Monthly Archives: திசெம்பர் 2022

எனது அம்பை விஜயம்

பதிவின் வடிவம்

ஜுர தேவர்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

சமீபத்திய எனது அம்பாசமுத்திர விஜயத்தின் போது நான் கேள்விப்பட்ட பெயர் ‘ஜுர தேவர்’.  யார் இந்த ஜுர தேவர்? எனது மைத்துனர் இது பற்றி ஒரு குறிப்பு அனுப்பி இருந்தார். நான் நெல்லை பாபாநாசம் கோவிலுக்கு சமீபத்தில் சென்றபோது இந்த ஜுர தேவரின் விக்கிரகத்தை அங்கு பார்த்தேன்.அங்கு சுற்று வட்டார முக்கிய  கோவில்கள் அனைத்திற்கும் சென்று வந்தேன். அங்கு எல்லா சிவன் கோவில்களிலும் இவரைப் பார்க்கலாம். நாயன்மார்கள் விக்ரகங்களைத் தாண்டி இவரது விக்கிரகம் உள்ளது. திருநெல்வேலி சுற்று வட்டாரத்தைத் தாண்டி வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. எனக்கு காரணம் தெரியவில்லை. நீங்கள் பார்த்து இருந்தால் குறிப்பிடவும். அவருக்கு என்ன முக்கியத்துவம்?

சிவபெருமான் பார்வதியுடன் ஜோதிஷ்கம் எனப்படும் மேருமலையில் அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி கங்காதேவி, தேவகுருக்கள், நந்தி தேவர், சித்தர்கள், தபஸ்விகள், யட்சர்கள் உடனிருந்தனர்.அப்போது தட்சன், தான் நடத்தும் யாகத்திற்கு தேவர்களை அழைக்க தேவலோகம் சென்றான். இவன் அழைத்தது தான் தாமதம்! எல்லா தேவர்களும் யாகத்திற்கு கிளம்பி விட்டனர். சிவனை மட்டும் அழைக்கவில்லை. தன் மகள் தாட்சாயணியைத் திருமணம் செய்து கொடுத்திருந்தும் யாகத்திற்கு அழைக்காமல் புறக்கணித்து விட்டான் தட்சன். யாகங்களின் மூலம் கிடைக்கும் அவிர்பாகம் என்னும் பலன், சிவனுக்கு கிடையாது என்ற விதியின் கீழ் அவ்வாறு செய்தான். இருந்தாலும் பார்வதிக்கு இதில் வருத்தம். உலக முதல்வரான தன் கணவருக்கு இல்லாத மதிப்பு பிற தேவர்களிடம் என்ன இருக்கிறது? என்ற அடிப்படையில் அவரை யாகத்திற்கு சென்று பாகம் பெற்றுவர அனுப்பினாள். பிநாகம் என்ற வில்லுடன் சிவன், யாகம் நடத்தும் இடத்திற்கு சென்றார்.

அங்கு அவரை தட்சன் மதிக்காததால் யாகத்தை அழித்தார். சிவனின் பூதகணங்கள் சிலரை தூக்கி யாககுண்டத்தில் போட்டன. பலரை வாயில் போட்டு மென்றன. உடனே யாகபலன், ஒரு மானின் வடிவில் வானை நோக்கி சென்றது. சிவபெருமான் அதைத் தொடர்ந்து சென்றார். அப்போது கோபத்தில் சிவனின் நெற்றியிலிருந்து ஒரு வியர்வைத்துளி நிலத்தில் விழுந்தது. அதிலிருந்து அக்னி தோன்றியது. இந்த அக்னியிலிருந்து சிவந்த கண்கள், மஞ்சள் நிற மீசை, விறைப்பான தலைமுடி, ரோமத்துடன் கூடிய உடல், முட்டை வடிவ கண், கோட்டான் போன்ற உருவம் கொண்டு கருப்பான உடையில் ஜ்வரம் என்ற பயங்கர பூதம் தோன்றியது. அந்த பூதம் கோபத்துடன் யாகத்தை அழித்தது. தேவர்களையும், ரிஷிகளையும் ஓட ஓட விரட்டியடித்தது. உயிரினங்கள் எல்லாம் மிரண்டன. பூமி நடுங்கியது. கவலையடைந்த பிரம்மா,சிவபெருமானே! முனிவர்களும், தேவர்களும் தங்களது கோபத்தால் கலக்கமடைகிறார்கள். தங்களை மதிக்காமல் யாகத்தை நடத்தியது தவறுதான். உங்களுக்குரிய பங்கை கொடுத்து விடுவார்கள். அவர்களை மன்னித்தருள வேண்டும், என்றார்.

பிரம்மனின் வேண்டுகோளை சிவன் ஏற்றார். சிவனிலிருந்து தோன்றிய ஜ்வரத்தை அப்படியே விட்டால் இந்த பூமி தாங்காது என்பதால், பல உயிரினங்களிலும் பிரித்து வைத்தார் பிரம்மா.  இந்த ஜ்வரமே ஜுரதேவர் என்ற பெயரில் கோயில்களில் இருக்கிறது. இவர் அக்னி வடிவாய் பிறந்தவர் என்பதால், இவருக்கு குளிர்ச்சியைத் தரும் மிளகை அரைத்துப் பூசி வழிபாடு செய்கிறார்கள். இவரது உடலில் இருந்த உஷ்ணத்தை சிவபெருமான் யானையின் மண்டையில் திணித்து மண்டைக் கொதிப்பாகவும், மனிதர்களின் உடலில் திணித்து ஜுரமாகவும், பாம்புகளின் உடலில் திணித்து தோலே உரிந்து போகும் (சட்டை கழற்றுதல்) அளவுக்கும் என அந்தந்த உயிரினங்களின் தன்மைக்கேற்ப பிரித்தார். இதனால் காய்ச்சல், தலைவலி வந்தால் ஜுரதேவருக்கு மிளகு அரைத்து பூசி அவரை குளிர்வித்தால் நமது உடலும் குளிரும் என்பார்கள். உடலில் சூடு அதிகமாகிவிட்டால் நாம் தளர்ந்து விடுகிறோம். இரண்டு கால்கள் இருந்தாலும் அவை வலிமையற்று படுத்து விடுகிறோம். இதனால் தான் ஜுரதேவருக்கு மூன்றாவதாக ஒரு கால் இருக்கிறது. நடுவில் இருக்கும் அவரது மூன்றாவது திருவடியை வணங்கினால், நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

எனது அம்பை விஜயம் 

பதிவின் வடிவம்

(ஆர். சேஷாத்ரிநாதன்)

எங்கள் குலதெய்வமான மேலப்பாவூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் தரிசனம் செய்ய வழக்கம் போல அம்பாசமுத்திரம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் வசிக்கும் எனது தங்கையின் வீட்டில் தங்கி பிராத்தனைகளை நிறைவேற்றுவதுடன் அருகில் உள்ள முக்கியமான கோவில்களுக்குச் செல்வது வழக்கம். இம்முறையும் அதற்காகச் சென்றவாரம் கிளம்பினேன். நெல்லை சென்று அம்பை செல்லவேண்டும். நெல்லை எக்ஸ்பிரஸ்ல் இனிய பயணம். அங்கிருந்து உடனடியாக அம்பைக்கு இரயில் வசதி உண்டு.  இரயில் நிலையங்கள் சுத்தமாக இருப்பதுடன் பயணம் செய்த ரயில்களும் சுத்தமாக இருந்தன. குறிப்பாக கழிவறைகள். அம்பையிலிருந்து ஆட்டோவில் சென்றோம் . முன்பெல்லாம் அப்படி பயணம் செய்யும்போது ஓரிரு நாட்கள் தங்கை இல்லத்தில் தங்கிவிட்டு திரும்பி விடுவோம். இம்முறை கிட்டத்தட்ட ஆறு நாட்கள் தங்கியதால் நிறைய கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடிந்தது..அதிலும் இரண்டு கோவில்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஒன்று வாலீஸ்வரம் மற்றொன்று ஆதி பாவநாசம் கோவில்கள். இந்தக் கோவில்களை யாரும் பார்த்து இருக்க மாட்டீர்கள். எல்லாவற்றையும் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

விக்கிரமசிங்கபுரம் என்பது பெரிய கிராமம். நான் மூன்று வருடங்களுக்கு முன் பார்த்ததைவிட இப்பொழுது அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. காரணம் கொரானா பரவல் தான். ஆச்சர்யமா உள்ளதா? அதுதான் உண்மை. எப்படி.? இந்தக் கிராமத்தை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும்  சென்னை, ஹைதிராபாத், மும்பை கொல்கத்தா முதலிய நகரங்களில் மென்பொருள் மற்றும் அதைச் சார்ந்த துறையில் பணிபுரிந்து வந்தனர். கொரானாவால் பொது முடக்கம் அறிவித்தவுடன் அவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தாயகம் திரும்பினர். அந்த நகரங்களில் சுகமான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இந்தக் கிராமத்திற்குத் திரும்பினால் அந்த வாழ்க்கை கிடைக்குமா?  நகரங்களில் செலவழித்த பணத்தை இந்த கிராமத்தில் செலவழிக்க முன்வந்த போது  அவர்களின் தேவைகளை எதிர்கொள்ள கிராமமும் தயாராயிற்று.

மேலும் ஸ்ரீதர் வேம்பு அவர்களின் சோஹோ கார்பரேஷன் என்ற புதிய மென்பொருள் நிறுவனம் அருகில் தென்காசியில் உதித்தது. அதில் பணிபுரிவர்கள் பலர் இந்தக் கிராமத்திலிருந்து சென்று வருபவர்கள். இதனால்  பணப் புழக்கம் அதிகரித்தது. ஆதலால் எல்லோரின் தேவைகளை எதிர்கொள்ள  புதிய உணவு விடுதிகள், புது புது சூப்பர் மார்க்கட்டுகள், புது ஜவுளி கடைகள், புது டூ வீலர் கடைகள், புது நகை கடைகள், புதிய தலைமுறை வங்கிகள்,  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தோன்றின. வசதிகள் வந்தால் வியாதிகளும் பெருகுமே. அதன் அடையாளம் புதிய தனியார் மருத்துவமனைகள், அதி நவீன பல் மருத்துவமனைகள், அப்பலோ உட்பட எண்ணற்ற மருந்துக் கடைகள்  தோன்றி வைப்ரண்ட் விக்கிரமசிங்கபுரமாகத் திகழ்கிறது. இங்கு ஸ்விக்கி, ஜோமொடோ போல அங்கும் சேவை செய்ய இரண்டு நிறுவனங்கள் உள்ளன. விவசாயம் மிகச் சிறப்பாக உள்ளது. அதற்கு பார்க்கும் இடங்களெல்லாம் பறவைகள் நிறைந்த பசுமை வயல்களே சாட்சி. ஆக கொரோனா பரவலால்  இங்கு நன்மையே விளைந்துள்ளது. அதாவது வளர்ச்சி என்பது பரவலாக இருக்கவேண்டும் என்ற உண்மையை இந்த கிராமத்தின் வளர்ச்சி உணர்த்துகிறது. இதுபோலத்தானே நாட்டின் பல இடங்களிலும் வளர்ச்சி சாத்தியமாகி  இருக்கும்.

31/12/2022