ராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது ?

அகலிகையின் மீது தீராத காதல் கொண்ட இந்திரன்,  ஒரு நாள், சதி செய்து  முனிவரரை அவரது ஆசிரமத்திலிருந்து நடுச்சாமத்திலேயே   காலைக் கடன்களை கழிப்பதற்க்காக கங்கைக்கு  அனுப்பினான்  பிறகு  முனி வேஷத்துடன் வந்து அகல்யாவிடம் –“பெண்ணே, அகாலமானாலும் வா-“ என்றழைத்தான். முனிவேஷத்தில் வந்திருப்பவன் இந்திரன் என்று அறிந்திருந்தும், வந்திருப்பவன் தேவ ராஜன் என்ற குதூகலத்தினால் இணங்கினாள். சிறிது நேரம் சங்கமித்து இருந்த பின், “சீக்கிரம் போ, தன்னையும், என்னையும் எப்பொழுதும் காப்பாற்றுவாயாக” என்று சொல்லி அவசரப்படுத்தினாள். சிரித்துக் கொண்டே இந்திரன் அகல்யையிடம் “அழகியே- நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன், இதோ போகிறேன்”  என்று சொல்லி வேகமாக அந்தக் குடிசையிலிருந்து பரபரப்புடன்  வெளியேறினான். வாயிலிலேயே கௌதமரைச் சந்தித்து விட்டான். தேவ, தானவர்கள் சேர்ந்து கூட செய்ய முடியாத அளவு தவம் செய்து ஆன்ம பலம் பெற்ற அந்த முனிவரை, அப்பொழுது தான் ஸ்நானம் செய்து நனைந்த ஆடைகளுடன், அக்னி ஜ்வாலை கொழுந்து விட்டு எரிவது போல தேஜஸுடன் கூடிய முனிவரை, கையில், குசமும், சமித்தும் வைத்திருந்த முனிவரைக் கண்டு தேவராஜன் நடு நடுங்கி,  வெளியேறினான். 

முனி வேஷம் தரித்திருந்த இந்திரனைப்  பார்த்து  துர் நடத்தையுள்ள அவனை, நன்னடத்தையே உருவாக இருந்த முனிவர் கோபத்துடன் சபித்து விட்டார். “என் வேஷம் போட்டுக் கொண்டு, செய்யக் கூடாதக் காரியத்தைச் செய்திருக்கிறாய். இனி என்றுமே இந்த செயலைச் செய்ய முடியாதபடி பயனற்றவனாக ஆவாய் என்றார். கௌதமர் இவ்வாறு சபித்தவுடன், இந்திரனுடைய ஆண் உறுப்புகள் கீழே விழுந்தன.” 

கம்பராமாயணத்தின் படி 

இந்திரனுக்கு அகலிகை மீது மோகம் ஏற்பட்டது. அதனால் எப்படியும் அந்த அகலிகையை அடையக் கருதி, முனிவரை வெளியேற்ற அவன் சேவல் போல கூவினான். அது கேட்டு முனிவர் பொழுது விடிந்துவிட்டது போலிருக்கிறது என்று ஆற்றங்கரைக்கு ஸ்நானத்திற்குச்  சென்று விட்டார். முனிவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சமயம், அவர் உருவத்தை எடுத்துக் கொண்டு அகலிகையை நெருங்கினான். ஆற்றுக்குச் சென்ற முனிவன், அது அகாலமென்று உணர்ந்து, ஆசிரமத்துக்கே திரும்பிவர, தன்னை இந்திரன் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தார். இந்திரன் பயந்து போய் பூனை வடிவம் எடுத்துக் கொண்டு ஓட முனைந்தான்.

இங்கு கம்பர் வான்மீகத்திலிருந்து சிறிது மாறுபடுகிறார். வால்மீகி இந்திரன் பூனை வடிவம் எடுத்து சென்றான் என்று எழுதவில்லை. பரிபாடல் என்னும் நூலில், திருப்பரங்குன்றத்துக் கோவில் சுவர்களில் உள்ள சிற்பங்கள் பற்றி குறிப்புகள் உள்ளன.  அச்சித்திரங்களுள் ஒன்று அகலிகை சாபமுறும் நிலையைக் காட்டுவது. அச்சித்திரங்களைக் காட்டி விளக்குவதை  எடுத்துரைக்கும்  ஒரு பாடல்:

“இந்திரன் பூசை: இது அகலிகை; இவன்

சென்ற கௌதமன்; சினனுறக் கல்லுரு

ஒன்றியபடி இது என்று உரை செய்வோரும்”

இதைக் கண்டபிறகே கம்பன் தனது ராமாயணத்திலும் இந்திரன் பூனை வேடமிட்டுத் திரும்பினான் என்று எழுதி இருப்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி”

நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில் வரும் மேற்கண்ட குறளும் இந்த நிகழ்வையே குறிப்பிடுகிறது என்றும் சொல்லுகின்றனர் இங்கு ஐந்தவித்தான் என்பது கௌதம முனிவரைக்குறிக்கும் இந்திரனே ஆனாலும் தண்டிக்கத் தகுந்தவர்  ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட கௌதமர் என்று ஒரு பொருள் சொல்லுகின்றனர்.

அகலிகை நடந்தவற்றை அறிந்து நாணத்தால் செயலற்று நின்றாள். முனிவர் இந்திரனைத் தீயெனப் பார்த்து, இந்த இழிச் செயலைச் செய்த உனக்கு உடலெங்கும் ஆயிரம் பெண்களின்  குறிகள் தோன்றட்டும் என சபித்தார். 

சுப்ரமணிய முதலியாரின்

அகலிகை வெண்பாவின் படி 

“விண் அமுதத்தால் சாகும் துன்பம் நீங்கியது. அந்த பயங்கரமான துன்பத்தைக் காட்டிலும் சகிக்க முடியாத கொண்டுந்துன்பத்தை செய்கின்ற காதல் துன்பமோ அகலிகை என்ற பெண்ணமுதால் நீங்குமேயன்றி வேறொன்றால் நீங்காது. என் ஆளுகைக்குள்ளடங்கிய குடிகளுள்,  ஓர் ஏழை பிராமணன் நான் காதலித்த அந்த பெண்மணியை எளிதாகக் கவர்ந்து இறுமாப்போடு சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, நான் அவனைக்காட்டிலும் அற்பமான ஏழை போல அந்தப் கைபற்றுதற்குரிய செயல் யாதொன்றும்  இல்லாமல் ஏங்கிப் பொருமித் தாழ்ந்திருந்து வருந்துகின்றேன்”  என்று பொருமிய இந்திரன் எப்படியாவது அவளை அடைந்தே தீருவது என்று முடிவெடித்து கௌதமர்  ஆஸ்ரமம் அடைகிறான், அந்த நள்ளிரவிலே   குடிலின் அருகே நின்று சேவல் போல கூவுகிறான். உடனே கெளதமரும் விடியற்காலம் ஆகிவிட்டது என்று கருதி காலை கடன்களைக் கழிக்கத் தனது இருப்பிடத்தைவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியவுடன் இந்திரன், அவரது குடிலினுள் நுழைந்தான். இங்குதான் சுப்பிரமணிய முதலியார் வால்மிகியிடமிருந்து வேறு படுகிறார். இந்திரன் அகலிகையுடன் இணைந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.  அகலிகையின் மீதுள்ள பக்தி தான்  அவரது படைப்பில் வெளிப்படுகின்றது. அவர் சொல்வதைப்பார்ப்போம், கணவரை வழி அனுப்பிவிட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த அகலிகை தனது கணவர் வடிவில் வந்துள்ளவன் இந்திரன் என்று அறியாது வெளியே சென்ற தனது கணவர், ஏதோ காரணத்தால் திரும்பி வந்துவிட்டார் என்று எண்ணி வரவேற்றாள்.

ஆனால், இந்திரனோ அவள் கையைப் பிடித்தான். ஸ்பரிசத்தை வைத்து இது தனது கணவன் அல்ல என்று தெரிந்து கொண்டு “சீ என்னை விட்டுவிடு” என்று அவனைத்தள்ளிய அகலிகை தனது நிலையை எண்ணி மிகவருந்துகிறாள். அவன் இந்திரன் என்று அறிந்த பிறகும் தன்னை விட்டுவிடும்படி அவனிடம் கெஞ்சுகிறாள். ஆனாலும் பலவந்தமாக இந்திரன் அவளை அடைகிறான். அவர்களுக்கிடையே நடக்கும் வாக்கு வாதத்தைக கிட்டத்தட்ட நூற்றி இருபது பாடல்களில் பாடியுள்ளார் ஆசிரியர். உண்மையில் அந்த பாடல்கள் ஒரு பொக்கிஷம். அந்தப் பாடல்கள் எல்லோருக்கும் படிப்பினையாக அமைகிறது. கண்டிப்பாக எல்லோரும் படிக்கவேண்டிய ஒன்று. அவற்றை படிக்கும்போது ஆசிரியருக்கு அகலிகை மீதுள்ள பக்தி நன்றாகத் தெரிகிறது.

நதியை அடைந்த கௌதமர் இன்னும் விடியவில்லை ஏதோ தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டு விரைந்து தனது ஆசிரமத்தை அடைகிறார். தேவர்களுக்குப் படைத்த அவிர்பாகத்த்தைத் திருடி உண்ட திருட்டு நாய் போல அகலிகையை பிரிந்த இந்திரன் வெளியே வருவதைக் கண்டுகொண்டார் கௌதமர். சற்று நேரத்தில் அங்கு நடந்தவற்றைப் புரிந்து கொண்ட கௌதமர் யுகம் முடியுந்தறுவாயில் உண்டாகும் வடவாமுகாக்னி போன்ற பெருங்கோபம் உண்டாக, காலகாலனாகிய ருத்ர மூர்த்தி போன்று கோபம் கொண்டு இந்திரனைப் பார்த்தார். இந்திரன் அவரைக் கண்டு நடுங்கியதை தனது கீழ்க்கண்ட பாட்டால் தெரிவிக்கிறார் ஆசிரியர்

உட்கி, அடங்கி, ஒடுங்கி, நடுநடுங்கி

வெட்கி, மெலிந்து, வெளிறி. ஒழி-மட்கி

உளைந்தான், குலைந்தான், உடைந்தான், இடைந்தான்

அலைந்தான், மலைந்தான் அவன்

‘நினைக்க வொண்ணாத இந்த இழிந்த தீச்செயலை செய்த நீ வெட்கப்படும்படியாகவும் உன்னைக் காண்போர் இழிந்து சிரிக்கும்படியாகவும் நீ இச்சித்த அங்கமே உன் தேகமுழுவதும் உடையவனாகக் கடைவாய்” என்று சாபமிடுகிறார் கௌதமர். 

ச.து.சு யோகியார் எழுதிய

“அகல்யா”வின் படி

இவர்  இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர். இவரும் வால்மீகியின் கருத்துக்களிருந்து நிறைய வேறுபடுகிறார். இவருடைய ஒரு சில கருத்துக்களை மட்டும் நாம் இங்கு கையாளுகிறோம். கௌதமரின் குடிலுக்கும் இந்திரன் வருவதை இந்தப்பாடலின் மூலம் இவர் தெரிவிக்கிறார்:

அன்றொருநாள் ராத்திரியில் யாமம் இரண்டோன்றாக  

ஒன்றி இருளோடிருளாய் உலவுகின்றான் வஞ்சமகன்.

நெஞ்சக் கருமையவன் நீல்விழியிலே சுளிக்க,

வஞ்சக் கருமையவன் மேனி வளப்பமிட,

கங்குலுக்கு  கருமைதரும் கருமை கண்டங்கு அறம் ஒடுங்க,

திங்கள் கவர வரும் தீப்பாம்புபோல  வந்தான்.

பெண்ணுக் கரசு அகல்யைப் பேரழகை கண்ணி வைக்க

விண்ணுக் கரசன் ஒரு வேடன் போல் வந்தானே

குக்கல் குறைப்படங்க, கூகைக் குரலோடுகங்

கொக்கரக்கோ கோழியெனக் கூவினான்  கோள் மிகுந்தான் .

அக்குரலைக் கேட்ட முனி அக்கணமே சந்தி செய

மிக்க விரைவா எழுந்து வெளியில் புறப்பட்டான்.

பொய்யிலாக் கோதமனும்   புறத்தேகப் பார்த்திந்தப்

பொய்யன் அவன் வடிவில் புகுந்தான் குடிசையுள்ளே.

ஓரத்தோர் நாணற்பாய்  மீதே உறங்குகிறாள்

மூரல் கலையாத மோகக் கவிதை மகள்

ஒற்றை அகல் விளக்கத் தொளி  இருளைக் காண்பிக்க,

கற்றை இருள் நடுவோர்  கண் போலக் கண்வளர்ந்தாள்

கூந்தல் புரள, கோல முன்கைத் தண்டின் மேல்

ஏந்து தாமரை முகத்தில் இனிமைக் கனவூர,

பெண்ணழகு தெய்வம் பேரமைதி யோடுறங்கும்;

பண்ணசைந்து நீள் மூச்சுப் பாய்ந்து கொங்கை தாலாட்டும்

ஆசை அவசரத்தில் அஞ்சுங் கணத்துள்ளே

மோசச் சுளிப்பினிலே முன்னேறும் வானரசன்

ஆங்கவளைக் கண்டான், அழகுண்டான் , கொண்டான்;

தீங்கு தடுப்பாரில்லை தீமை புரிந்துவிட்டான்.

என்றுமில்லாப்  பேராசை என் கணவர் கொண்டாரே!

இன்று கண்டேன் பேரின்பம் யான்! என்று இணங்கிவிட்டாள்.

இங்கு கவிஞரும், வந்தவன் தனது கணவர் என்று நினைத்து அவனுக்கு இணங்கிவிட்டாள் என்று கூறுகிறார்.  

திரும்பி வந்த முனிவனும், விவரம் அறிந்து கோபக்கனல் குமுற, கொதித்துள்ளம் கொப்பளிக்க, சாபத் தழல் நாவில் சண்டமாருதம் கக்க, ‘தீங்கு செய்த தேவமகன் தீமையுடற் செம்மேனி தீங்குபேறு பெண்குறி  ஆயிரமாகத் தீமையுற” என்று சாபம் கொடுக்க இந்திரனும் வெளியேறினான். இந்திரனுக்குக் கொடுத்த சாப விவகாரத்தில் சுப்ரமணிய முதலியாரும், யோகியாரும் கம்பனுடையே நிலைப்பாட்டையே கையில் எடுக்கின்றனர். அடுத்து நாம் காணவிருப்பது அகலிகை சாபம் பற்றி.

அகலிகைக்கு சாபம்

வால்மீகி

கௌதமரை சதியால் வெளியே அனுப்பிவிட்டு இந்திரன் அகலிகையிடம் ‘நான் உன்னை அனுபவிக்க விரும்புகிறேன்” என்று சொன்னதும் அகலிகை ‘தனது கணவர் இப்படி பேசியதும் இல்லை. இப்படி செயல்பட்டதும் இல்லை. இந்த ஆசிரமத்தில் இந்திரனைத் தவிர வேறு யாரும் வர முடியாது. அவன் என்னிடத்தில் நெடுநாளாய்  ஆசை வைத்திருப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன். ஆகையால் கௌதமர்  வேடத்தில் வந்திருப்பவன் இந்திரனே என்று அறிந்தாள். அழகே உருவெடுத்து வந்த எண்ணிறந்த அப்சரஸ்களுக்கு நாதனான  இந்திரன் அவர்களை அலட்சியம் செய்து தன்னை மேலாக எண்ணி ஆசை வைத்ததால், கர்வமடைந்து புத்தி மயங்கி அவனிடத்தில் ஆசைவைத்தாள். பிறகு தன்னிஷ்டம் நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்து  இந்திரனைப்பார்த்து “உன் சிநேகத்தால் மிகவும் ஆனந்தமடைந்தேன். மகரிஷி வருவதற்கு முன் இங்கிருந்து புறப்பட்டுப் போ. உனக்கும் எனக்கும் இதனால் யாதொரு கெடுதியும் நேராமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்றாள். அவன் அங்கிருந்து கிளம்பும் சமயம் கௌதமர் வந்துவிடுகிறார்.

 திரும்பி வந்த கௌதமர் விவரம் தெரிந்து, இந்திரனுக்கு சாபம் அளித்த பின்னர், கௌதமர் அகலிகையை நோக்கி

तथा शप्त्वा  वै शक्रमहल्यामपि शप्तवान्।।1.48.29।।
इह वर्षसहस्राणि बहूनि त्वं निवत्स्यसि
वायुभक्षा निराहारा तप्यन्ती भस्मशायिनी।।1.48.30।।
अदृश्या सर्वभूतानां आश्रमेऽस्मिन्निवत्स्यसि

என்று சாபம் அளிக்கிறார். அதாவது ‘நீ காற்றைத்தவிர ஆகாரமின்றி சாம்பலில் படுத்துக்கொண்டு ஒருவருடைய கண்ணிற்கும் தெரியாமல் ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பாய்.

यदा चैतद्वनं घोरं रामो दशरथात्मज:।।1.48.31।।
आगमिष्यति दुर्धर्षस्तदा पूता भविष्यसि

तस्यातिथ्येन दुर्वुत्ते लोभमोहविवर्जिता।।1.48.32।।
मत्सकाशे मुदा युक्ता स्वं वपुर्धारयिष्यसि

இட்சவாகு வம்சத்து அரசனான தசரத குமாரன் ஸ்ரீ ராமச்சந்திரன் இந்த கோரமான வனத்திற்கு வருவார். அவருக்கு அதிதி பூஜை செய்.  உன்பாவங்கள் விலகும் நிஜ ருபத்தை அடைந்து என்னுடன் சேர்வாய். லோபம் மோகம் தீர்ந்து சந்தோஷத்துடன் என் மனைவியாக இருக்கும் யோக்யதை பெறுவாய்” என்று சொல்கிறார்.

இங்கு நிறைய விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும். இன்றும்கூட பலர் வால்மீகி அகலிகையைக் கல்லாகப் போகும்படிச் சபித்தார் என்று சொல்லுகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுளதைக் கவனித்துப் பார்த்தால், வால்மீகி அன்ன ஆகாரமின்றி யார் கண்ணிலும் படாது தவமிருப்பாய் என்று தான் சொல்லி உள்ளார். ஆக இது சாபமே இல்லை. தவம் செய்ய சொன்னது சாபமே அல்ல ஒரு தண்டனை. காரணம் அவரே दुर्वुत्ते அதாவது கெட்ட நடத்தை உள்ளவளே என்று சொல்கிறார்..

மேலும் அகலிகை தனது கணவரிடம் எதுவும் கேட்காமலேயே அவரே அவளுடையே நிலை மாறி மீண்டு தன்னிடம் வருவதற்கான வழியையும் சொல்லிவிட்டார்.

கம்பராமாயணத்தின் படி 

அகலிகையும்  கௌதமன் உருவில் வந்த இந்திரனைத் தனது கணவன் என்றே நினைத்து அவனோடு கூடி மகிழ்ச்சியாக இருக்கையில் இது புது மண மது என்பதை உணர்ந்தாள். அவ்வாறு உணர்ந்தும் அவள் இது தகுதியன்று என்று ஆராய்ந்து விலக்கக்கூடிய அறிவுத்திறனைப் பெறாமல் இழிந்த அச்செயலுக்கு உடந்தையாக இருந்தாள்

புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
‘தக்கது அன்று’ என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்

காமப் புது மண மதுவின் தேறல், பிறன் மனைவியை விரும்புதலும் கள்ளும் ஒழுக்கத்தையும் அழிப்பதில் ஒன்றோடு ஒன்று ஒத்துள்ளன. அதனால் கம்பர் இவ்வாறும் உருவகப்படுத்துகிறார். ஞான உணர்வால் அனைத்தையும் அறிந்த முனிவன் விரைந்து வந்து அகலிகைக்கும் சாபம் அளிக்கிறான்.

(கம்பர், ராமாயணம் எழுதும் முன் பல வடமொழி அறிஞர்களிடம் வால்மீகியின் ராமாயணத்தைப் பற்றி விவாதித்த பிறகே ‘ராமாவதாராம் (கம்ப ராமாயணம்) எழுதியதாகச் சொல்கிறார்கள்.) அதனால் வால்மீகியி லிருந்து விலகாமல் அகலிகைக்கு

‘மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்

கல் இயல் ஆதி என்றான்; கரும் கல் ஆகி மருங்கு வீழ்வாள்

மெல்லியளாலான தன மனையாளைப்  பார்த்து (தீயொழுக்கத்தால்) வேசியை ஒத்த “நீயும் கல் வடிவமாகுக” என்று கௌதமர் சாபமளித்தார் என்று கம்பர் தெரிவிக்கிறார். அகலிகையும் கல்லாய்ச்சாய்ந்தாள். வால்மீகி, அகலிகை கோரிக்கை வைக்காமலேயே அவளுடைய சாபத்திற்கு எப்போது விமோசனம் பிறக்கும் என்று தெரிவித்து விடுகிறார். ஆனால் கம்பர்,  அகலிகை கௌதமருக்கு அது சம்பந்தமாக கோரிக்கை வைப்பதாக தெரிவிக்கிறார்

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனேஅன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!” என்ன,
தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவஇந்தக் கல் உருத் தவிர்தி” என்றான்

பிழைகளைப் பொறுத்தருள்வது பெரியவர்கள் கடமை என்று முன்னோர் சொல்வர். இச்சாபத்திற்கு முடிவை அருள்வீராக என்று அகலிகை வேண்டி நிற்க, தசரத ராமனது திருவடிதுகள் உன்மேற்ப் படியும்போது இந்தக் கல்லுரு நீங்குவாய் என்று கௌதமர் அருளினார்.

சுப்ரமணிய முதலியாரின் அகலிகை வெண்பாவிலிருந்து

நான் முன்பு சொன்னது போல ஆசிரியர் அகலிகை மீது பக்தி கொண்டவர். ஆதலால் அகலிகை தெரிந்தே தவறு செய்தவள் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் வந்தவன் இந்திரன் என்று தெரியாமல் தன்னை இழந்தாள் என்றே கருதுகிறார். ஆதாலால் கௌதமன்  இந்திரனைச் சபித்தபின், அகலிகையை நோக்கி ‘நீ அறியாமல் உன்னை அடைந்த மாசு கழியும்படியாகவும், அதை நீ நினைத்து நினைத்து துன்புறுத்தல் அற்றுவிடும்படியாகவும் நீ மாசடைந்ததைப் பற்றிய உலக நிந்தை மறக்கப்பட்டு நீங்கி யொழியும்படியாகவும் உன் தேகம் கல்லாக மாறுக.” என்று அருளியதாகக் குறிப்பிடுகிறார். ஆனாலும் சமாதானமடையாது புலம்பிய அகலிகையைத் தேற்றி ‘நீ சில காலம் கல்லாக இருத்தலே உனக்கு உற்ற தோஷத்துக்குப் பரிகாரமாகும். திருமால் ராமனாக அவதரிப்பார். அப்போது அவர் வணசஞ்சாரம் செய்யம்போது அவர் பாதம் பட்டு நீ பழைய நிலையை அடைவாய்” என்று சொல்லுகிறார்.

ச. து. சு யோகியார்

………………..மனையரசு நாணிப்போய்

கூனிக் குறுகி குமைவாளைக் கண்ட முனி

‘இல்லாம பெருந்தர்மம் இழிந்த மகள் இக்கணமே

கல்லாய்க் கிடக்க ! என்று கடுஞ் சாபமிட்டானே

இச்சாபம் வந்தணைய ஏந்திழை தன் கைகுவித்து

“இச்சாபத்துக்கு இறுதி ஏதேனும் காட்டு” என்றாள்

‘பின்னால் இராமனெனும் பெருமாள் பதத் தூளி

உன் மேல் உறும்போது” என்றுரைத்தான்

கல்லாய் வீழ்ந்தாள்.

யோகியாரும் வான்மீகத்தை விட்டு விலகவில்லை

சாபத்திற்குப் பின் இந்திரன்

வால்மீகி

கௌதமரின் சாபத்தினால் ஆண் குறிகளை இழந்த இந்திரன் முகம் வெளிறி, அக்னி முதலிய தேவதைகளிடம் சென்று ‘கௌதம முனிவரின் தவ வலிமையைக் கெடுக்க  அவருக்குக் கோபம் உண்டாக்கிச் சபிக்கும்படி  செய்யச் சொன்னீர்கள். உங்களுடைய காரியமாகவே நான் சென்று அவர் தவ வலிமையைக் குறைத்தேன். அதனால், எனது ஆண் குறிகளை இழந்தேன். உங்களுக்காகச் சிரமப்பட்டு ஆபத்தை அடைந்த எனக்கு மீண்டும் எனது ஆண்குறிகள் வேண்டும் “ என்றான். இதனால் அக்னி முதலிய தேவர்கள் பித்ருக்களிடம் சென்று முறையிட்டு இந்திரனுக்கு ஆட்டின் (மேஷம்) குறிகளைப் பெற்றுத்தந்தனர்..

கம்பர்

இங்கு கம்பர் வால்மீகியிடமிருந்து மாறுபடுகிறார். ஆயிரம் பெண்களின்  குறிகளுடன் வெட்கி நிற்கும்  தங்கள் தலைவனான தேவேந்திரனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட பிரம்மன் கௌதம முனிவரிடம் சாப நீக்கத்திற்கு அருள் செய்யும்படி வேண்ட, கௌதம முனிவரும் தன் உள்ளம் மாறி வெகுளி தணிந்து அவ்விந்திரன் கொண்ட ஆயிரம் பெண் குறிகளும் சிறந்த ஆயிரம் கண்களாகும்படி அருளிச்செய்தார், என்று கூறுகிறார்.

ஆக,  வால்மீகியும் கம்பரும் இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை மாற்றி அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். சுப்ரமணிய முதலியாரும், ச. து. சு யோகியாரும் தங்கள் படைப்புகளில் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர்.  ஆனால் யோகியார் புதியதாக ஒரு கருத்தையும் தெரிவிக்கிறார். அதாவது அகலிகை இன்னும் கல்லுருவாகக் கிடக்கிறாளே என்று வருந்துகிறார்.

“அறம்  நின்றாள் வீழ்ந்தாள் அறம்  கொன்றார் வாழ்கின்றார்”

அகலிகை சாப விமோசனம்

வால்மீகி

முன்பு சொன்னது போல, விஸ்வாமித்திரர் கௌதமரின் ஆஸ்ரமத்திற்குள் நுழையும்போதே அகலிகையின் வரலாறைச் சொல்லி அவளைச் சாபத்திலிருந்து விடுவிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்ல ராமர் லக்ஷ்மணர் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். இங்கு கௌதமரின் சாபத்திற்கான கால அவகாசம் ராமரின் வருகையுடன் முடிவடைந்து விட்ட படியால், இதுவரை யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்த பிரம்மனின் மாயா சக்தியால் ஸ்ருஷ்டிக்கபட்ட  அகலிகை தெய்வீக ஒளியுடன் தோன்றினாள். ராமர் லக்ஷ்மணர் அவள் பாதம் பணிந்தனர். அகலிகையும் விதிப்படி ராமருக்கு  அதிதி பூஜை செய்தாள் கௌதம முனிவரும் அகலிகையை ஏற்றுக்கொண்டார். இங்கு ஒரு விஷயம் நினைவு கொள்ள வேண்டும். கௌதமர் அகலிகையைக் கல்லாகும்படிச் சபிக்கவில்லை என்று முன்பே சொன்னோம். இங்கு வால்மீகி அத்தகைய காட்சி பற்றி ஏதும் சொல்லாமல், ராமர் ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், இதுவரை யார் கண்ணிற்கும் புலப்படாமல் இருந்த அகலிகை ராமர் கண்ணுக்குத் தெரிந்தாள் என்று சொல்கிறார். . அத்துடன் சாப விமோசனம் நடந்துவிட்டது என்றே பொருள் கொள்ளவேண்டும்.

கம்பர்

இங்கும் கம்பர் வால்மிகியிடமிருந்து வேறுபடுகிறார். வால்மீகி, கௌதமரின் ஆஸ்ரமத்திற்குள் நுழையும் முன்பே அகலிகையின் வரலாற்றை ராமருக்கு சொல்லுகிறார். ஆனால் கம்பர் அகலிகை சாப விமோசனம் நடந்த பின்னே அந்த வரலாற்றைச் சொல்லுகிறார்.

இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார்.

விஸ்வாமித்திரர், ராமர் லக்ஷ்மணருடன் விதேக நாட்டின் புற மதிலின் வெளியிடத்தே வந்து  தங்குகின்றனர். அவ்வளவில் இல்லறச் சிறப்பான கற்பினை அழித்ததனால் இழிவை அடைந்த பெருந்தவத்தாளான கௌதம பத்தினி (அகலிகை சாப உருவத்தில்) செறிந்த மேட்டினிடம் உயர்ந்து தோன்றும் கருங்கல்லினை வெளியிடத்தே கண்டார்கள்.

அங்ஙனம் கண்ட கல்லின் மேல் இராமபிரானது காலடித்துகள் பட்டதனால் உள்ளத்துக் கொண்ட அஞ்ஞான மயக்கம் நீங்கி தத்துவ ஞானம் பெற்றவன் அஞ்ஞான மயமான யாக்கை நிலை மாறி உண்மையான உருக்கொண்டு பரமனது திருவடிகளை அடைதல் போல (அவ்வகலிகை) முன்னை உருவம் கொண்டு எழுந்து நின்றாள். கம்பர்   இங்கு “பண்டை வண்ணமாய்” என்று சொல்லுகிறார். அதாவது அகலிகை இந்திரனிடம் தன்னை இழக்கு முன் எந்த நிலையில் இருந்தாளோ, அந்த உருக்கொண்டு எழுந்தாள் என்று சொல்ல வருகிறார். இங்கு மற்றொரு விஷயம் சொல்லப்படுகிறது. ராமனின் பாதம் கல்லின் மீது படாமல் கால்துகள்தான் பட்டது என்று கம்பர் சொல்கிறார். சான்றோர்கள் இதற்கு ஒரு விளக்கம் அளிக்கின்றனர். அதாவது அகலிகை அடுத்தவருடைய மனைவி. கல்லாய் இருக்கும் அகலிகை மீது கூட தனது கால் படுவதை ராமன் விரும்பவில்லை. பிற பெண்களை ஸ்பர்சிக்க ராமன் விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டவே கம்பர் இவ்வாறு கூறுகிறார் என்று சொல்கின்றனர். இங்குதான் விஸ்வாமித்திரர் ராமருக்கு அகலிகை வரலாற்றை சொல்கிறார்.

ராமன் அகலிகையை நோக்கி ‘அன்னையே பெருந்தவத்தானான கௌதம முனிவனது அருளுண்டாகும்படி நீ அவனுக்கு வழிபாடு செய்க. நடந்ததை நினைத்து வருந்தாதே என்று அகலிகை பாதம் பணிந்து சொன்னான். இங்கும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விஷயம் உள்ளது. அதாவது அந்நியனிடம் தனது கற்பை இழந்த பெண்ணை அன்னை என்றழைப்பது முறையோ? அதுவும் கம்பரே ‘மனையின் மாட்சியை அழித்து இழி”  தக்கது அன்று என்ன ஒராள் தாழ்ந்தனள் “”நிரந்தர முலகினிற்கு நெடும் பழி பூண்டா ணின்றாள்” ‘மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்”  ஆகிய பதங்களைப் போட்டபின், ராமர் அகலிகையை அன்னையே என்று அழைத்தல் தகுமா? கம்பர் அப்படி பாடியதன் நோக்கம் தெரியவில்லை.

ஆனால் திருச்சி பேராசிரியர் மறைந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு கருத்துச் சொல்கிறார். “கௌதமருக்கு, ராமாவதாரம் நிகழ்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த அவதாரம் பற்றித் தெரிந்துள்ளது. அதனால் தான் அவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தசரத மைந்தன் ராமன் அவதாரம் எடுத்து இம்மண்ணில் கால் வைத்து அவனது பாத துகள் அகலிகை மீது பட்டதும் அவளுக்கு சாப விமோசனம் உண்டாகும் என்று சொன்னார்.  அன்றிலிருந்தே அகலிகை ராமன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள். அதாவது கோசலை,  ராமனைத் தனது கருவில் சுமக்கும முன் அகலிகை ராமனைத் தன் நெஞ்சில் சுமந்தாள். அதனால் ராமன் அகலிகையை அன்னை என்று அழைத்ததில் எந்த தவறுமில்லை”. என்ன ஒரு அருமையான விளக்கம். 

அப்பொழுது முனிவர் கௌதமர் அங்கு வருகிறார். அவரிடம் அகலிகையை ஒப்படைத்து விஸ்வாமித்திரர்

அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான்.

சொல்கிறார். “கொடிபோன்ற இடையுடையவள் மாத்திரமின்றி எக்காலத்திலாயினும் ஒழுகலாற்றில் இடையீடு படாதவள் –இடையாதவள் அப்படிப்பட்ட அகலிகை  ஸ்ரீ ராமன் அவளை அணுகுவதற்கு முன்னமே, இந்திரன் அவளை அணுகியபோதே பெண்மையின் வண்ணம் எவ்வண்ணமோ அவ்வண்ணமாகவே நிற்கிறாள். பின்னையொரு வண்ணம் முன்னையொரு வண்ணம், என்பதின்றி முன்னை வண்ணமே வண்ணமாக என்றும் ஒரு வண்ணமாய் நிற்கின்றாள் அகலிகை”.

“நெஞ்சினால் பிழை இலாளை நீ அழைத்திடுக என்று சொல்கிறார் மனசினாலே பிழைத்தல் இல்லாதவள் அகலிகை நெஞ்சினாற் பிழைத்தல்  இல்லாமையாகிய அறத்தில் நின்றவள் அகலிகை அதனால் இலாள் –இல்லுக்குரியவள்-அவளே. இல் ஆள்- இலாள் நெஞ்சினாற் பிழைப்பு இலாள் எவளோ அவளே இலாள். அதாவது, இல்லாள் –வீட்டுக்குரியவள். ஆகையினாலே அந்த உத்தமியை உலகத்தின் ஐயம் நீங்கி உய்யும் வண்ணம் இதோ அழைத்திடுக என்று கௌதமரைக் கேட்டுக்கொள்கிறார் விஸ்வாமித்திரர் (பண்டிதமணி சி கணபதி).

இங்கு அழைத்திடுக என்று விஸ்வாமித்திரர் சொல்லுக்குப் புதிய விளக்கம் தருகின்றனர் சில சான்றோர். அதாவது தனக்கு இணையான தவ வலிமையுள்ள கௌதமரிடம் அழைத்திடுக என்ற  வார்த்தையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கெளதமரும் அகலிகையின் தூய்மையை அறிவார். பின் விஸ்வாமித்திரர் சொல்வதாக கம்பர் இந்த வார்த்தையை ஏன் பயன்படுத்தினார்?

‘எதிர்காலத்தில் சலவைத் தொழிலாளியின் வார்த்தையினாலே நித்திய கன்னியின் வரிசையில் சேர்ந்த சீதாப்பிராட்டியின் தூய்மையில் அறியாமையாகிய இந்த உலகம் ஐயுறும். அப்படி ஐயுறும் உலகம் ஒருநாள் தெளிவும் அடையும். ஒ ராமனே அறியாமையாகிய உலகம் தெளிவடைகிற  காலத்திலே இந்த உலகம் உய்யும் வண்ணம் உன்னை வந்தடையும் கற்புத்தெய்வத்தை  அழைக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் கௌதமர் போல நீயும் அழைத்திடுக” (பண்டிதமணி சி கணபதி) என்று கௌதமருக்கு கூறியது போல ராமனுக்குக் கூறினார் என்று சொல்கின்றனர்.

கெளதமரும் அகலிகையை அழைத்துச்சென்றார். ‘தீவினை நயந்து செய்த தேவர்கோன்” என்று முன்புரைத்த விஸ்வாமித்திரரே அகலிகையை ‘நெஞ்சினாற் பிழையிலாள்  “என்று இப்போது கூறுதலால் அறநெறி தவறிய ஆண் மகனது வஞ்சகச் செய்கையே இயற்கையில் மன நெகிழுந்தன்மையாளான அகலிகை தன் பெண்மை நெறி தவறியதற்கு காரணமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாயணம் திரேதாயுகத்தில் எழுதப்பட்டது. வால்மீகி ஒரு முனிவர். உள்ளது உள்ளபடி எழுதுபவர். அகலிகை தெரிந்தே தவறு செய்தாள் என்று சொல்கிறார். ஆனால் கம்பர் வால்மீகியிடமிருந்து சிறிது விலகி அகலிகை இந்திரனோடு சேருவதற்கு முன் அவனை வேற்றான் என அறியாது புணர்ச்சியின்போதே உணர்ந்தனள் என்றும் ஆனால் அது தக்கதன்று என்று நினைத்து விலகாமல் இருந்தாள். கம்பர் சொல்லும் காரணம் ‘முனிவன் முடுக்கி வந்தான்’ என்பதே. அதாவது அகலிகை இது தக்கதென்று முடிவெடுத்து(தாழ்ந்தனள்) விலகு முன் முனிவர் அங்கு வந்துவிட்டார்.

அகலிகையின் வரலாறு முழுவதும் கூறாது தாம் எடுத்துக்கொண்ட கதைபோக்கிற்கேற்றளவில்கூற வந்த கம்பர் தமது சாதுரியத்துக்கேற்ப வெளிப்படையானும் குறிப்பானும் அவளுண்மையியல்பு தெளிவாகக் காட்டியுள்ளார். தேவர்கள் இந்திரனுடன் செய்த வஞ்சனையால்  அகலிகை  உடற்குற்றம் எய்தினாளாயினும் உளக் குற்றம் எய்தினாளல்லள் (நமச்சிவாய தேசிகர்)   இதனாலேயே ‘நெஞ்சினால் பிழை இலாள் என்று குறிபிட்டுள்ளார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கம்பருக்குப் பிறகு அகலிகை இலக்கியம் படைத்தவர்கள் எல்லோருமே அகலிகையைத் தவறு செய்யாதவளாகவே காட்டுகின்றனர். ஒருவேளை இது கம்பனின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்.

இதனாலன்றோ அகலிகை இன்னும் பஞ்ச கன்னிகை வரிசையில் இடம் பெற்றுள்ளார். .

 சுப்ரமணிய முதலியாரின் அகலிகை வெண்பாவில்

இங்கு சுப்ரமணிய முதலியார் வால்மீகி கம்பரை விட ஒரு படி மேலே சென்றுள்ளார். ராமன் கால் பட்டு அகலிகை பழைய உருவம் அடைந்ததும் விஸ்வாமித்திரர் ராமனிடம் ‘உமது பாதம் பொருந்தப் பெற்றதனால் கல்லுருவம் நீங்கி இங்கு நிற்கின்ற மாது, கற்பிழந்ததற்குப் பின்னும் கல்லாவதற்க்கு முன்னும் இருந்த அசுத்தமான உடலை அடைந்திருக்கிறாளோ என்றால் அதுவுமில்லை. கற்பிழக்கும் முன் இருந்த சுத்தமான தேகத்தை அடைந்திருக்கிறாளோ  என்றால் அதுவுமில்லை. வேறு எத்தன்மையான தேகத்தை அடைந்திருக்கிறாள் என்றால், கற்பிழக்கு முன் இருந்த தேகத்தைத தோற்றத்தில் ஒத்து உண்மையில் அதனினும் அதி  பரிசுத்தமானதும் அது கற்பிழந்து கெட்டது போல என்றும் கெடக்கூடாததுமான தேகத்தை அடைந்திருக்கின்றாள். இவளுடைய முந்தைய தேகம் பிரம்மாவினால் செய்யப்பட்டது. இவளுடைய இந்த தேகமோ உனது திருப்பாதம் பிரசாதித்தருளப்பட்டது. அந்த செயற்கையான தேகம் கற்பிழந்து கரையுற்று ஒழிந்தது போல இந்த சுயம்புவான தேகம் அசுத்தமடைதலவாது அழித்தலாவது எக்காலத்துமே இல்லாததாம். இவள் வெருண்டு மூர்ச்சித்துக் கற்பிழந்து மேன்மை நீங்கித் தாழ்வடைந்த குறைவு விளங்கும்படி, இவள் கற்பிழந்து கல்லானதற்க்கு அறிகுறியாக அம்மிக்கல்லின் மீது பெண்கள் தம் கல்யாண காலத்தில் தம் கால் பொருந்த மிதிப்பார்கள்”

ச. து. சு யோகியார்

ராமனின் பாத துகள் பட்டு உயித்தேழுந்தவளிடம் விஸ்வாமித்திரன்

“ நீ பிழைத்தாய் அல்லை;

நினை பிழைத்தார் எல்லோரும்;

என்று கூறுகிறார். ராமனோ கௌதமனிடம்

‘’மதி படைத்த கோதமனே

பெண் பிழைத்ததில்லை; அவள் பிறன்

பிழைக்கப் பிழையுற்றாள்;

என்று சொல்லி கௌதம முனிவரிடம் ஒப்படைக்கிறார்.

இவ்வாறாக அகலிகை கௌதமருடன் மீண்டும் இணைந்தாள்.

விஸ்வாமித்திரரின் பாராட்டு

கல்லாக இருந்தவள் ராமர் பாதத் துகள் பட்டு மீண்டும் தன் பழைய நிலையை அடைந்ததைக் கண்ட விஸ்வாமித்திரர் ராமரிடம் இவ்வாறு சொல்வதாகக் கம்பர் சொல்கிறார்

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’

கம்பனின் கவித்திறனுக்கு இந்தப் பாடல் ஒரு சான்று. இங்கு பல வண்ணங்களைச் சொல்கிறார், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள்.

இப்படி நிகழ்ந்தபடியால், இனி இந்த உலகம் முழுமைக்கும்  நல்லது அல்லாமல் வேறு துயரங்கள் வந்துவிடுமோ? கார்வண்ணனே, கரிய நிறம் கொண்ட தாடகையை கொன்றபொது உனது கையின் அழகைக் கண்டேன் (அகலிகை சாப விமோசனத்தின் பொது) காலின் அழகை இங்கு கண்டேன்.

இங்கு துளசி தாசரின் ராமாயணத்தைப் பற்றி ஒரு வார்த்தை. துளசி தாசர் அகலிகை வரலாற்றை ஒரு சில ஸ்லோகங்களிலேயே சொல்லி உள்ளார்.  அதில் அகலிகை இந்திரன் சாபம் பெற்ற விவரங்கள் இல்லை

மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில்  பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்த போது தர்மருக்கு அரசனின் கடமைகள் பற்றிச் சொல்லும்போது அகலிகையின் வரலாறு பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் அது ராமாயணத்திலிருந்து சற்று வேறு படுகிறது.

இதன் பிறகு விஸ்வாமித்திரருடன் ராம லக்ஷ்மணர் மிதிலையை அடைந்தனர்

அடுத்து சீதா கல்யாணம்

பதிவின் வடிவம்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் 

தாடகை வதம்

(ஆர். சேஷாத்ரிநாதன்)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் . ராமாயணத்தில் விஸ்வாமித்திரரின் பங்கு பற்றி சென்ற தொடரை எல்லோரும் படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதன் தொடர்ச்சிதான் இந்த தாடகை வதம் என்ற தொடர். மீண்டும், இந்த தொடர் வால்மீகி, கம்பர் துளசி தாசரின்  இராமாயணங்களை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. அதுபோக வேளுக்குடி, கம்பவரிதி ஜெயராஜ், கவிஞர் வாலி, அருணாச்சல கவிராயர்  ஆகியோரின் கருத்துக்களும் இந்தக் கட்டுரையை அலங்கரித்துள்ளன. அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. மொத்தத்தில் நான் பார்த்தது, படித்தது, கேட்டது எல்லாவும் இடம் பெற்றுள்ளன.

முனிவரும் அரச குமாரர்களும்

முனிவர் விஸ்வாமித்திரர் உலக நன்மைக்காக தான் செய்யும் வேள்விகளுக்கு அரக்கர்கள் இடையூறு செய்கிறார்கள். அதைக் காக்க, கரிய செம்மல் ராமனைத் தன்னுடன் அனுப்பவேண்டும் என்று மன்னவன் தசரதரிடம் கோரிக்கை வைக்கிறார். முதலில் எதைக்கேட்டாலும் தருவதாகச் சொன்ன தசரதன், ராமன் வயதில் மிக சிறியவன் என்பதால் தயங்குகிறார். இதனால் விஸ்வாமித்திரர் சினம் கொள்ள, குலகுரு வசிஷ்டர் தலையிட்டு, மன்னரைச் சமாதானப்படுத்தி, ராமர் லக்ஷ்மணரை விஸ்வாமித்திரருடன் அனுப்பும்படி சொல்ல, தசரதனும் சம்மதம் தெரிவிக்கிறார். சென்ற தொடரில் விஸ்வாமித்திரரின் கோரிக்கையை, அருணாச்சலக் கவிராயர் பாடல் மூலம் மன்னருக்கு தெரியவைத்தது இடம் இடம் பெறவில்லை .  இதோ அந்த பாடல்

ராமனைத் தருவாய்  செகத்ரட்சக
ராமனைத்
 தருவாய்                              (ராம)

 தாமதம்
  நீ செய்யாதே –தசரதா  இப்போதே   (ராம)

 
 அரன்பக்கம் செல்வேன் அரிமுன்னே சொல்வேன்
  இரண்டும் தப்பினால் உனைவிட் டெவரால் பகை வெல்வேன்  (ராம)

. தாடகைப் பாவி தவிர்த்தாள் என் வேள்வி
  பீடைவராமற் காத்தாற் பிழைக்குமென் ஆவி (ராம)

உம்பர்
 விசாரம் ஒழிக்க அந் நேரம்
  சம்பர னைக்கொன்றாயே தயவாய் இந் நேரம் (ராம)

கோபத்தில்
 ருத்திரன் குருவிசுவா மித்திரன்
  ஆபத்துக் காக்க வேணும் அதனால் உன் புத்திரன் 

ராமனத்தருவாய் ..

மன்னன் முதலில் மறுக்க, பிறகு வசிஷ்டர் மன்னரை சமாதானம் செய்வதைக் கவிராயர் இப்படிச் சொல்லி உள்ளார்.

மோசம் வராதைய்யா நான்’

சொன்ன வார்த்தை

மோசம் வராதைய்யா

கோசிகன் பின்னே ராமனைக்’

கூட்டிவிடுவாய் –சொன்னேன்

மோசம் வராதைய்யா

உப்பு நீர் மேகம் சேர்ந்தால்

உலகில் பிரவாகம்

அப்படி உன்மகனுக்கு

அடுத்ததே யோகம்

மறுவுண்டோ வதிஷ்டன் சொல்

வார்த்தை இரண்டோ

பொறுபொறு முளைப்பரைப்

புதைப்பாரும் உண்டோ

சோதிக்கவேண்டாம் நான்

சொன்னதே சீலம்

மோசம் வராதைய்யா நான்

சொன்ன வார்த்தை

குலகுருவின் சொல்லைக்கேட்டு, தசரதன், ராமன் லக்ஷ்மணனை விஸ்வாமித்திரருடன் அனுப்புவதற்க்குச்  சம்மதிக்கிறான். இங்கு தான் குலகுரு வசிஷ்டர் ஒரு நல்லாசிரியராக தனது பங்கைச் சரிவரச் செய்கிறார். இதைத்தான் சைவ சித்தாந்தத்தில் தூல அருந்ததி ரகசியம்/நியாயம் என்று சொல்கின்றனர்.

தூல அருந்ததி நியாயம்

“அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து என்பது யாவரும் அறிந்த ஒன்று.எத்தனை பேர் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்த்திருப்பார்கள்? இதனை விளக்குவதே தூல அருந்ததி நியாயம். விண்ணிலுள்ள பிரகாசமற்ற  அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது எளிய செயலன்று. எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுவதற்காக  அதன் பக்கத்திலுள்ள(சப்தரிஷி மண்டலம்) ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் காட்டி இதுதான்  அருந்ததி நட்சத்திரம்  என்று கூறுவர்.இந்த நட்சத்திரத்தைக் கண்ட பின்னர் இது அல்ல அருந்ததி நட்சத்திரம் என்று கூறி  அதன் அருகிலுள்ள உண்மையான  அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுவதுதான் தூல அருந்ததி நியாயம். தெரியாத விஷயம் ஒன்றைக் கற்பிப்பதற்காகக் தெரிந்த விஷயம் ஒன்றை விளக்கி அதன் மூலம் தெரியாத விஷயத்தைக் கற்றுக்கொடுப்பதைப் பற்றியே தூல அருந்ததி நியாயம் சொல்கிறது.

கல்வியிலும் இந்த தூல அருந்ததி முறை உண்டு.அதாவது ஆரம்பக்கல்வி போதிக்கும் ஆசிரியர் சில ஆழமான/நுட்பமான விஷயங்களை சொல்லும்போது மாணவர்கள் குழப்பமடைவார்கள். அதனால் அவர்களுக்கு மேலோட்டமாகத்தான் கற்றுத்தரவேண்டும். பிறகு அந்த மாணவன் அந்த  விஷயத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டான்,  ஓரளவு வளர்ந்துவிட்டான் என்று தெரிந்த    பிறகு அடுத்த நிலைக் கல்வியைக் கொடுக்கவேண்டும். மாணவனுக்கு நல்ல பக்குவம் வந்துவுடன் அந்த விஷயங்களை தெரிந்து கொள்ள/உயர்கல்வி கற்க, ஆரம்பக் கல்விபோதிக்கும் ஆசிரியரே    நல்ல ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் கல்வி பயில அனுப்புவார், என்பதையே இந்த தூல அருந்ததி நியாயம் தெரிவிக்கிறது. அடுத்த நிலைக்கல்வியை கற்பிக்க விஸ்வாமித்திரரே சிறந்த ஆசிரியர் என்று கருதிய வசிஷ்டர், ராமரை அவருடன் அனுப்பியதன் மூலம் தனது பணியைச் செவ்வனே செய்தார்.

ஒரு கேள்வி

இங்கு ஒரு கேள்வி எழலாம்.  வலிமை மிகுந்த மன்னன் தசரதன் வேள்வியைக்காக்க தான் வருவதாக முன்வந்தபோது விஸ்வாமித்திரர் மறுத்த காரணம்?

ராம அவதாரத்தின்படி, ராமர் மூன்று பெண்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அந்த மூன்று பெண்கள் தாடகை, அகலிகை மற்றும் சீதை. தாடகையை அழிக்கவேண்டும்; அகலிகைக்கு சாபவிமோசனம் கொடுத்து, கல்லாய்க் கிடந்தவளை உயிர்ப்பித்து மீண்டும் கௌதமரிடம் ஒப்படைக்கவேண்டும்; அன்னை சீதையின் கரம் பிடிக்கவேண்டும். தசரதர் வந்தால் இந்த பணிகள் நடை பெறமுடியாதே? விஸ்வாமித்திரர் ராம அவதாரம் பற்றி தெரிந்தவராதலால் தசரதன் தன்னுடன்  வரச் சம்மதிக்காமல் ராமனை அழைத்துச் சென்றார்.  

இங்கு கம்பர், எல்லோருக்குமே ஒரு செய்தி சொல்வதாக திரு கம்பவாரிதி ஜெயராஜ் சொல்கிறார்.  அதாவது இனத்தின் அடிப்படையில் தமிழில் எழுத்துக்கள் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. அதாவது உயிர் எழுத்து ஆண் இனம். மெய் எழுத்து பெண் இனம். பெண்கள் நெற்றியில் போட்டுவைப்பதுபோல மெய்யெழுத்துக்களுக்கும் மேலே புள்ளி இருக்கும். உடலுக்கு (மெய்க்கு ) தனி இயக்கம் கிடையாது. உயிரோடு(உயிர்) இணைந்தால்தான் இயக்கம் நடக்கும். உருவம் உள்ள மெய்க்கு உருவம் இல்லாத உயிர் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சீராக இருக்கும். மெய் எழுத்து (பெண்) மூன்று வகைப்படும். வல்லினம், மெல்லினம், இடையினம். அதுபோல  பெண்களை மூன்று வகைப்படுத்தலாம். ஆண்களுக்கு நிகரான வலிமை உள்ளவள் வல்லினம். மெல்லிய தன்மை கொண்டவள் மெல்லினம். இடைப்பட்டவள் இடையினம். வல்லினத்தை அழித்துவிடு. இடையினத்தை காப்பாற்றி ஒதுங்கி விடு. மெல்லினத்தை ஏற்றுக்கொள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதே இங்கு மறைபொருள். . இங்கு தாடகை வல்லினம். அகலிகை இடையினம். அன்னை சீதை மெல்லினம். தாடகையை அழித்து, அகல்யையைக் காப்பாற்றி, சீதையைக் கைப்பிடிக்கவேண்டும் என்ற செய்தியை ராமனுக்குச் சொல்லத்தான், விஸ்வாமித்திரர் மூன்று பெண்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை தமிழின் சிறப்பின் மூலம்  கம்பர் நமக்கு உணர்த்துகிறார்.

ராமர் விஸ்வாமித்திரரைப்  பின் தொடர்தல்

இனி ராமர் லக்ஷ்மணர் விச்வாமித்திரரை தொடர்ந்து செல்வதை, வால்மீகி, கம்பர் எப்படி விவரிக்கின்றனர் என்று  பார்ப்போம்.

வால்மீகி

विश्वामित्रो ययावग्रे ततो रामो धनुर्धर:
काकपक्षधरो धन्वी तं  सौमित्रिरन्वगात्।।1.22.6

कलापिनौ धनुष्पाणी शोभमानौ दिशो दश ।
विश्वामित्रं महात्मानं त्रिशीर्षाविव पन्नगौ।।1.22.7।।
अनुजग्मतुरक्षुद्रौ पितामहमिवाश्विनौ।

तदा कुशिकपुत्रं तु धनुष्पाणी स्वलङ्कृतौ।।1.22.8।।
बद्धगोधाङ्गुलित्राणौ खड्गवन्तौ महाद्युती ।
कुमारौ चारुवपुषौ भ्रातरौ रामलक्ष्मणौ ।।1.22.9।।
अनुयातौ श्रिया दीप्तौ शोभयेतामनिन्दितौ।
स्थाणुं देवमिवाचिन्त्यं कुमाराविव पावकी ।।1.22.10।।

வில்லும், அம்புராத்துணியுடன் ராமரும் லக்ஷ்மணரும் மூன்று தலையுடைய இரண்டு நாகங்கள் போவதுபோல விஸ்வாமித்திரரைப் பின்தொடர்ந்தனர். பிரமனைத்தொடரும் அஸ்வினி குமரரர்கள் போல, சிவனைத் தொடரும் ஸ்கந்தன் போல, பத்து திக்குகளும் பிரகாசிக்கச் சென்றனர் என்று வால்மீகி கூறுகிறார். இதே கருத்தை கம்பரும் சொல்கின்றார்.

வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
ஒன்று தாங்கினான் – உலகம் தாங்கினான். 20

அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென,
சொன்ன மா தவன் – தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். 21

ராமன் கிளம்பிய முறையை வர்ணித்த கம்பன், லக்ஷ்மணனுக்கென்று தனியாக ஏதும் சொல்லாமல் அன்ன தம்பியும் தானும்’ என்று நிழல்போல ராமனைத் தொடர்ந்தான் என்று சொல்லுகிறான்.

துளசிதாசரும், ராமனின் அழகை வர்ணித்து விஸ்வாமித்திரருடன் கிளம்பிய விவரத்தை கீழே சொல்லுகிறார். சிங்கம் போன்ற நடை, சிவந்த கண்கள், விரிந்த நெஞ்சு, திரண்ட புஜங்கள், கரிய மேனி,அழகிய கைகளில் வில்லையும் அம்பையும்  சுமந்து செல்வதாக சொல்லுகிறார்.

पुरुष सिंह दोउ बीर हरषि चले मुनि भय हरन।
कृपासिंधु मतिधीर अखिल बिस्व कारन करन॥208 ख॥

अरुन नयन उर बाहु बिसाला। नील जलज तनु स्याम तमाला॥
कटि पट पीत कसें बर भाथा। रुचिर चाप सायक दुहुँ हाथा॥1

ஆனால் தாடகை சுபாஹு வதத்தை வால்மீகி கம்பர் போல விரிவாகச் சொல்லாமல் சுருக்கமாக முடித்துவிடுகிறார் துளசிதாசர்.

இங்கு முனிவருடன் ராமன் கிளம்பியதை கவிஞர் வாலி அவர்கள் பாடுகிறார்.

கவிஞர் வாலியின் வரிகள்

கமண்டலம் ஏந்தி

கௌசிகன் முன்செல்ல

காண்டீபம் ஏந்தி

இரு குமாரும் பின்செல்ல

புண்ய மூர்த்திகளின்

பொன் உடலைத்தொட்டு

கண்களில் ஒற்றிக்கொண்டது காற்று

வாருங்கள் இப்போது நாமும் விஸ்வாமித்திரர், ராமர் லக்ஷ்மணருடன் புறப்படுவோம்.

கானகம் நுழைதல்

மூவரும் சரயு நதிக்கரையை அடைந்தனர். அப்போது விஸ்வாமித்திரர் ‘இவர்கள் ராஜகுமாரர்கள். அதிக தூரம் நடந்து பழக்கப்படாதவர்கள். காலந்தவறாமல் புசிப்பவர்கள். இது கானகம் ஆதலால் அவர்களுக்கு நிறையச் சிரமம் இருக்கும். அதனால்  அவர்களுக்குப் பசி, தாகம், சிரமம் இவைகள் இல்லாமல் செய்யவேண்டும்” என்று நினைத்துப் பலா, அதிபலா என்ற மந்திரங்களை உபதேசம் செய்கிறார். அந்த மந்திரங்களினால் உண்டாகும்  பலவிதப் பலன்களை அவர் பட்டியலிடுகிறார். “இந்த மந்திரங்கள் பிரம்மாவால் ஸ்ரிஷ்டிக்கப்பட்டவை.

विद्याद्वयमधीयाने यशश्चाप्यतुलं त्वयि।
पितामहसुते ह्येते विद्ये तेजस्समन्विते।।1.22.18।।
प्रदातुं तव काकुत्स्थ सदृशस्त्वं हि धार्मिक।

இந்த இரண்டு மந்திரங்களையும் நீ பெறத்தகுதியானவன்” என்று ராமரிடம் தெரிவிக்கிறார்.

நதியின் மறுபக்கம்

.அன்றைய  இரவு அவர்கள் அங்கு  தங்கி மறுநாள் நதியைக் கடந்து மறுபக்கம் சென்றனர். கங்கையும், சரயூ நதியும் ஒன்று சேருமிடம். அது ஒரு சோலை. அழகு கொஞ்சம் அந்த இடத்தைப் பார்த்து ராமருக்கு மகிழ்ச்சி பொங்கியது. முனிவரிடம் அந்த இடத்தைப் பற்றி விசாரித்தார். இங்குதான் குரு வசிஷ்டர் நம் நினைவில் நிற்கிறார். ராமன் அயோத்தி அரண்மனையிலேயே இருந்தவர். சிறுவன் என்பதால் வெளி உலக அனுபவம் இல்லை. விஸ்வாமித்திரருடன் அனுப்பியதில் ராமனுக்கு வெளி உலகம் பற்றி தெரிய வாய்ப்புக் கிடைத்தது. மற்றும், ராமன் இனி காடுகளில் தங்கப்போவதால் அவருக்கு இயற்கையோடு இணைந்த கல்வி கிடைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

விஸ்வாமித்திரர் அந்த சோலையின் வரலாறைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருசமயம் சிவபெருமான் தவத்தில் இருந்தபோது மன்மதன் (காமன்) காமக் கணைகளை அவர்மீது வீசி தவத்திற்கு இடையூறு செய்தான். இதனால் கோபமடைந்த சிவன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். அங்கங்களை இழந்த காமன் அனங்கன் என்று அழைக்கப்பட்டு அந்த இடத்தை  வால்மீகி அங்க தேசம் என்றழைக்க கம்பரோ காமன் ஆஸ்ரமம் என்று அழைத்தார். ஒரு நாள் அங்கு தங்கிவிட்டு மறுநாள் கங்கையின் மறுபக்கம் சென்றனர்.

தாடகாவனம்

அந்த இடம் ஒரு பயங்கரமான காடு. அடர்த்தியான மரங்களும், கொடிய விலங்குகளும் காணப்பட்டன. விஸ்வாமித்திரரிடம் அந்த இடத்தைப் பற்றி விசாரித்தபொழுது, அவர் “அந்த இடத்தில் மலதம், கருஷம் என்ற தேவர்களால் உருவாக்கப்பட்ட செழிப்பான இரண்டு இடங்கள் இருந்தன. வ்ருத்ரசூரன்  என்றவனை இந்திரன் கொன்றதனால் ஏற்பட்ட உடல் நோயை குணப்படுத்த அங்கு வந்து தங்கி இருந்ததாகவும் தான் குணமடைந்ததால் அந்த இடத்தை நல்ல வளமான பிரதேசமாக மாற்றியதாகவும் சொன்னார்.  அதன் பிறகு சுந்தன் , என்ற யக்ஷன் சுகேதுவின் மகளாகிய தாடகை என்ற ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அழகியைத்  திருமணம் செய்துகொண்டான். அவளுக்கு மாரீசன் என்ற மகன் இருந்தான். அவர்கள் அங்கிருந்தவர்களை துன்புறுத்தித் துரத்திவிட்டு, அந்த இடத்தை வனமாக மாற்றிவிட்டனர். ஒரு முறை அங்கு அகத்தியர் தவம் செய்து கொண்டிருந்தபோது சுந்தன்,  அவருடைய தவத்திற்கு இடைஞ்சல்கள் செய்தான். கோபமுற்ற அகத்தியர், அவனைத்  தனது தவ வலிமையால் எரித்துவிட்டார். இதனால் கோபமுற்ற தாடகை, தனது புதல்வர்களுடன் அகத்தியரைக் கொல்ல வந்தபோது, அவர்கள்  அனைவரையும் இப்போது இருக்கும்  யட்ச தேகத்தை விட்டு அரக்கர்கள் உருவமடைய சாபமிடுகிறார். அகஸ்தியரை ஒன்றும் செய்யமுடியாமல், அவர் வசிக்கும் தேசத்தை அழித்து எல்லோரையும் கொன்று தின்று விடுகிறாள். இதனால் அங்கு யாருமே வராமல் கோரமான நாடாகிவிட்டது. இந்த வனத்திற்கு தாடகா வனம் என்ற பெயர்” என்று சொல்கிறார்.

स्वबाहुबलमाश्रित्य जहीमां दुष्टचारिणीम्।
मन्नियोगादिमं देशं कुरु निष्कण्टकं पुन:।।1.24.30।।

அப்படிப்பட்ட அரக்கியான தாடகையை எனது உத்திரவுக்குக் கட்டுப்பட்டு உனது சொந்த ஆற்றல் மூலம் கொல்ல வேண்டும் என்று வால்மீகி சொல்கிறார்.

வாலியின் வரிகள்

அன்புள்ள ராமச்சந்திரா

அவளுக்கு முடிவுகாலமும்

ஆருயிர்க்கெல்லாம்

விடிவுகாலமும்

உன்னால்தான்

உண்டாகவேண்டும்

பாலைவனம்

இதே இடத்தைப் பற்றி  கம்பர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். சரயூ நதியைக் கடந்து முனிவருடன் அரசகுமாரர்கள் காலைவைத்த  இடம் ஆளரவமின்றி ஒரு பாலைவனம் போல காட்சி அளிக்கிறது.  அதற்குள் நுழைந்தவுடன் ராமன் கேட்கிறான்’ “ஸ்வாமி இதுவரை நாம் பார்த்த இடங்கள் எல்லாமே பசுமையாக இருந்தனவே. இந்த இடம் மட்டும் ஏன் இப்படி வறண்டு ஒரே அனலாக இருக்கிறது” என்று. இங்கு திரு கம்ப வாரிதி ஜெயராஜ் அவர்கள் ஒரு புதிய செய்தி சொல்லுகிறார். தமிழிலே பெருங்காப்பியங்கள் இயற்றும் போது குறிஞ்சி, முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்து நிலங்களைப் பற்றிக் கண்டிப்பாகப்  பாடவேண்டும் என்ற ஒரு விதி முறை உண்டு. அப்படிப் பாடினால்தான் அது பெருங்காப்பியம் என்று ஏற்றுக்கொள்ளப்படும் . இங்குதான் கம்பருக்கு ஒரு சிக்கல். காரணம், தமிழ் நாட்டில் அன்று பாலை என்று ஒரு நிலம் இல்லாமல் இருந்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது. பிறகு  கம்பர் எப்படி பாடுவார்? இந்தப் பாலைவனம் என்பது  இயற்கை நிலமல்ல.   பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறதுமுல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்துநல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்பாலை என்பதோர் படிவம் கொள்ளும்(காடுகாண் காதை, 64-66)

என்று கூறுகிறது. மருதத்தில் மழை பொழியாவிட்டாலும், உழவர்கள் நீரைத்தேக்கிவைத்து அல்லது நிலத்தடி நீரைப் பயன்படுத்தி  விவசாயம் செய்வதால் அது பாலை ஆகாது. மேலும் கடல் இருப்பதாலும் நீர்த்தாவரங்கள் இருக்கும்.  குறிஞ்சி, முல்லையில் நீரை தேக்கிவைக்கும் வசதி இருக்காது.

இப்போது  பாலை நிலத்தை கம்பன் பாடவேண்டிய கட்டாயம். ராமாயணத்தில் கம்பன் பாடிய இடங்கள் மூன்று. அயோத்தி, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை. இந்த மூன்று இடத்திலும்  பாலையைப் பாடுகின்ற வசதி கம்பனுக்கு இல்லை. காரணம் அயோத்தியில் தசரதன் அறவழியில் ஆட்சி புரிந்துவந்தான். ஆகையால் அங்கு குறித்தகாலங்களில் தவறாமல் நல்ல மழை பெய்தது. அதனால் கம்பனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிஷ்கிந்தை மற்றும் இலங்கையில் முறையே வாலியும் ராவணனும் ஆட்சி புரிந்தனர். அவர்கள் அறவழியில் ஆட்சி செய்யாவிட்டாலும் தேவர்களை மிரட்டியே ஆட்சி புரிந்தனர்.   மழைத்தெய்வமான  வருணன், வேறு வழியில்லாமல் மழை பொழிந்துகொண்டிருந்தான். ஆகையால், மழை இல்லாமல் ஒரு இடத்தைக் காட்ட கம்பனுக்கு சிரமமாய் இருந்தபடியால், இந்த இடத்தைப்(வால்மீகியின் தாடகா வனத்தை) பிடித்துக்கொண்டான். விஸ்வாமித்திரர் சொல்லுகிறார் ‘இது பாலைவனம் அல்ல. இந்த இடம் தாடகை என்ற அரக்கியின் கட்டுபாட்டில் உள்ளது. சோலைவனமாக இருந்த இடம் இப்போது பாலைவனமாக ஆகிவிட்டது”

வாலியின் வரிகள்

கங்கையை நாவாயால்

கடந்தார்கள்

பாலைவனம் ஒன்று

கண்ணில் பட்டது – அங்கு

கண்ணும் சுட்டது

கால் வைத்த

மண்ணும் சுட்டது

அந்த இடத்தைப் பற்றி கம்பன்

தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே

கேடுகள் விளைவதற்கு காரணமான இரண்டு வினைகளையும் அழித்து நீக்கர்கரியமூன்று வகையான பகைகளின் அரண்களையும் வென்று முத்தியை அடைய விரும்புகிறவர்களின் மனத்தையும், பொன்னையும் விலையாகப் பெற்று போகத்தை விற்கும் பெண்களது மனத்தையும் போல பற்றற்று இருந்தது பாலை என்று பாடினார்

கொடிய வெப்பத்தைக் கக்கும் அந்த பாலைவனத்தைப் பற்றி கம்பன்  மிகச் சிறப்பாகப் பாடியுள்ளான். குளிர்ந்த அரண்மனையில் வசித்த  இளம் ராஜகுமாரர்கள் இந்த வெப்பத்தைத்  தாங்க மாட்டார்கள் என்று கருதி அவர்களுக்கு பலா, அதிபலா என்ற மந்திரங்களை இங்கு உபதேசித்ததாக கம்பர் சொல்லுகிறார். அந்த மந்திரங்களை கேட்ட மாத்திரத்தில் அந்த இடத்தில் வெப்பம் குறைந்தது என்று கம்பன் சொல்லுகிறான்.

வடமொழியில் காப்பியங்கள் இப்படித்தான் பாடவேண்டும் என்ற விதிமுறைகள் உண்டா என்று தெரியவில்லை? மேலும் வால்மீகி ஒரு முனிவர். உள்ளது உள்ளபடி சொல்பவர். அவரை எந்தக் கட்டுப்பாடுகளும் ஒன்றும் செய்யமுடியாது. ஆதலால் வால்மீகிக்கு கம்பரைப் போல  பாடவேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்திருக்கலாம் . மேலும்  அங்கு சரயு, கங்கை போன்ற நதிகள் இருந்தன. ஆதலால் அவர் வனம் என்று பாடிவிட்டார். இங்குதான்  கம்பனின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

एतत्ते सर्वमाख्यातं यथैतद्दारुणं वनम्।
यक्ष्या चोत्सादितं सर्वमद्यापि न निवर्तते।।1.24.32।।

வால்மீகி கோரமான நாடு  என்ற சொன்ன இடத்தைப்  பாலை என்று சொல்லி  அதனைப் பாடுகிறான்…

வாலியின் வரிகள்

அரசகுமாரர்களே!

அற்றை நாளில் இது

வாய்க்காலும்

ஏர்க்காலும்

வலம் வந்த நிலம்

அகத்தை அடக்கிய

அகத்திய முனிவர்

தவம் செய்த தலம்

அழகிய நிலத்தை

அழுக்கு நிலமாக

ஆக்கியவள் தாடகை

வால்மீகி, தாடகை எல்லோரையும் அழித்ததால் யாரும் வராமல் வனம் வளம் இழந்தது என்று சொல்கிறார். கம்பரோ தாடகை இடைவிடாது அழித்துக்கொண்டே இருந்ததால் அந்த இடம் பாலை ஆயிற்று என்கிறார்

ராமர் தாடகையைப்பற்றி விசாரிக்கிறார்  அதற்கு விஸ்வாமித்திரர் சொல்வதாவது.

வாலியின் வரிகள்

பெண் இனத்தில் அவள்

மெல்லினமும் அல்ல

இடையினமும் அல்ல

வல்லினம் மனம்

கல்லினம் குணம்

அவள் பொய்யினம்

தாடகை இங்குதான்

சஞ்சரிக்கிறாள்

கண்ணில் தென்படுவோரை

சங்கரிக்கிறாள்

மனிதன் அவளுக்கு மதிய  உணவு

அவன் செந்நீர் அவளுக்கு

பருகும் தண்ணீர்

பிணங்களே அவளுக்கு பஞ்சுமெத்தை

நிணங்களே அவள்

நீண்டகூந்தலுக்கு பூசும் நெய்

உதிர்த்த தலைகளை

மாலையாகவும்

உரித்த தோல்களை

சேலையாகவும் உடுத்துகிறாள்

பல்லுயிரையும் படாதபாடு

படுத்துகிறாள்

தாடகை வருகை

இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே நிலம் அதிர்ந்தது. மானிடர்களின் வாசனையைப் பிடித்தே, இன்று நல்ல விருந்து கிடைத்தது என்று எண்ணி புயல் போல கிளம்பி வந்து கொண்டிருந்தாள்  தாடகை . கையில் திரிசூலம், இடையில் யானைகளைக் கோர்த்து அணியப்பட்ட ஒட்டியாணம், சிறு சிறு மலைகளான  பரல்களுடன் கூடிய சதங்கைகளை கால்களில் அணிந்து  தாடகை வந்து கொண்டிருந்தாள். அவள் வரும் வேகத்தில் மலைகளும் பின்தொடர்ந்தன. யமனும் ஓடி ஒளிந்துகொண்டான். அவள் வரும் வேகத்தைக் கம்பர் ஒரு அசைபோடும் சந்தப்பாடலால் பாடுகிறார்.

கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 3

கண்ணை மூடிக்கொண்டு நல்ல இசையுடன் சொல்லி பாருங்கள். தாடகை நேரில் வருவது போன்று இருக்கும்.

வாலியின் வரிகளில்

கௌசிக முனிவன் இவ்வாறு’

கூறி முடிக்கையில்

குன்று அதிர்ந்தது

எங்கும் கானல் அடர்ந்தது

கருத்த வானம் வெளிறியது

கூகை வாய்விட்டு அலறியது

தாடகை வந்தாள் சூல்

தடக்கை தாங்கி நின்றாள்

மானிடரைக் கண்டதும்

கர்ஜித்தாள்

கெட்ட வார்த்தைகளால்

அர்ச்சித்தாள்

நாயகன் ராமன்

நடுமுள் நடுங்காத

துலாக்கோல் போல் நின்றான்

இவள்தான் தாடகை

தாடகையைப்பற்றி விஸ்வாமித்திரர் சொல்வதாக கம்பர் சொல்கிறார் ‘அவள் பெண் உருக் கொண்டவள்தான் என்றாலும் பூமியையே பெயர்த்தேடுக்கவும், கடல் நீரை முழுவதுமாக அள்ளிப் பருகவும், வானை முட்டி இடிக்கவும் வல்லமை படைத்தவள். மலைகளைப்போன்ற தனங்களும், நஞ்சு உமிழும் கண்களும், இடிபோன்ற ஆரவாரக்குரலும், ஊழித்தீ போன்ற செம்பட்டை மயிரும், இருபிறை போன்ற கோரப் பற்களும்,கடல் எழுந்து நடப்பது போன்ற உருவமும் கொண்டவள் என்று வர்ணிக்கிறார்.  தாடகையின் தோற்றத்தையும், சீற்றத்தையும்  வர்ணிக்கும் இடங்களில் எல்லாம் கம்பன் வன்சொற் றோடராலேயே முழுச் செய்யுளையும் அமைத்துள்ளான்  என்று சி. கணபதி அவர்கள் எழுதியுள்ளார்

இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள். 30

தாடகையைக் கண்டதும், முனிவர் ராமனிடம் ‘ராமா நான் சொன்ன தாடகை இவள்தான். வித்தியாசமில்லாமல் எல்லோரையும் கொன்று புசித்துக்கொண்டிருப்பவள்.

வாலியின் வரிகள்

அன்புள்ள ராமச்சந்திரா

அவளுக்கு முடிவுகாலமும்

ஆருயிர்க்கெல்லாம்

விடிவுகாலமும்

உன்னால்தான்

உண்டாகவேண்டும்

கொடியவள் கொல்லப்படவேண்டியவள். உடனே அம்பை விடு என்று சொல்கிறார்.

ராமனின் திகைப்பு

ராமனோ ஒரு கணம் திகைத்தான். அவனுக்கு தனது குரூ   வசிஷ்டர் சொன்ன ‘மாதரையும் தூதரையும் கொல்லாதே’ என்ற சொன்ன அறிவுரைகள் நினைவிற்கு வந்தன.

அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், ‘ஆவி
உண்’ என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
‘பெண்’ என மனத்திடை பெருந்தகை நினைந்தான். 35

முனிவருடைய கருத்து தாடகையைக் கொல்லவேண்டும் என்றாலும், பெருந்தகை ராமன். “என்ன இருந்தாலும் அவள் ஒரு பெண்” என்று நினைத்து அம்புதொடுக்காமல் திகைத்து  நின்றான். இங்கு தான் ராமனின் கம்பீரம் ஆரம்பம்.

ராமனின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட விஸ்வாமித்திரன், ‘ராமா யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும், மாது என்று எண்ணுவதோ? இவளைப் பெண் என்று நினைக்காதே. இந்த உலகத்தையே சுருட்டித் தனக்குள் வைத்துக்கொண்டவள் இவள் என்றதும், எங்களை எப்படி விட்டு வைத்துள்ளாள் என்று எண்ணுகிறாயா? நாங்கள் தவத்தாலும் விரதத்தாலும் ஊன்வற்றி இளைத்தவர்கள் ஆதலின் சாரமற்றவர்கள் (கோது) என்று எங்களை ஒதுக்கிவிட்டாள். பற்பல உயிர்களையும் கொன்று தின்பவள். அவளைக் கொல் என்று முனிவர் சொன்ன பிறகும்  ராமன் மீண்டும் மௌனமாக இருந்தான்.

முனிவர் “இவள் பெண்ணல்ல இவளிடம் இரக்கம் காட்டக்கூடாது” என்று சொல்லியும் ராமன் தயக்கம் காட்டுகிறான். மேலும் முனிவர் ராமரிடம் ‘உன்னைத்தான் முதன் முதலில் பெண்ணை வதம் செய்யும் முறையற்ற காரியத்தைச் செய்யச் சொல்வதாக எண்ணாதே. பெரியவர்கள் பலரும் அதைச் செய்துள்ளனர். இந்திரன் மந்தரையைக் கொன்றான். மகாவிஷ்ணு பிருகு மனைவி, ப்ரஹஸ்பதியின் தாயார் காவ்யமாதாவை  வதம் செய்தார். பரசுராமர் தனது தாயையே வதம் செய்தார். ஆதலால் இதை அருவருப்பாக நினைக்காதே என்று சொன்னார்.

விஸ்வாமித்திரர் மேலும்  ‘ராமா  இவளையும் எமனையும் ஒப்பிடமுடியாது. ஒருவனின் விதி முடிந்தால் தான் யமன் அவன் உயிரைப் பறிப்பான். ஆனால் இவளோ மனித வாசனை உணர்ந்ததுமே உயிரைப் பறிப்பாள்”  என்றார்.

சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்

அப்படியும் ராமன் மௌனம் சாதித்தான்.

(விஸ்வாமித்திரர் கேட்கிறார் “நாற்றத்தை உணர்தலும் தின்ன விரும்புகின்ற யமன் உண்டோ?” நாம் வாசனை நுகர்தல் என்று படித்துள்ளோம் .கேட்டுள்ளோம். நாற்றம் கேட்டல் என்று கேள்விபட்டதே இல்லை. புலன் இந்திரியங்களின் செயல்பாடு தூரத்தைப் பொறுத்தது. தூரத்தில் பார்க்கும் பொருள் அருகில் வந்தவுடன்தான் வாசனை தெரியவரும். தாடகை தூரத்தில் உள்ளபோதே  வாசனையை நுகர்ந்துவிடுவாள் என்று ஒரு சாராரும் விஸ்வாமித்திரர் பயம் மிகுதியால் வாய்க்குழறி நாற்றம் கேட்டலும் என்றுசொல்லிவிட்டார் என்று மற்றொரு  சாராரும்  சொல்லுகின்றனர்.)

தொடரும் குழப்பம்

ராமனுக்குச் சற்றுக் குழப்பம். குரு வசிஷ்டர் மாதரைக் கொல்லாதே என்றார். இவரோ கொல் என்கிறார்.  ராமனின் குழப்பத்தைப் புரிந்துகொண்ட விஸ்வாமத்திரர்,  ராமரிடம், ‘ராமா வசிஷ்டர் பெண்ணைக் கொல்லாதே, அது தர்மமாகாது  என்று சொன்னாரே. பெண் என்பவள் யார் என்று சொன்னாரா? அல்லது நீ வினவினாயா? ஒரு பொருளின் குணத்தை வைத்துத் தான் அதன் பொருள் அறியப்படும். தர்மம் என்பது வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பொருள் படும். வடிவத்தை வைத்து ஒரு பொருளின் குணம் அறியப்படுவதில்லை. பெண் என்றால் பெண்மை நிறைந்தவள். ஆக பெண்ணைக்கொல்லாதே என்றால் பெண்மையோடு இருக்கும்  பெண்ணைக் கொல்லாதே என்ற பொருளே தவிர உருவத்தை வைத்து முடிவு எடுக்கவேண்டிய விஷயம் அல்ல.  ஒரு செயல் தர்மமா அதர்மமா என்பது உருவத்தை வைத்தோ செயலை வைத்தோ தீர்மானிக்காமல்  அந்த செயலைச் செய்பவனின் எண்ணத்தை வைத்தே தீர்மானிக்கபடவேண்டிய விஷயம்”  (உதாரணத்திற்கு ஒருவனைக் குத்திக் கிழிப்பது என்பது அதர்மமான செயல் மட்டுமல்ல சட்டப்படியும் தவறு. ஆனால் அதையே ஒரு ரணவைத்தியன் செய்யும்போது அது நோயாளியைக் காப்பாற்றும் செயல் என்பதால் தர்மம் ஆகிறது சட்டபடியும் சரியான செயல். ஆக செயலைப் புரிபவனின் எண்ணத்தைப் பொறுத்தே அச்செயல் தர்மமா அல்லது அதர்மமா என்று தீர்மானிக்கப்பட முடியும்.)

“ராமா  நான் தருமத்தைக் கூறினேனே தவிர, இவள் மேல் உள்ள கோபத்தால் இவளைக் கொல்லும்படிச் சொல்லவில்லை. இனியும் தாமதியாமல் உடனே இவளைக் கொல்வாயாக.” என்று விஸ்வாமித்திரர் கூறினார்.

வாலியின்  வரிகளில்

ஓ ராமா இவள் பெண்ணல்ல

பெண்  உருக்கொண்ட பேய்

பேய்களுக்கேல்லாம் தாய்

காலும் கையும் முளைத்து

வந்த ஆலகாலம்

இவளைக் கொன்றால்

உன் புகழ் நிற்கும்

காலகாலம்

சிரஞ்சீவி ராமனே

தாடகையின் சிரம் சீவி

தர்மத்தைக்காப்பாய்

(இங்கு ஒரு கேள்வி  எழலாம். தவ வலிமை நிறைந்த விஸ்வாமித்திரால் அந்த அரக்கர்களை அழித்து வேள்வியைக் காப்பாற்றிக்கொள்ள இயலாதா?  இப்போது  கேள்விக்கு வருவோம். தவ வலிமை மிகுந்த விஸ்வாமித்திரரே அரக்கர்களை அழித்து இருக்காலாமே. ஏன் ராமனை அனுப்பும்படி கூறினார்? உண்மைதான். திரிசங்குவிற்காக புதிய ஸ்வர்க்கத்தையே படைக்கும் தவ வலிமை கொண்டவர்  விஸ்வாமித்திரர். அரசர்கள் யாரும் அருகே இல்லை என்பதால், தனது தவத்தைக் கலைத்த தாடகையின் கணவனான சுந்தனை எரித்தார் அகத்தியர். தாடகை குடும்பத்தினரை அரக்க்கர்களாகும்படி சபித்தார். அப்படி தவ வலிமை படைத்தவர்கள் முனிவர்கள். அப்படி இருக்கும்போது ராமனை அனுப்பிவைக்கும்படி கோரியதன் காரணம் என்ன?

இதனை விளக்க வால்மீகி கூறுவதவாது ‘நான்கு வர்ணத்தவர்களின் நலனுக்காக அரசர்கள் இத்தகைய காரியங்களை செய்யவேண்டியது வரும். மக்களையும், துறவிகளையும் காப்பதற்காகக் கொடிய செயல்களையும் பழி வரக்கூடிய செயல்களையும், பாவங்களையும் செய்தே தீரவேண்டும். ஆளப்பிறந்தவர்கள் எப்போதும் இயற்றவேண்டிய  அறம்  இது, அறத்தை நிலைபெறுத்த மறத்தை விலக்குவதே முறை என்று காரணம் கூறுகின்றார்.

नृशंसमनृशंसं वा प्रजारक्षणकारणात्।
पातकं वा सदोषं वा कर्तव्यं रक्षता सता।।1.25.17।।

राज्यभारनियुक्तानामेष धर्मस्सनातन:
अधर्म्यां जहि काकुत्स्थ धर्मोह्यस्या  विद्यते।।1.25.18।।

கம்பரோ “கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர் பிறங்கடைப் பெரியோய்! “ அரசகுமாரனே இது உன் கடமை என உணர்த்துகிறார். “ பின்னும் ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்”  என முனிவர் ஏவினார் என்று கம்பர் உரைக்கிறார். ஆக இந்த வேலைகளை அரசர்கள் மட்டும்தான் செய்யவேண்டும். அதுபோக, அரசன் கடமையை முனிவன் ஆற்றினால் அவனது தவ வலிமை குறையும் என்பதை நன்கு உணர்ந்தவர் விஸ்வாமித்திரர். அரசகடமையை அரசகுமாரனாகிய ராமன் செய்யப் புகழ் உண்டாகுமே அன்றி பழி உண்டாகாது என்பதை “ஓது கீர்த்தி உண்டாயது அல்லால், இடை ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்” என்று உணர்த்துகிறார்.

மேலும் பலா அதிபலா மந்திரங்களை உபதேசிக்கும்போதே வால்மீகி ராமரை நோக்கி

 सौभाग्ये  दाक्षिण्ये  ज्ञाने बुद्धिनिश्चये।
नोत्तरे प्रतिवक्तव्ये समो लोके तवाऽनघ।।1.22.15।।

முடிவு எடுப்பதில் உனக்கு இணையானவர் இந்த பூமியில் எவரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் ஆகவே ராமர் விரைந்து முடிவெடுக்கவேண்டும் என்று விரும்புகிறார்.                                 

இறுதிச்சுற்று

ராமரும் மனம் இசைந்து “குருவே தாங்கள் பணிப்பது எதுவாயினும் அதனைச் செய்து முடிப்பது என் கடமை. வேதங்கள் செய் என்று சொல்வதை தாங்கள் செய்யாதே என்று சொன்னாலும் வேதங்கள் செய்யாதே என்பதை தாங்கள் செய் என்று சொன்னாலும் அதன்படி நடப்போம்”

ஐயன் அங்கு அது கேட்டு, ‘அறன் அல்லவும்
எய்தினால், “அது செய்க!” என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்.)

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தாடகை ராமரைத் தாக்க ஆரம்பித்தாள். இனியும் விட்டுவைக்கக்கூடாது என்று கருதிய  ராமன் கருநிற  தாடகை மீது அம்பை எய்தான்.

வாலியின் வரிகள்

அனந்த ராமன்

கைகளில் நாணேற்றி

கணையை வைத்தான்

 அவன் கோபத்திற்கு

அணையை வைத்தான்

அவள் கல்மாரி பெய்தாள்

ராமன் வில் மாரி  பெய்தான்

மாறி மாறி

மாரி பெய்ய

மந்திரம் ஓதி

மற்றொரு கணையை

மன்னவன் எய்ய

விழுந்தாள் தாடகை

எழுந்தது தர்மம்

—–

கலாநிதி முருகு தயாநிதி

தொகுத்த

ராமர் அம்மானையிளிருந்து

ஞானமுனி சொல்கேட்டு

நாராயணர் நடந்து

தோல்புரளும் அம்பைத்தொடுத்து

மிகவாங்கி சென்று நின்று

அப்போ ராமபாணம் தொடுத்தார்

ஒன்றிரண்டு மூன்று

நாலைந்து துண்டாய் விழுந்தாள்

ராமன் எய்த அந்த அம்பு கல் போன்ற அவளது நெஞ்சில் புகுந்து  சுழன்று அற்பர்களுக்கு நல்லோர் சொன்ன அறிவுரை எப்படி ஒரு காதில் புகுந்து மறு காது வழியாகப் போகுமோ அப்படிப்போனது என்று கம்பர் பாடுகிறார்.

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும்வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காதுஅப்புறம் கழன்றுகல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனபோயிற்று அன்றே

(மீண்டும் கம்பரின் புலமை இங்கு வெளிப்படுகிறது. உவமானங்கள் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. இங்கு ராம பாணத்தின் வேகத்திற்கு, மின்னலைக்கூட உதாரணமாகச் சொல்லாமல், சொல்லை உதாரணமாகச் சொல்லுகிறார். அந்த காலத்தில் குழந்தைகள் ‘ராமன் விட்ட பாணம்  திரும்பி பார்த்தா காணோம்” என்று விளையாடுவார்கள் . இன்னொரு உதாரணம் சொல்லலாம். இது கொரானா நேரம். பத்து நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவன் திடீரென்று தும்மல் போடுகிறான். போட்டுவிட்டு கண்திறந்து பார்க்கையில் நண்பர்கள் ஒருவரையும் காணவில்லை..

 ஆனால் கம்பர் இங்கு “சொல்” என்பதற்கு முனிவர்களின் சாபத்தைத்தான் பொருள் கொள்கிறார்  என்று சில சான்றோர்கள் சொல்கின்றனர். காரணம் முனிவர்களின் சாபம் உடனே பலிக்கக்கூடியது.ஒரு உதாரணம் சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. மாதவியிடம் பொருளை எல்லாம் இழந்த கோவலன்மீண்டும் வணிகம் செய்து பொருளீட்டுவதற்காகதன் மனைவி கண்ணகியுடன்மதுரை நகர் நோக்கி சென்று கொண்டிருந்தான்வழியில்கவுந்தி அடிகள் எனும் தவ மூதாட்டியை சந்திக்கஅவர்களுக்கு வழித் துணையாக வந்தார்கவுந்தி அடிகள். மூவரும் பயணத்தைத் தொடரவழியில்காமுகன் ஒருவன்தன் காதற் கிழத்தியோடு வந்தான். அவ்விரு வரும்கோவலன் – கண்ணகியின் கண்ணியமான அழகைக் கண்டு வியந்துகவுந்தி அடிகளிடம், ‘அம்மையே… மன்மதனும்ரதியையும் போன்றிருக்கும் இவர்கள் இருவரும் யார்?’ எனக்கேட்டனர். “இவர்கள் என் மக்கள்” என்றார் கவுந்தி அடிகள். அதைக் கேட்டதும்இருவரும் நகைத்து, ‘அம்மையே… ஒரு வயிற்றில் பிறந்தோர்கணவன்மனைவியாவதுநீர் கற்ற நீதி நூல்களில் உள்ளதோ…‘ எனச் சொல்லிக் கேலி செய்து சிரித்தனர். இதைக் கேட்டுசெவிகளைப் பொத்திநடுங்கி நின்றாள்கண்ணகி. இதனால்கோபமடைந்த கவுந்தி அடிகள், ‘முறை தவறிஇழிவாக பேசிய நீங்கள் இருவரும்முள்ளுக்காட்டில் முது நரிகளாகப் போகக் கடவது…‘ எனசாபம் கொடுத்தார். உடனே அவர்கள் நரிகளாக மாறினர்)

தாடகையின் முடிவு

பிரளய காலத்தில் வீசுகின்ற சண்ட மருதக்காற்றில் மோதி சிதைந்துபோகின்ற கரிய மேகம் போல அந்த அரக்கி ராமன் தொடுத்த அம்பால் அடிபட்டு கீழே விழுந்தாள் . அவள் உயிர் நீங்கிய பிறகு அரக்க வடிவம் நீங்கி முந்தைய வடிவம் பெற்று ராமனை வணங்கி நல்லுலகம் எய்தினாள் என்று ஆத்யாத்ம ராமாயணம் கூறுகிறது. துளசிதாசரும் அதையே சொல்கிறார்.

चले जात मुनि दीन्हि देखाई। सुनि ताड़का क्रोध करि धाई॥
एकहिं बान प्रान हरि लीन्हा। दीन जानि तेहि निज पद दीन्हा.

ஆனால் வால்மீகி, கம்ப ராமாயணங்களில் அப்படிச் சொல்லப்படவில்லை. தாடகை இறந்தவுடன், தேவர்கள் மனம் மகிழ்ந்து விஸ்வாமித்திரரிடம் தெய்வீக ஆயுதங்களை ராமருக்கு வழங்கும்படி பணிக்கின்றனர். விஸ்வாமித்திரரும் அவ்வாறே செய்கிறார். இங்கு மீண்டும் நல்லாசிரியர் வசிஷ்டர் மீண்டும் நம் நினைவுக்கு வருகிறார். அவர் பரிந்துரை செய்ததால்தானே தசரதர் ராமரை முனிவருடன் அனுப்பச் சம்மதித்தார். தெய்வீக ஆயுதங்கள் கிடைத்தன. ராவணனுடன் பின்னால் நடத்தப்போகும் போருக்கு ஒரு பயிற்சிப் போராக தாடகை வதமும் அமைந்தது. ஆகையால் வசிஷ்டர் ஒரு நல்லாசிரியரே..

இங்கு சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டும்.

வால்மீகி ராமாயணத்தில்  தாடகையின் பிள்ளை மாரீசன் என்று மட்டும்  குறிப்பிடப்பட்டுள்ளது. சுபாஹு  ஒரு மகன் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் கம்ப ராமாயணத்தில் கம்பர் தாடகையின் புதல்வர்கள் மாரீசன், சுபாகு என்று குறிப்பிட்டுள்ளார்.

வால்மீகி ராமயணத்தில் விஸ்வாமித்திரர் தசரதரிடம் “மாரீசனும் சுபாஹுவும் என்ற அரக்கர்கள் தனது யாகத்தைக் கெடுப்பதாக சொல்லி இருக்கிறார். கம்பரோ அவர்கள் பெயரைக் குறிப்பிடாமல் நிருதர்கள் என்றே சொல்லுகிறார்.

இங்கே இப்போது ஒரு கேள்வி எழுகிறது. வால்மீகி. கம்பர் இருவருமே விஸ்வாமித்திரர் தசரதனிடம் தாடகையைப்பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததன் காரணம் என்ன என்று தெரியப்படுத்தவில்லை.

தசரதர்  சிறுவன் ராமரை அவ்வளவு சுலபமாக அனுப்பிவிடமாட்டார் என்று விஸ்வாமித்திரருக்குத் தெரியும். சுபாஹு, மாரீசன் இருவரோடு தாடகை என்ற அரக்கியிடமும் யுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னால் கண்டிப்பாக அனுப்பமாட்டார். மேலும் ஒரு நல்ல யுத்தவீரன் ஒரு பெண்ணைக் கொல்லத்  தயங்குவான். அதுவும் ஒரு வீரன் தனது கன்னிப்போரில் ஒரு பெண்ணுடன் போர் புரிய விரும்ப மாட்டான். இதனால்தான் முனிவர் தசரதனிடம்  இந்தப் பேச்சை எடுக்கவில்லை போலும்.

தாடகையைக் கொல்லும் விவகாரத்தில் முதலில் முனிவர் சொல்வதைக் கேட்பதாகச் சொன்னாலும் ராமருக்கு “இவள் பெண்ணாயிற்றே. இவளைக் கொள்ளாமல் இவள் அங்கங்களை வெட்டிவிட்டால் இவளால் முன்பு போல இயங்கமுடியாதே.’ என்று அவள் மீது இரக்கப்பட்டு அவளுடைய அங்கங்களை வெட்டிவிடுவதாக வால்மீகி சொல்கிறார். ஆனால் கம்பர் அப்படிச் சொல்லவில்லை. இனி முடியாது என்ற நிலை வந்தபோதுதான் அவர் தாடகையைக் கொல்கிறார். ஆக ஒரு எதிர்கால அரசன் என்ற முறையில் ராமர் அவசர முடிவெடுக்காமல் கூடிய மட்டும் பெண்ணைக் கொல்லக் கூடாது என்ற உறுதியான மனநிலையில் இருந்தது அவருடைய உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது. அதேநேரம் ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதையும் தெரிந்து அதன்படி செயல் பட்டார்.

எல்லோருக்கும் நன்றி.

அடுத்து அகலிகை சாப விமோசனம்

பதிவின் வடிவம்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

வெகு நாட்களாக சீதா கல்யாணம் என்று ஒரு தொடர் எழுதவேண்டும் என்ற ஆசை. சீதா  கல்யாணம் என்ற திரைப்படம் பார்த்து இருப்பீர்கள். பிரசங்கங்கள், சொற்பொழிவுகள் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவைகள் கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் எதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும். வால்மிகீ, கம்பர் மற்றும் துளசிதாசர் இந்த  மூவரின்  ராமாயணங்களிலிருந்து  முக்கியமான அம்சங்களை எல்லாம் தொகுத்து, மற்றும் பெரும் அறிஞர்கள், ஆன்மிகவாதிகள் இது சம்பந்தமாக என்னென்ன  பேசி உள்ளனர், எழுதி உள்ளனர்  என்பதையும் சேர்த்து   சீதா கல்யாணம் உருவாக்கினால் என்ன என்ற கேள்வி எனக்குள் பிறந்தது. ஆனால், ஒரு முன் /முதல் முயற்சியாக ராமாயணத்தில் விஸ்வாமித்திரரின் பங்கு பற்றி வால்மீகி, கம்பர்,  துளசிதாசர் ஆகியோரின் ராமாயணங்களில்  என்ன சொல்லப்பட்டுள்ளது  என்பதை விளக்கும் நீண்ட கட்டுரைதான் இது.  . இங்கு பல அறிஞர்கள் சான்றோர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் இணைத்துள்ளபடியால்  அவர்கள் எல்லோருக்கும் என் உளம்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஸ்வாமித்திரரைப்பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. கோபத்திற்கு உதாரணமாக இருவரைக் குறிப்பிடலாம் ஒன்று துர்வாசர் மற்றொருவர் விஸ்வாமித்திரர். கௌசிகன் என்ற அரசன் , வனத்தில் வசிஷ்டரை ஒருமுறை சந்தித்தபோது,  பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த காமதேனுவைக் கண்டார். வசிஷ்டரின் தவவலிமையைத்  தெரிந்து கொண்ட கௌசிகர் அரசனால் வெல்லமுடியாததை தவத்தால் வெல்லலாம் என தெரிந்துகொண்டார். காமதேனுவை கைப்பற்றும் நோக்கில் ஒவ்வொரு முறையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவம்செய்து வசிஷ்டருடன் போர் செய்தும், அவரால் வெல்லமுடியவில்லை. இறுதியில் தவம் செய்து வசிஷ்டரிடம் பிரம்மரிஷி என்ற பட்டம் வென்றார். அந்த கௌசிகன் தான் விஸ்வாமித்திரர்.

அரிச்சந்திரன் சந்திரமதியைப் பிரித்து துன்பம் விளைவித்த  விஸ்வாமித்திரர், இனி நல்லதே செய்யவேண்டும் என்று எண்ணினார். உலக நன்மைகள் கருதி. யாகங்கள் செய்ய ஆரம்பித்த போதெல்லாம், தடாகையின் புதல்வர்களான சுபாகு மற்றும் மாரீசன், இதர அரக்கர்களுடன் இணைந்து யாக குண்டத்தில் மாமிசங்கள் மற்றும் இரத்தத்தைப் போட்டு யாகத்திற்கு இடையூறு விளைவித்தனர். விஸ்வமாத்திரர் நினைத்தால் ஒரு நொடியில் அவர்களை சாம்பலாக்கமுடியும். ஆனால் யாகத்திற்கு இடையே எழுந்தால் யாகமும் தடைப்படும் அதனால் பலன் கிடையாது என்று தெரிந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தபோது. ராவணனை அழிக்க பாற்கடலில் உள்ள திருமால் நெருப்பிலும் திருமகள் நிலத்திலும் அவதாரம் எடுத்துள்ளனர் என்று தெரிந்து கொண்டார். இப்படி பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துவைக்கும் பணியில் வெற்றிபெற்ற அவரது கதாபாத்திரம் ராமாயணத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று. அப்படி இணைத்ததொடு ராமாயணத்தில் அவர் பணி முடிவடைந்தது.

யாகத்தில் தனக்கு துணை நிற்க இராமனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக்கொள்ள விஸ்வாமித்திரர் அயோத்தி விரைகிறார்.

இனி மேலே…

வால்மீகி ராமனின் சமகாலத்தவர் . அவரை மனித அவதாரமாகத்தான் பார்த்தார். ஆனால் துளசிதாசரும் கம்பரும் ராமரை தெய்வ அவதாரமாகப் பார்த்தனர். வால்மீகி முனிவர் உள்ளது உள்ளபடி சொல்பவர் துளசிதாசரும் இல்லறத்திலிருந்து துறவறத்தை மேற்கொண்டவராதலால் அவரது கவிதைகளில் பக்தி ரசம் மேலோங்கி இருக்கும். ஆனால் கம்பரோ வைஷ்ணவர் என்ற முறையில் தீவிர ராம பக்தராக இருந்தாலும், புலவராகவும் இருந்ததால் அவரது பாடல்களில் கற்பனை மேலோங்கி இருக்கும்.

துளசி தாசர், விஸ்வாமித்திரர்  யாகத்தை காரணமாக வைத்து திருமாலின் அம்சமான ராமரின் பாதகமலங்களை தரிசிக்கவிரும்பி அயோத்தி கிளம்பினார் என்று முடித்துவிட்டார். தன்னுடைய யாகத்தை பாதுகாக்கும் பொருட்டு ராமர் லக்ஷ்மணர் இருவரையும் தன்னுடன் அனுப்பவேண்டும் என்று யாசித்து முதலில் மறுத்த மன்னன் தசரதன் அவர்களை அனுப்பினான் என்று சுருக்கமாக முடித்துவிட்டார்.

ஆனால் வால்மீகியும் கம்பனும் சற்று விரிவாக  எழுதுகின்றனர்.

முனிவனுக்கு வரவேற்பு

முதலில் வால்மிகியின் தசரதன் விஸ்வாமித்திரரை வாசலில் வரவேற்று உபசரித்து அவருக்குப் பாத பூஜை செய்தான். அதை ஏற்றுக்கொண்ட முனிவர் மன்னனிடம் நாடு, மக்கள், உறவினர் எல்லோரின் நலம்  பற்றி விசாரித்தார். தசரதன் மகிழ்ச்சியுடன் அவரிடம் ‘பிறப்பு இறப்பு இவைகளால் துன்புறும் மனிதர்களுக்கு  அவைகளை போக்கும் அமிர்தம் கிடைத்தால் எப்படியோ, பல வருடங்களாக மழையில்லாமல் வாடின இடத்தில் தொடர்ந்து மழை பெய்தால், எப்படி மக்கள் மகிழ்வார்களோ, நமக்கு இனி குழந்தைப்பேறு இல்லை என்று நினைத்து, அந்த ஆசையை விட்டவனுக்கு திடீரென்று குழந்தை பாக்கியம் கிடைத்தால் எப்படியோ, திருமணமே ஆகாமல் இருக்கும் மகன் மகளுக்கு திருமணம் நடந்தால் எப்படியோ, அத்தகைய சந்தோஷத்தை தங்கள் வரவால் நான் அடைந்தேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.தங்களுடைய விருப்பத்தை நான் எப்படி நிறைவேற்ற வேண்டும்? எதை உத்தேசித்து தாங்கள் இங்கே வந்த காரியத்தை சொல்லவேண்டும். தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றி, தங்களுடைய ஆசியைப் பெற விரும்புகிறேன். தாங்கள் எண்ணிவந்த காரியம் எதுவாக இருந்தாலும் யோசிக்காமல் தெரிவிக்கவும்.குறையில்லாமல் முடித்து வைக்கிறேன்”  என்று சொன்னான்.

அதைக் கேட்டு மகிழ்வுற்ற விஸ்வாமித்திரர், தசரதனைப் பார்த்து ‘நல்ல குலத்தில் உதித்து, குலகுரு வசிஷ்டரால் உபதேசிக்கப்பட்ட தாங்கள்,  நான் எண்ணி இருப்பதை முடிப்பீர்கள் என் நம்புகிறேன். பிறகு தவறக்கூடாது’ என்கிறார்

கம்பரின் தசரதனுக்கோ முனிவரைப்பார்ததும் ஒரு பரபரப்பு படபடப்பு. அவரைக்கண்டதும் மன்னன் எழுந்த வேகத்தை ஒரு பாட்டில் சொல்கிறார்.

வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
அந்தர
  தலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என,
 கடிது எழுந்து அடி பணிந்தான்.

இந்த பாடலை ஒரு திருப்புகழ் சந்தம் போல சொல்லிப்பாருங்கள் மன்னனின்  படபடப்பு புரியும்.  மன்னன் அவரை வரவேற்கும் பாடல் கீழே

‘நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும்,
 அன்று; நகர், நீ, யான்
வலம் செய்து வணங்க,
 எளிவந்த இது,  முந்து என்
குலம் செய் தவம்’
 என்று இனிது கூற……

இன்றோடு என் தீவினைகள் தொலைந்தன எனக் கூறிய தசரதன்  “உங்களின் வருகை என் நிலம் செய்த தவத்தின் பலன் அன்று. நான் செய்த தவத்தின் பலனும் அல்ல. நீங்களாகவே இங்கு  எழுந்தருளியது என் முன்னோர்கள் செய்த தவத்தின் பலன்” என்று மகிழ்ந்து கூறுகிறான்.  “நான் அரசாண்டதன் பலன் எனக்கு கிட்டிவிட்டது. இனி நான் என்ன செய்ய வேண்டும்?” என விசுவாமித்திரரிடம் வினவுகிறான்

ஒரு சில சான்றோர்கள் குலம் என்பதற்கு வம்சம், மகன் என்று பொருள் உரைக்கின்றனர். “முந்து என் குலம் செய்த தவம்” என்பதற்கு “முன் எனது குலத்தவர்  செய்த தவம்” என்று கூறுவர். குலம் என்பதற்கு மகன் என்று பொருள் கொண்டு முன் என் மகன் செய்த தவம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமுடையதாக பொருள் கொள்ளவேண்டும். காரணம் விஸ்வாமித்திரரை வழிபட்டுப் பின்தொடர்ந்து சென்று பயனடையப் போகிறவன் மகன் தானே.

முனிவனின் பதிலுரை

வால்மீகியின் விஸ்வாமித்திரரோ  தசரதனிடம் “தேவர்களுக்கும் என்னைப் போன்ற முனிவர்களுக்கும் ஏதாவது இடையூறு என்றால் புகலிடங்கள் நான்கு உள்ளன. அவை பாற்கடல், கைலாயம், இந்திரலோகம், அயோத்தி.”என்று சொல்லி, முதல்  மூன்று உலகங்களிலும் நான் வேண்டுவது கிடைக்கவில்லை என்றால் அயோத்தியில் கிடைக்காமல் போகாது என்று சொல்லி மன்னனை மகிழ்வித்தார். அவருக்கு தெரியும் தான் எதிர்பார்த்து வந்திருக்கும் (பாற்கடலில் உள்ள நாராயணன்) தற்போது ராமனாக அயோத்தியில் உள்ளான் என்று. இங்கு வால்மீக்யின் ஒரு ஸ்லோகத்தை குறிப்பிடலாம்

अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम्।।1.19.14।।

वसिष्ठोऽपि महातेजा ये चेमे तपसि स्थिता:

ராமன் மகாத்மா என்றும் வீணாகாத வீரத்தை உடையவன் என்றும் எனது ஞானபலத்தால் அறிவேன் என்றும் விஸ்வாமித்திரர் சொல்வதாக வால்மீகி சொல்லுகிறார். இதிலிருந்து ராமனின் அவதார ரகசியம் தெரிந்துதான் அயோத்தி வந்த்துள்ளார் என்று பொருள்பட வால்மீகி உரைக்கிறார்.

முனிவரின் வேண்டுகோள்:

வால்மீகியின் விச்வாமித்திரர் தசரதனிடம் ‘சில பல நலன்களை உத்தேசித்து  நான் பலமுறை வேள்வி செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் அது முடிவுறு நிலையிலும் சுபாகு, மாரீசன் போன்ற அரக்கர்கள் மற்ற அரக்கர்களுடன் அங்கு வந்து வேள்விகுண்டத்தில் மாமிசத்தையும் ரத்தத்தையும் போட்டு அதன் புனிதத்தை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பெரிய வீரர்கள். நினைத்த நேரத்தில் உருவத்தை மாற்றும் வித்தையைத்  தெரிந்தவர்கள். அதனால், ஒவ்வொரு முறையும், எனது யாகம் தடைப்படுகின்றது. என்னால் ஒரு நொடியில் அவர்களை பொசுக்கமுடியும். ஆனால் வேள்வியின் இடையில் நான் கோபித்துச்  சாபம் கொடுத்தால் வேள்வி பலனற்று போய்விடும்.”

“நான் மறுபடி அந்த வேள்வியைச் செய்ய விரும்புவதால், அதைக்காக்க உனது புதல்வனான ராமனை என்னுடன் அனுப்பவும். ராமன் வல்லவன் என்று சொல்லி ராமனின் பெருமைகளை எடுத்துரைக்கிறார்

मे क्रोधमुत्स्रष्टुं बुद्धिर्भवति पार्थिव।।1.19.7।।
तथा भूता हि सा चर्या शापस्तत्र मुच्यते।

शक्तो ह्येष मया गुप्तो दिव्येन स्वेन तेजसा।।1.19.9।।
राक्षसा ये विकर्तारस्तेषामपि विनाशने।

श्रेयश्चास्मै प्रदास्यामि बहुरूपं संशय:।।1.19.10।।
त्रयाणामपि लोकानां येन ख्यातिं गमिष्यति।

तौ राममासाद्य शक्तौ स्थातुं कथञ्चन।।1.19.11।।
तौ राघवादन्यो हन्तुमुत्सहते पुमान्।

விஸ்வாமித்திரர். “மேலும் எனது வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்றால் குலகுருவான வசிஷ்டரை கேட்கவும். அவர் நான் சொல்வதை மறுத்துச்  சொல்லமாட்டார்” என்று கூறினார்,

விச்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் நடந்த சண்டை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் இந்த விஷயத்தில் வசிஷ்டர் தான் சொல்வதை ஒப்புக்கொள்ளவைத்தால்  அது தனக்கு கிடைத்த வெற்றி என்றே விஸ்வாமித்திரர் நினைத்தார்.

இப்போது கம்பனின் விஸ்வாமித்திரர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு

இடையூறா,  தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என,

நிருதர் இடை விலக்கா வண்ணம்,
“செருமுகத்துக் காத்தி” என,
 நின் சிறுவர்

நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’
 என, உயிர் இரக்கும்

கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.

“மரங்கள் நிறைந்த  அடர் வனத்துக்குள், நான் இயற்றும் தவத்திற்கு அரக்கர்கள் செய்யும் இடையூறைத் தடுத்து நிறுத்திக் காப்பதற்காக,  உனது நான்கு  புதல்வர்களில் கரிய செம்மலான ஒருவனைத் தந்திடுவாய்” என்று விஸ்வாமித்திரர் கூறினார், என்பது இதன் பொருள்.

வால்மீகி அரக்கர்களின் பெயரை சுபாகு மாரீசன் என்று சொல்கிறார். கம்பரோ அவர்களை நிருதர் என்கிறார்.

தரு என்றால் வடமொழியில் மரம் என்று பொருள். தமிழில் தரு என்றால் தருகின்ற என்று பொருள். மரம் பூக்கள் தரும்;கனிகள் தரும்; நிழல் தரும்.;விறகு தரும், “இப்படி இங்கு அயோத்தியில், கேட்காமலேயே தரும் மரங்கள் இருக்கும் போது, நான் கேட்டு நீ கொடுக்காமல் இருந்துவிடுவாயா?” என்று பொருள் படும்படி பேசினார்.

“நான் செய்யும் தவத்திற்கு    அரக்கர்கர்கள் இடையூறு செய்கிறார்கள். அது எப்படி இருக்கிறது என்றால் தவம் செய்யும் ஒருவனுக்கு காமமும் கோபமும் எப்படி உள்ளிருந்து இடையூறு செய்யுமோ அவ்வாறு அந்த அரக்கர்கள்  வெளியிலிருந்து செய்கிறார்கள்”. என்றுரைத்தார்  அந்த அரக்கர்களுக்கு  முனிவர் காமம் வெகுளி என்று பெயர் சூட்டி “அவர்களை  வெல்வதற்கு உனது புதல்வனான ராமனை அனுப்பு”. என்று கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால் காமத்தையும், கோபத்தையும் வெல்வதற்கு பகவான் நாராயணனைத்தான் சரணடையவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம்.. இந்த காமம், கோபம் இவைகளால் அல்லல்பட்டவர் விஸ்வாமித்திரர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் சுபாகுவைத்தான் அந்தசமயம் ராமரால் கொல்லமுடிந்தது. மாரீசன் விரட்டி அடிக்கபட்டான். அதாவது கடவுளால் கோபத்தை அழிக்கமுடியுமே தவிர, காமத்தை அழிக்கமுடியாது* என்ற பொருளிலும் சிலர் சொல்கின்றனர். ஆதலால் தான் மாரீசனை அவர் தப்பவிட்டதற்குக்  காரணம், பின்னல் நிகழப்போகும் நிகழ்வை உத்தேசித்து என்று அறிஞர்கள் கூறுகின்றனர்,

(*இது சிலபஸில் வராதது. அப்படிக் காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன செய்வது? திருவள்ளுவரின் குற்றம் கடிதலில் ஒரு குறள்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்..

இதற்க்கு மேல் இதற்க்கு விளக்கம் தேவையில்லை)

வால்மீகியின் விச்வாமித்திரரோ  தசரதனிடம் உனது மூத்த புதல்வனான ராமனை உடன் அனுப்பு என்று தெளிவாக கேட்டார். ஆனால் கம்பனின் விச்வாமித்திரனோ  நால்வரில் கரிய செம்மலான ஒருவனைத்தந்திடுவாய் என்று சொல்கிறார். இது என்ன புது குழப்பம்?

தசரதனின் புதல்வர்களில் ராமனும் பரதனும் தான் கரிய நிறத்தவர்கள் . அப்படி இந்த இருவரில் யார் அந்த விஸ்வாமித்திரர் விரும்பும் கரிய நிறத்தவர்? இங்கு ஒருவனை என்பதற்கு ஒப்பற்றவன் என்பதே பொருள். ஆகையால் இருவரில் ஒப்பற்றவன் ராமனே ஆவார் என்பது பொருள்.

இங்கு ஒரு என்றால் ஒப்பற்ற என்பதற்கு இன்னொரு சான்று:

அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்,
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,
கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய.


இறைவன் என்றும் உள்ளவன். அவன் தோன்றாத தன்மையன். எனவே தான் ஒருதிரு முருகன்(ஒப்பற்ற முருகன்) உதித்தான் என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

அடுத்து “உயிர் இரக்கும் கொடுங்கூற்றின்” என்று கம்பர் பாடுகிறார். அதாவது ராமனைக் கேட்பது என்னிடம், என் உயிரை(ராமனை) கேட்டு யாசிப்பது போல உள்ளது என்று புலம்புகிறான் தசரதன். சிலர் இங்கு யமனைச் சுட்டிக்காட்டுவர்.  ஆனால்,   யமதர்மன் யாரிடமும் அவரது உயிரைப் பறிக்க அவரிடம் யாசிப்பதில்லை. அதற்குரிய நேரத்தில் கேட்காமலேயே கொண்டுபோய்விடுவான். ஆதலால் இங்கு உடலை உயிரிலிருந்து பிரித்திழுக்கும் கொடிய பேச்சால் தசரதன் வருந்தும்படி கூறினான் விஸ்வாமித்திரன்  என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.

தசரதனின் தயக்கம்

வால்மிகியின் தசரதன் விஸ்வாமித்திரர் ‘ராமனை அனுப்பு என்றவுடன்’ உடனே மயங்கி விழுந்துவிட்டார். சிறிது நேரம் கழித்தே எழுந்தார்.

ஆனால் கம்பரின் தசரதன் என்ன செய்தான்? கம்பரே சொல்கிறார்.

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்

மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல்

நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த,

ஆர் உயிர் நின்று ஊசலாட,
‘கண் இலான் பெற்று இழந்தான்’
 என

உழந்தான் கடுந் துயரம்  காலவேலான்.

வேல் பாய்ந்ததால் மார்பில் ஏற்பட்ட புண்ணின் பெரும் துளையில்  தீயை நுழைத்தது போன்ற வலியோடு முனிவரின் சொல் தசரதனின் செவிக்குள் புகுந்தவுடன் ஏற்கனவே அவன் உள்ளத்துக்குள் உலாவிக் கொண்டிருந்த துயரம்  பிடித்து உந்த, உயிர் ஊசலாட, கண் இழந்தவன் கண் பெற்று மீண்டும் இழப்பதைப் போன்ற துயரத்தை அடைந்தான் தசரதன்.  கம்பனைப்போல உவமானங்கள் சொல்பவர் எவருமில்லை.

இங்கு “உள்நிலவிய துயரம்” என்று கம்பர் சொல்ல வருவது  ஷ்ரவணின் கதை என்று வைத்துக்கொள்ளலாம். . வயதான தாய்தந்தைக்காக குளத்தில் நீர் எடுக்கவந்தவனை தசரதன் அங்கு கேட்ட குரலை வைத்து மிருகம் வந்துள்ளது என்று தவறுதலாக எண்ணி அம்பு எய்து கொன்று விடுகிறான். பிறகு உண்மை தெரிந்து வருந்துகிறான். ஷ்ரவணின் தந்தை, தான் தனது பிள்ளையைப் பிரிந்ததுபோல நீயும் உன்பிள்ளையைப் பிரிந்து மிகவும் வருந்துவாய்  என்று சாபம் கொடுத்துவிடுகிறார். விஸ்வாமித்திரர் ராமனைக் கேட்டதும் சாபம் பலிக்கும் நேரம் வந்துவிட்டதோ என்ற துயரம் தசரதனை பிடித்துக்கொண்டது.

மறுபடியும் வால்மீகியிடம் செல்வோம்.

தசரதனின் பதில்

மயக்கம் தெளிந்து எழுந்த தசரதன் முனிவரிடம் “ மகரிஷி,

ऊनषोडशवर्षो मे रामो राजीवलोचन:
युद्धयोग्यतामस्य पश्यामि सह राक्षसै:।।1.20.2।।

“மலர்ந்த செந்தாமரையைப் போன்ற திருக்கண்களை உடைய என் ராமனுக்கு இன்னும் பதினாறு வயது முடியவில்லையே? ராத்திரியில் கபட யுத்தம் செய்யும் அரக்கர்களை எதிர்த்து போர் புரிய இவனுக்குத் திறமை இல்லையே?” என்று சொல்கிறான்

(இந்த இடத்தில் தசரதன் இரண்டு விஷயங்களைச் சொல்லி விஸ்வாமித்திரரின் மனதில் ஒரு பச்சாதாப உணர்வை உருவாக்க முனைகின்றான் என்று வேளுக்குடி சொல்கிறார். ஒன்று ராமனைத் தாமரைக்கண்ணன் என்று சொல்கிறார். அதாவது தாமரை என்ன செய்யும்? கதிரவன் உதிக்கும்போது(அதிகாலை) மலரும் மறையும் போது (மாலையில்) இதழ்களை சுருக்கி குவிந்துவிடும்.அதுபோல ராமனும் மாலை நேரத்திலேயே உறங்கச் சென்றுவிடுவான். அதனால் ராத்திரியில் போரிடும் அரக்கர்களுடன் எப்படி போரிடுவான்? இரண்டாவது. ராமனுக்கு இன்னும் பதினாறு வயது ஆகவில்லை. இதிலிருந்து ஒன்று தெரிந்து கொள்ளலாம். ஒருவன் போரில் ஈடுபடவேண்டுமேன்றால் அவனுக்குப் பதினாறு வயதாகி இருக்கவேண்டும் என்ற விதி அந்த நாட்டில் அப்போது இருந்தது. ஆகையால் அந்தவிதி முறையின் படி ராமனால் போருக்குச் செல்லமுடியாது” என்று சொல்லவருகிறார்.

அது போல ‘அவன் எனது ராமன்” என்று தசரதன் அழுத்தமாக சொல்லுகிறார். வேளுக்குடி தனது பிரசங்கத்தில் சொல்கிறார். நாம் ஒரு பொருளை நமது என்ற சொல்லிவிட்டால் பெரியவர்கள் அதை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒருவரிடம் ஒரு பொருளை கொடுக்கும் சமயம் ‘இதம் ந மம”  इदं मम i  இது என்னுடையது அல்ல  பிராமணாயா துப்யமஹம் சம்ப்ரததே இதை நான் உன்னிடம் கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுக்கவேண்டும் அப்போதுதான் வாங்கிக் கொள்வார்கள்)  

“ராமன் யுத்தக்கலையை இன்னும் முழுமையாகக் கற்கவில்லை. பல நவீன ஆயுதங்களைக் கையாள அவன் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. . என்னிடம் பலமான சேனை உள்ளது. சிறந்த வீரர்கள் உள்ளனர் அவர்ளுடன் சேர்ந்து நானும் போரிட்டு அரக்கர்களை அழித்து வேள்வி காப்பேன். அதனால் தாங்கள் ராமனை அழைத்து செல்லமுடியாது. அவனில்லாமல் நான் ஒரு வினாடி கூட உயிர்  வாழ் மாட்டேன்”  என்று தசரதன் கூறினான்.

இதே கருத்தை  கம்பனின் தசரதன்

புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும்,

நான்முகனும், புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய்,
 யான் காப்பென்;

பெரு வேள்விக்கு எழுக!

இதுதான் வேலை என்று சொல்லுங்கள்  சிவன், இந்திரன், பிரம்மா இவர்களே இடையூறு செய்ய வந்தாலும் நான் தடுத்து நிறுத்தி வேள்வியைக் காப்பேன். அப்படி இருக்கையில் இந்த அரக்கர்கள் எம்மாத்திரம்? தாங்கள் கிளம்புங்கள்”  என்று சொல்கிறான்.

தசரதனுக்கு விஸ்வாமித்திரரின் பதில்

தசரதரின் பேச்சைக் கேட்ட வால்மீகியின் விஸ்வாமித்திரர் கோபத்துடன் தசரதனைப் பார்த்து ”மன்னனே நான் வலுவாக உன்னிடம் ஏதும் கேட்க முன்வரவில்லை. நீயாக என்னை நிர்பந்தப்படுத்திக் கேட்கவைத்தாய். முதலில் கேட்டதை தருவதாகச் சொல்லிவிட்டு, இப்போது தரமறுப்பது புகழ் பெற்ற இக்ஷ்வாகு வம்ச  மன்னனுக்கு அழகல்ல. அரசனே! தான் அளித்த உறுதி மொழியை தவறாமல் காப்பாற்றுகின்றவன் என்ற பெருமையுடன் நீ உறவினர்களுடன்  சுகமாக ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டிரு  सुखीभव सबान्धव:” “என்று சொல்லிவிட்டு   கோபத்துடன் கிளம்பினார்.

“பெரு வேள்விக்கு எழுக”  என்று அரச கட்டளை போல ஒலித்த தசரதனின் குரல் விஸ்வாமித்திரரை    கோபம் கொள்ளச் செய்தது. சிவந்த கண்களுடன் முனிவன் எழுந்தான். இதைக் கம்பன்

என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன்,

மண் படைத்த முனி; ‘இறுதிக் காலம்
அன்று’
 என, ‘ஆம்’ என இமையோர் அயிர்த்தனர்;

மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன;
 மேல் நிவந்த கொழுங்

கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன;
 வந்தது நகையும்; சிவந்தன கண்;

இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.

என்று சொல்கிறான். அவர் எழுந்த வேகத்தில் திசைகள் இருண்டன. பார்த்தவர்கள் இறுதிக்காலம் வந்துவிட்டது என்றனர்.

வசிஷ்டரின் கூற்று

முனிவருடைய கோபம் கண்ட வசிஷ்டர் அவசரமாகக் குறுக்கிடுகிறார். இங்கு வால்மீகி மற்றும் கம்பரும் வசிஷ்டர் மூலம் ஒரே கருத்தைச் சொல்கிறார்கள். “அரசனே விஸ்வாமித்திரர் தர்மத்தின் மறு அவதாரம். தவத்தின் எல்லை. மந்திரதந்திரங்கள் தெரிந்தவர்.  அரசனாக இருந்ததால் பலவித ஆயுதங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர். முக்காலங்களையும் அறிந்தவர். இவரைச் சந்தேகிப்பது நியாயமல்ல. அரக்கர்களை அழிப்பது இவருக்கு கஷ்டமல்ல. ஆனால் ராமனின் புகழையும் நன்மையையும் கருதியே இங்கு வந்துள்ளார்.

கறுத்த மா முனி கருத்தை உன்னி, ‘நீ
பொறுத்தி’ என்று அவற் புகன்று, ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா, வசிட்டன் கூறுவான்:

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்,
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே

இவருடன் ராமனை அனுப்பாவிட்டால்  இராமனுக்கு வர இருக்கும் நற்பலன்களை நீ மறுத்தது போல ஆகும்.  மழையால் வெள்ளம் சென்று சேரும் கடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுபோல, மழை போன்ற தவத்தின் பலனால் பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்த கடலாகிய விஸ்வாமித்திரரிடமிருந்து அளவிட முடியாத திறன்கள் இராமன் என்ற ஆற்றுக்கு வரப்போகும்  காலம் கனிந்துவிட்டது  என்று பொறுப்புள்ள ஆசிரியரைப்போல வசிஷ்டர் பேசினார். அவரிடம் ராமர் கற்றது ஆரம்பநிலைக்கல்வி. ஆரம்ப கல்வியில் சில அடிப்படை விஷயங்களைத்தான் கற்றுத்தரலாமே தவிர அதற்கான விளக்கங்களை கற்றுத்தரக் கூடாது. காரணம் அதை தெரிந்து கொள்ளும் பக்குவம் உள்ள  வயதல்ல அது. உயர்கல்வியில் தான் அது சாத்தியம். அதைக்கருதியே  விஸ்வாமித்திரருடன்  ராமரை அனுப்புவதற்கு வசிஷ்டர் கேட்டுக்கொண்டார். மேலும் ராமன் கூண்டுக்கிளி போல அரண்மனைக்குள் வாழ்ந்து வருகிறார். ஒரு எதிர்கால மன்னனாக போகிறவன் புற உலகைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம். அப்படி தெரிந்து கொண்டால்தான் எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியும்  என்பதை உத்தேசித்தும்  வசிஷ்டர் அவ்வாறு கேட்டுகொண்டார்.

தசரதன் மனம் திருந்துதல்

வசிஷ்டரின் வார்த்தைகளைச் செவிமடுத்த தசரதன் சமாதானமடைந்து மகிழ்வுடன் தனது புதல்வர்களான ராமர் லக்ஷ்மணர் இருவரையும் வரவழைத்தான் என்று சொல்கிறார் வால்மீகி.

तथा वसिष्ठे ब्रुवति राजा दशरथस्सुतम 
प्रहृष्टवदनो राममाजुहाव सलक्ष्मणम्।।1.22.1।।

விஸ்வாமித்திரன் ராமனை மட்டும் தானே அனுப்பும்படி சொன்னார். ஆனால் தசரதனோ, ராமன் லக்ஷ்மணன்  இருவரையும் அழைத்து வரச்சொன்னான் அதன் காரணம் என்ன?

ஆனால் கம்பன் என்ன சொல்கிறான்

குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
‘திருவின் கேள்வனைக் கொணர்மின்,
 சென்று என,-
‘வருக என்றனன்’
 என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன்,
 அறிவின் உம்பரான்.

“குல குருவான வசிஷ்ட முனிவனது சொற்களைச்   செவியேற்றுக்  கொண்டு  மன்னனாகிய தசரதன் பக்கத்திலுள்ள பணியாட்களிடம் இலக்குமியின் நாயகானகிய ராமனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்”. என சொல்கிறான்

நான் முன்பே சொல்லி உள்ளேன். வால்மீகி த்ரேதாயுகத்தை  சேர்ந்தவர். ராமரின் சமகாலத்தவர். உள்ளது உள்ளபடி எழுதக்கூடியவர். ஆனால் கம்பரோ ராம பக்தர். லக்ஷ்மியின் கணவன் ராமன் என்றே அழைக்கவிரும்புகிறார்.

விஸ்வாமித்திரர் ராமனை மட்டும் கேட்டார். லக்ஷ்மணனைப்ப் பற்றி அவர் பேசவே இல்லை. பிறகு தசரதர் ஏன் இலக்குவனையும் அழைத்து வரச் சொன்னார்.  இங்கு ஒரு மேதையைப்பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவர் தான் ஸ்ரீ வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்த்ரி. வெள்ளையனுக்கே ஆங்கிலம் கற்றுக்கொடுத்த மாமனிதர். அவருடைய இராமாயண பேருரைகள் மிக பிரபலமானவை.

அவர் சொல்கிறார் “லக்ஷ்மணனை  விட்டு ராமனைத் தனியே நினைப்பவர் யார்? ராமன் போனால் லக்ஷ்மணனும்  கூடவே செல்வான் என்று தசரதனுக்குத் தெரியும். அதனால் தான் இருவரையும் அழைத்து வரச்செய்தார்.

இங்கு சாஸ்த்ரி, ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும்  இடையே உள்ள பாசத்தைப் பற்றி வால்மீகியின்  ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகிறார்.

बाल्यात्प्रभृति सुस्निग्धो लक्ष्मणो लक्ष्मिवर्धन:।।1.18.27।।
रामस्य लोकरामस्य भ्रातुर्ज्येष्ठस्य नित्यश:

सर्वप्रियकरस्तस्य रामस्यापि शरीरत:।।1.18.28।।
लक्ष्मणो लक्ष्मिसम्पन्नो बहि:प्राण इवापर:

तेन विना निद्रां लभते पुरुषोत्तम:।।1.18.29।।
मृष्टमन्नमुपानीतमश्नाति हि तं विना।

லக்ஷ்மணன், ராமனுடைய உடலை விட்டு  வெளியே உலவுகிற மறு உயிர் போன்றவன். லக்ஷ்மணனைப் பிரிந்தால் ராமனுக்கு தூக்கம் வராது. லக்ஷ்மணன் இல்லாமல் ராமன் எந்த உணவையும் தனியே புசிக்க மாட்டான்”

यदा हि हयमारूढो मृगयां याति राघव:।।1.18.30।।
तदैनं पृष्ठतोऽन्वेति सधनु: परिपालयन्।

“ராமன் வேட்டையாடச் சென்றால் லக்ஷ்மணனும் வில்லாளியாகத் தொடர்ந்து செல்வான்”என்று வால்மீகி சொல்கிறார். யுத்த காண்டத்தில் ராவணின்  ஒற்றன் லக்ஷ்மணனைப் பற்றி ராவணனிடம்  சொல்லும் போது रामस्य दक्षिणो बाहु ராமனுக்கு வலக்கை போன்றவன் என்று கூறுகிறான்.

கம்பரும் திருஅவதார படலத்தில் இந்த பாடல் மூலம் இதே கருத்தை உறுதிப்படுத்துகிறார்

ஐயனும் இளவலும், அணி நிலமகள்தன்
செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்,
மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
‘நெய் குழல் உறும் இழை’ என நிலைதிரிவார்.

துணி நெய்கின்ற குழலுடனே நூலானது பிரியாது  சேர்ந்து இருப்பதுபோல ராமனுடனே லக்ஷ்மணன் இணை பிரியாது உடன் திரிவான்.

இதைத்தெரிந்தே கம்பர் லக்ஷ்மணை பற்றி பேசவில்லை.

இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். கம்பவாரிதி ஜெயராஜ் என்ற அறிஞர்    “தசரதன் பணியாட்களிடம் “திருவின் கேள்வனை கொணர்மின்’ என்று கட்டளையிடுகிறார். பொதுவாக யாரைக்கொண்டு வாருங்கள் என்று சொல்வர்? சிறிய குழந்தையைத்தான் அவ்வாறு சொல்வர். ராமன் சிறுபிள்ளை அல்லவே. பிறகு ஏன் அப்படிச் சொல்லவேண்டும். தசரதனைப் பொறுத்தவரை ராமன் இன்னும் செல்லக் குழந்தைதான். அப்படி சொன்னாலாவது விஸ்வாமித்திரர் மனது மாறி ராமரை விட்டுவிட்டு தன்னை அழைத்து சொல்வாரோ என்ற ஒரு ஏக்கம் தான்? ஆனால் கம்பரோ ராமருக்கு விஸ்வாமித்திரருடன் செல்லும் வயது வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த வீரர்கள் (ராமனிடம் நின் தந்தை அழைக்கிறார்) வருக(கட்டளை) என்றழைத்தனர்” என்று சொல்கிறார்.

வந்த நம்பியைத் தம்பி தன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, ‘நல்
தந்தை நீ,
 தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்;
 இயைந்த செய்க! என்றான்.

ஆக முனிவருக்கு நம்பியுடன் தம்பியும் கிடைத்தார்.

ராம லக்ஷ்மணர்களை,  விஸ்வாமித்திரரிடம் காட்டி  “இனி இவர்களுக்குத் தந்தையும் தாயும் நீங்கள்தான். தகப்பனான நான் இன்று அவர்களை உங்களுக்கு அளித்துவிட்டேன். அவர்களால் உங்களுக்கு வேண்டிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்” என்று கூறி அவர்களை உச்சிமுகர்ந்து வழியனுப்பிவைக்கிறான் .   

துளசிதாசரும் இதே கருத்தைத்தான் இந்த சௌபாயி மூலம்  தெரியப்படுத்துகிறார்

अति आदर दोउ तनय बोलाए। हृदयँ लाइ बहु भाँति सिखाए॥
मेरे प्रान नाथ सुत दोऊ। तुम्ह मुनि पिता आन नहिं कोऊ

வால்மீகியும் கம்பரும் இங்கு ராம லட்சுமணர்களின்  அன்னையரைப் பற்றி  ஏதும் கூறவில்லை. ஆனால் துளசிதாசர், அவர்கள் இருவரும் தாயிடம் ஆசி பெற்று முனிவருடன் கிளம்பினர் என்று கூறுகிறார்.

தாடகை வதம் தொடரும்