அகலிகை சாப விமோசனம்

பதிவின் வடிவம்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்

அகலிகை சாப விமோசனம்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

வணக்கம். எல்லோரும் ராமாயணத்தில் விஸ்வாமித்திரரின் பங்கை விவரிக்கும் கட்டுரையில், சென்ற முறை  தாடகை வதம் பற்றிப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தக் கட்டுரையில் அகலிகையின் சாப விமோசனம் பற்றி மூன்று ராமாயணங்கள் போக நான் தெரிந்து கொண்ட விஷயங்களை எல்லாம் தொகுத்தளித்துள்ளேன்.  இதில் அகலிகை வெண்பா என்னும் குறுங்காப்பிய ஆசிரியர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்(1857-1046), சா.து. சுப்பிரமணிய யோகியார், ஆகியோரின் படைப்புகளிருந்து கருத்துக்களும், மற்றும் விகடன் இதழிலிருந்து கருத்துக்களும்   இடம் பெற்றுள்ளன அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுபாகு வதம்

தாடகை வதம் முடிந்து விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை சித்தாஸ்ரமம் என்ற அமைதி தவழும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அது மகாவிஷ்ணு தவம் செய்த இடம் வாமனர் இருந்த இடம். மகாபலி சக்கரவர்த்தி தவம் செய்த இடம். அங்கு தான் விஸ்வாமித்திரர் தனது யாகசாலையை அமைத்து இருந்தார். அந்த இடத்தைக் கண்டு மகிழ்ந்த ராமர், விஸ்வாமித்திரரை தனது யாகத்தைத் தொடர வேண்டுகிறார். அரக்கர்கள் யாக குண்டத்தில் தேவையற்றதை போட்டு விடக்கூடாது என்பதற்காக யாக சாலை மீது  அம்புகளால் ஆன கூடாரத்தை அமைக்கிறார். ராமர், அந்த இடத்தை கண்ணை இமைகாத்தது போலக் காத்தார் என கம்பர் சொல்கிறார்.

கண்களின் மேல் இமை பெரியது. கீழ் இமை சிறியது.  மேல் இமையால் தான் இயங்கமுடியும். கீழ் இமை அப்படியே இருக்கும். ராமர் மேல் இமை. லக்ஷ்மணர் கீழ் இமை. லக்ஷ்மணர் யாக சாலையின் முன் புறம் நின்று காவல் காத்தார். ராமர் யாக சாலையைச் சுற்றி வந்து யாக சாலையையும் இலக்ஷ்மணரையும் கண்ணை இமை காத்ததுபோலக் காத்தார் எனக்  கம்பர் கூறுகிறார்.

அந்நேரம், சுபாகு, மாரீசன் இருவரும்  அரக்கர்களுடன் யாகத்திற்கு இடையூறு விளைவிக்க முயல்கின்றனர். ராமர் மாரீச்சனைத்தவிர எல்லோரையும் கொன்று விடுகிறார். மாரீசன் கடலுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான்.

பிறகு விஸ்வாமித்திரர் சித்தாஸ்ரமத்திலிருந்து கிளம்பினார்  அவர் ராமனிடம் “மிதிலாதிபதியான ஜனகராஜா, தர்மம் அறிந்தவர். அவர் ஒரு யாகம் செய்கிறார். நாங்கள் எல்லோரும் அங்கு போகப் போகிறோம். மனிதர்களில் சிங்கமான, ராமா, நீயும் எங்களுடன் அந்த யாகத்துக்கு வா. அங்கு அதிசயமான ஒரு வில் இருக்கிறது. அதையும் பார்க்கலாம் வா, தேவர்கள் ஜனகரின் முன்னோர்களிடம்  கொடுத்த அந்த வில். பிரகாசமாக, பலமுடையதாக, கண்ணால் காணவும் பயங்கரமாக இருக்கும், இந்த வில் ஒரு யாகத்தில் அவருக்குக் கிடைத்தது. தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ இதில் நாணேற்ற சக்தியுடையவர்கள் இல்லை. மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்.

இந்த வில்லின் பெருமையைக் கேட்ட அரசர்கள், அதைச் சோதித்துப் பார்க்க விரும்பினர். ஆனால்,  யாராலும் நாண் ஏற்ற முடியவில்லை. மகா பலசாலியான அரச குமாரர்களும் தோற்றனர். மிதிலா தேசத்து அரசனுடைய உத்தமமான வில்லை நீ பார்க்க வேண்டும். கூடவே யாகமும் நல்ல முறையில் நடக்கும்.. மற்ற தேவதைகளோடு பூஜிக்கத் தகுந்த தேவதையாக இந்த வில் அவருடைய அரண்மனையில்  இன்றளவும் இருக்கிறது. பலவிதமான வாசனைப் பொருட்கள், தூப தீபங்கள், இவற்றால் அர்ச்சிக்கப்பட்டு, மரியாதையாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.” இவ்வாறு சொல்லிவிட்டு விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணருடன்  மிதிலையை நோக்கிப் புறப்பட்டார்.

வழியில் ஆளரவமற்ற பாழடைந்த ஆசிரமம் ஒன்று இருந்தது. ராமர் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்க, விஸ்வாமித்திரர் “இது கௌதமர் என்ற முனிவரின் ஆசிரமாக இருந்தது. தேவர்களும் கண்டு மயங்கும்படி மிக நன்றாக பராமரிக்கப் பட்டு வந்தது. ஞானத்திலும் ஆசாரத்திலும் மேலான கௌதமர், தனது மனைவி அகலிகையுடன்  இங்கு வசித்து,  தவம் செய்து வந்தார் அவருடைய கோபத்தால் இந்த வனம் சபிக்கப்பட்டு இப்படி அலங்கோலம் ஆனது” என்றார். இங்கு நாம் என்ன நடந்தது என்பதைப்பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

தேவர்களின் அரசனான இந்திரன் கௌதமரின் மனைவியாகிய அகலிகைமீது  காதல் கொண்டு அவளை அடையும் தீய நோக்கத்துடன், சதி செய்து  கௌதமரை அதிகாலையிலேயே,  அவருடைய இருப்பிடத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டு அகலிகையை  அடைகிறான். காலைக் கடன்களைக் கழிக்க, கங்கைக்குச்  சென்ற கௌதமர்,  தனது ஞானத்ரிஷ்டியால் தவறு நடந்துள்ளது என்று தெரிந்து கொண்டு,  வேகமாக தனது இருப்பிடத்திற்கு வருகிறார். அவரைக் கண்டதும் இந்திரன் அகலிகையை நீங்கி அவசர அவசரமாக  வெளியே செல்கிறான்.  நடந்ததை உணர்ந்த கௌதமர், அவனைச் சபித்து விடுகிறார். அதுபோல அகலிகைக்கும் சாபம் அளிக்கிறார். இங்கு ஒரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தில், விஸ்வாமித்திரர் கௌதமரின் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த உடன் அகலிகை சாப வரலாறு பற்றி ராமனிடம்  எடுத்துரைக்கிறார். ஆனால் கம்ப ராமாயணத்தில் கல்லாய்க் கிடந்த அகலிகை உயிர்த்தெழுந்தபின் தான் அந்த வரலாறு பற்றி எடுத்துரைக்கிறார்.

இங்கு நாம் சற்று அகலிகை  யார், இந்திரன் இங்கு அகல்யைத்தேடி வரவேண்டிய பின்னணி என்ன என்பதை முதலில்  தெரிந்து கொள்வோம். இந்த விவரங்கள் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் மற்ற புராணங்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

அகலிகை

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டது காமதேனு என்கிற தெய்வீகப் பசு. அதை மகரிஷிகள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாகத் தோன்றிய உச்சைசிரவஸ் என்ற வெண்ணிறக் குதிரையை மஹாபலி சக்ரவர்த்தி கைக்கொண்டான். பிறகு வெளிவந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பாரிஜாத மரத்தையும் தேவேந்திரன் ஏற்றான். பின்னர், அப்ஸர ஸ்திரீகள் புடைசூழ மகாலட்சுமி தோன்றினாள். அவளையும் கௌஸ்துபம் என்ற ரத்தின ஹாரத்தையும் ஸ்ரீமந் நாராயணன் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு மயக்கம் தரும் மதுவுக்குத் தலைவியான வாருணிதேவி தோன்றினாள். அவளை விஷ்ணுவின் அனுமதியுடன் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னும் பாற்கடலைத் தொடர்ந்துக் கடைந்தபோது, திவ்யாலங்கார பூஷிதையாக அழகான கன்னியொருத்தி தோன்றினாள். மேகக் கூட்டத்தில் ஒளிரும் நட்சத்திரமாகப் பிரகாசித்த அவள்தான் அகலிகை!

அகலிகையின் அழகு

அகலிகை என்றால் அளவுக்கு அதிகமாக அழகானவள் அழகின்மை என்பதே இல்லாதவள் என்று பொருளாம். வால்மீகி அகலிகையை सुसमाहिते என்று கூறுகிறார்.

அடுத்து அகலிகை வெண்பா என்னும்   குறுங்காப்பிய ஆசிரியார் வெள்ளக்கால் ப சுப்பையா முதலியார் தனது படைப்பில் அகலிகையின் களங்கமற்ற அழகைக்  கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

விரூபமிலள் என்றபொருள் மேவுபெயர் மின்னாள்
மரீஇயதுஉரு ஒன்றுமொரு மாசும் – இராதபெண்வேறு
இல்என்று உணர்த்திடுதற்கு என்னில் அவள்அழகு
சொல்லும் தரமுடைய தோ?

– (அகலிகை வெண்பா – 55)

(விரூபமிலள் = களங்கமில்லா அழகு; மின்னாள் = மின்னல் எனத்தக்கவள்; மரீஇயது = பொருந்தியது)

திருப்பாற்கடலில் இருந்து அமுது தோன்றியபோது அவ் அமுதை ஒத்த அகலிகையும் தோன்றினாள். முழு அழகே ஒரு பெண் உருவைக் கொண்டு வந்தது போன்று முற்றிய அழகை உடையவள். அவள் முகம், மதியை ஒத்திருந்தது; அவள் குளிர்ச்சி பொருந்திய கண்கள், அம்மதியில் உள்ள மானை ஒத்திருந்தன. அவள் மொழி, மதி பொழியும் அமுதை ஒத்துள்ளது; ஆம்பல் மலரை ஒத்த வாயிதழ்களின் உள்ளே உள்ள பற்கள், மதியில் விளையும் முத்தைப் போல் ஒளி சிந்தின. மின்னலைப் போன்று அழகுடைய அவள் புருவங்கள், மன்மதனின் கையில் உள்ள கரும்பு வில்லை ஒத்துள்ளன. அவள் கண்கள், மன்மதனின் கையில் உள்ள பூங்கணைகளை ஒத்துள்ளதால் அவளுக்கு வில்லும் அம்பும் மிகையானவை ஆகும்.

இங்கு நாம் குறிபிட்டுள்ளது ஒரு சில பாடல்கள் தான்.வால்மீகியோ கம்பரோ அகலிகையின் அழகை வர்ணிப்பதை ஒரு சில பாடல்களோடு நிறுத்திவிட்டனர். ஆனால் சுப்ரமணிய முதலியார் அவர்கள் தனது அகலிகை வெண்பாவில் அகலிகையின் அழகை எண்ணற்ற பாடல்களால் வர்ணித்துள்ளார். அவளுக்கு அகலிகை என்று பெயரிடப்பட்டதே மாதர்களுள் அவளைப்போல் சிறிதும் குறை இல்லாதவள் வேறு ஒருத்தியும் இல்லை என்பதை இந்த வையகம் தெரிந்து கொள்ளும் பொருட்டே. அவள் தனது கரிய புருவமாகிய வில்லையும் அழகிய கண்ணையும் மன்மதனுடைய ஆயுதங்களான கரும்பு வில்லாகவும், மலர் அம்பாகவும் கொண்டு, அவற்றின் உதவியால் உலகில் உள்ள ஆடவர்களை எல்லாம் தன்னை காமுறச் செய்து வெற்றி பெற்றவள். ஆகவே அவள் இருக்கும்கால் மன்மதனும் அவனது ஆயுதங்களும் தேவை இல்லை  என்று சுப்ரமணிய முதலியார் கூறுகிறார்.

ச.து. சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா ஒரு புதுமைப்படைப்பு. அவர் அகல்யாவின் அழகினை எதிர்மறைச் சொற்களால் வடித்துள்ளார்.

பூவாத பூங்கமலம் புரையாத மணிவிளக்கம்மோவாத
முத்தாரம்
முளையாத செங்கரும்புகாம்பின்றித் தன்னிலேதான்
கவின்விரியும்
கற்பகக்காகூம்புமிருள் மொட்டிலே குமையாத
மின்னல்வெள்ளம்
குவியாத சந்திரிகை குலையாத வானநிதிஅவியாத
மீனரசி அலையாத அமுதகும்பம்
– (தமிழ்க்குமரி – ப.39)
(புரையாத = குற்றமில்லாத; மோவாத = முகராத; 
குமையாத = அழியாத; சந்திரிகை = நிலவு)

அகலிகை  நான்முகனின் மகள். அழகின் திருவுருவாகப் படைக்கப்பட்டவள். ச.து.சுப்பிரமணிய யோகியார் அகலிகையின்  அழகை வடித்துத் தரும் அழகே, அழகு. அவ்வழகினை

அன்னையிலாக் கன்னிகையே யாருனக்கு யௌவனம்எனும்புன்னகையைத் தந்தானே, புதுவயிரப் பெட்டகமே!நள்ளிரவில் கனவாகி நாளோடும் பூத்தவளே!தெள்ளியதோர் தேன்வடிவே, தெய்விகமாம் பேரழகே!யாகக்கனற் கனவே, அருமறைக்கு நாயகியேபோகத்துப் பூங்கனவே, போதத்து அகலிகையே-(தமிழ்க்குமரி – ப.40)
(யாகக் கனல் = வேள்வித்தீ; அருமறை = அரிய வேதங்கள்; போகம் = இன்பம்; போதம் = அறிவு) என்று போற்றுகிறார் கவிஞர்.

அவளுடைய அழகில் மதிமயங்கிய இந்திரன், அவளைத் தன்னுடையவள் ஆக்கிக் கொள்ள விரும்பினான். அதே நேரம் மகா தவசீலரான கௌதம முனிவரும் அகலிகையைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார்.

இந்த இருவரும் தங்கள் விருப்பத்தைப் பிரம்மதேவரிடம் தெரிவித்தனர். உடனே  பிரம்மதேவர், ‘ஒரு போட்டியின் மூலமே இதற்குத் தீர்வு காண மமுடியும்!’ என்று கருதி, இருவரையும் நோக்கி, ”மகத்தானவர்களே… உங்கள் ஆசை நியாயமானதே! ஆனால், உங்களில் ஒருவர் மட்டுமே இந்த கன்னியை அடைய முடியும். நான் கூறும் நிபந்தனையை ஏற்று, யார் அதை முதலில் நிறைவேற்றுகிறீர்களோ அவருக்கே இவள் உரியவள். உங்களில் யார் முன்னும் பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!” என்றார்.

அதைக் கேட்ட தேவேந்திரன், ”முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட பசுதானே… இதோ, இப்போதே புறப்படுகிறேன். மூவுலகிலும் அப்படிப்பட்ட பசு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, வணங்கி இந்த அழகியின் கரம் பற்றுகிறேன்!” என்று கூறித் தனது மேக வாகனத்தில் ஏறி உலகங்களைச் சுற்றி வரப்புறப்பட்டான். கௌதமரோ பிரம்மனின் நிபந்தனையைக் கேட்டுச் சோர்வடைந்தார்.

‘முன்புறமும் பின்புறமும் முகங்கொண்ட பசு எங்குள்ளது? அதை இதுவரை நான் கண்டதே இல்லை. நான் எப்படி அதைக் காண முடியும்?’ என்று எண்ணியவர், ‘சரி! நம்மால் ஆவது எது? ஈசன் விட்ட வழி!’ என்று தீர்மானித்து ஈஸ்வர தியானத்தில் அமர்ந்தார்.

அப்போது நாரதர் அங்கே வந்தார். கௌதமர் அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது நாரதர், ”மகரிஷி! தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசையையும் பிரம்மதேவரின் நிபந்தனையையும் நான் அறிவேன், வாருங்கள். அருகில் ஒரு கோசாலை உள்ளது. அங்கே சென்று முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு உள்ளதா என பார்க்கலாம்!” என்றார்.

இதைக் கேட்டு கௌதமர் சந்தோஷமடைந்தார். பசுக்கள் நிறைந்த அந்த கோசாலைக்கு இருவரும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தேடிய பசு தென்படவில்லை. கௌதமர் மனம் சோர்ந்தார். நாரதரைப் பார்த்து, ”கர்ப்பத்தில் உண்டாகும் மாற்றங்களினால் அபூர்வமாக ஒன்றிரண்டு பசுக்கள் இரண்டு தலை கொண்ட கன்றை ஈனுவதைக் கண்டுள்ளேன். ஆனால், முன்னும் பின்னும் சிரங்கள் உள்ள பசுவை நான் கண்டதில்லை!” என்றார் விரக்தியுடன்.

தான் விரும்பிய அகலிகை தனக்குக் கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஆதங்கம் ஒரு புறம். போட்டியில் இந்திரன் வெற்றிகண்டால், அதனால் தான் அடையவிருக்கும் சிறுமை மறுபுறம். இதை எண்ணி பெரும் கலக்கத்தில் இருந்தார் கௌதமர்.

அப்போது, ”கௌதமரே! கவலைப்படாதீர். நான்முகன் கூற்று தவறாகாது. அதோ பாருங்கள், முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட கோமாதா!” என்று குதூகலத்தோடு ஒலித்த நாரதரின் குரலைக் கேட்ட கௌதமர், அவர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்.

அங்கே பசு ஒன்று, கன்றை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் வெளிப்பட்ட கன்றின் முகம் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. முன்னும் பின்னுமாக இரு பசு முகங்கள் தெரிவதுபோல் அந்தக் காட்சி சட்டென உணர்த்தியது.

அதைக் கண்டு உளம் பூரித்த கௌதமர், நாரதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, விரைந்து சென்று அந்தப் பசுவை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின்னர் நாரதர் உடன்வர, பிரம்மதேவரைச் சந்தித்து, முன்னும் பின்னும் முகம் கொண்ட பசுவைத் தான் பார்த்து வந்த விவரத்தைக் கூறினார். நாரதரும் கௌதமரின் கூற்றை ஆமோதித்தார். அதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த பிரம்மன், அகலிகையை கௌதமருக்கு வேதமுறைப்படி மணம் முடித்து வைத்தார்.

அப்போது, மூவுலகைச் சுற்றி வந்தும் பிரம்மன் குறிப்பிட்ட பசுவைக் காண முடியாமல் மனச் சோர்வுடன், பிரம்மனது இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். அங்கே கௌதமர், பிரம்மனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றி பெற்று அகலிகையின் கரம் பற்றி ஆனந்தமாக இருப்பதைக் கண்டான்.

‘எனக்குக் கிடைக்க வேண்டிய இந்த எழிலணங்கு போயும் போயும் மரவுரியணிந்து, தாடியும் மீசையுமாக ரோமக் காடாக இருக்கும் இந்த முனிவருக்கு மனைவியாகிவிட்டாளே! இது எந்த வகையில் நியாயமாகும்? இவள் இருக்க வேண்டியது தேவலோகமல்லவா?’ என்று பொருமினான்.

ஆயினும் அகலிகை மீது இந்திரன் கொண்ட வேட்கை சற்றும் தணியவில்லை. அது அவனுள் கனன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் விளைவுதான் பின்னர் ஒருநாள் அவன் அகலிகையின் இருப்பிடத்துக்குச் சென்று நெறிதவறி நடந்த அந்தச் செயல்!

இது தவிர இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. பிரம்ம தேவன் உத்தம  மங்கையரது உருவச் சிறப்பெல்லாம் ஒருங்கமையப் படைத்த அகலிகையை இந்திரன் ‘இத்தகையளை மணப்பதற்குத் தன்னையன்றி வேறு  யாருமில்லை என்ற செருக்குடன் இருந்ததாகவும், பிரம்மன் அவளை இந்திரனிடம் கொடுக்காது ‘காப்பாற்றுக’ என்று சொல்லி கௌதம முனிவரிடம் கொடுத்ததாகவும், முனிவரோ அவளிடம் காதல் கொள்ளாது காத்து பிரம்மனிடம் திருப்பிக்  கொடுத்ததாகவும்,  அது கண்டு வியந்த பிரம்மன் கௌதமருக்கே திருமணம் செய்து கொடுத்ததாகவும், அதனால் பொறமை கொண்ட இந்திரன் அவளது கற்பினை அழிக்க முயன்றான்  என்று வரலாறு ஒன்று உளது.

இந்திரனுக்குச் சாபம்

வால்மீகி ராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது ?

அகலிகையின் மீது தீராத காதல் கொண்ட இந்திரன்,  ஒரு நாள், சதி செய்து  முனிவரரை அவரது ஆசிரமத்திலிருந்து நடுச்சாமத்திலேயே   காலைக் கடன்களை கழிப்பதற்க்காக கங்கைக்கு  அனுப்பினான்  பிறகு  முனி வேஷத்துடன் வந்து அகல்யாவிடம் –“பெண்ணே, அகாலமானாலும் வா-“ என்றழைத்தான். முனிவேஷத்தில் வந்திருப்பவன் இந்திரன் என்று அறிந்திருந்தும், வந்திருப்பவன் தேவ ராஜன் என்ற குதூகலத்தினால் இணங்கினாள். சிறிது நேரம் சங்கமித்து இருந்த பின், “சீக்கிரம் போ, தன்னையும், என்னையும் எப்பொழுதும் காப்பாற்றுவாயாக” என்று சொல்லி அவசரப்படுத்தினாள். சிரித்துக் கொண்டே இந்திரன் அகல்யையிடம் “அழகியே- நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன், இதோ போகிறேன்”  என்று சொல்லி வேகமாக அந்தக் குடிசையிலிருந்து பரபரப்புடன்  வெளியேறினான். வாயிலிலேயே கௌதமரைச் சந்தித்து விட்டான். தேவ, தானவர்கள் சேர்ந்து கூட செய்ய முடியாத அளவு தவம் செய்து ஆன்ம பலம் பெற்ற அந்த முனிவரை, அப்பொழுது தான் ஸ்நானம் செய்து நனைந்த ஆடைகளுடன், அக்னி ஜ்வாலை கொழுந்து விட்டு எரிவது போல தேஜஸுடன் கூடிய முனிவரை, கையில், குசமும், சமித்தும் வைத்திருந்த முனிவரைக் கண்டு தேவராஜன் நடு நடுங்கி,  வெளியேறினான். 

முனி வேஷம் தரித்திருந்த இந்திரனைப்  பார்த்து  துர் நடத்தையுள்ள அவனை, நன்னடத்தையே உருவாக இருந்த முனிவர் கோபத்துடன் சபித்து விட்டார். “என் வேஷம் போட்டுக் கொண்டு, செய்யக் கூடாதக் காரியத்தைச் செய்திருக்கிறாய். இனி என்றுமே இந்த செயலைச் செய்ய முடியாதபடி பயனற்றவனாக ஆவாய் என்றார். கௌதமர் இவ்வாறு சபித்தவுடன், இந்திரனுடைய ஆண் உறுப்புகள் கீழே விழுந்தன.” 

கம்பராமாயணத்தின் படி 

இந்திரனுக்கு அகலிகை மீது மோகம் ஏற்பட்டது. அதனால் எப்படியும் அந்த அகலிகையை அடையக் கருதி, முனிவரை வெளியேற்ற அவன் சேவல் போல கூவினான். அது கேட்டு முனிவர் பொழுது விடிந்துவிட்டது போலிருக்கிறது என்று ஆற்றங்கரைக்கு ஸ்நானத்திற்குச்  சென்று விட்டார். முனிவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சமயம், அவர் உருவத்தை எடுத்துக் கொண்டு அகலிகையை நெருங்கினான். ஆற்றுக்குச் சென்ற முனிவன், அது அகாலமென்று உணர்ந்து, ஆசிரமத்துக்கே திரும்பிவர, தன்னை இந்திரன் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தார். இந்திரன் பயந்து போய் பூனை வடிவம் எடுத்துக் கொண்டு ஓட முனைந்தான்.

இங்கு கம்பர் வான்மீகத்திலிருந்து சிறிது மாறுபடுகிறார். வால்மீகி இந்திரன் பூனை வடிவம் எடுத்து சென்றான் என்று எழுதவில்லை. பரிபாடல் என்னும் நூலில், திருப்பரங்குன்றத்துக் கோவில் சுவர்களில் உள்ள சிற்பங்கள் பற்றி குறிப்புகள் உள்ளன.  அச்சித்திரங்களுள் ஒன்று அகலிகை சாபமுறும் நிலையைக் காட்டுவது. அச்சித்திரங்களைக் காட்டி விளக்குவதை  எடுத்துரைக்கும்  ஒரு பாடல்:

“இந்திரன் பூசை: இது அகலிகை; இவன்

சென்ற கௌதமன்; சினனுறக் கல்லுரு

ஒன்றியபடி இது என்று உரை செய்வோரும்”

இதைக் கண்டபிறகே கம்பன் தனது ராமாயணத்திலும் இந்திரன் பூனை வேடமிட்டுத் திரும்பினான் என்று எழுதி இருப்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி”

நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில் வரும் மேற்கண்ட குறளும் இந்த நிகழ்வையே குறிப்பிடுகிறது என்றும் சொல்லுகின்றனர் இங்கு ஐந்தவித்தான் என்பது கௌதம முனிவரைக்குறிக்கும் இந்திரனே ஆனாலும் தண்டிக்கத் தகுந்தவர்  ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட கௌதமர் என்று ஒரு பொருள் சொல்லுகின்றனர்.

அகலிகை நடந்தவற்றை அறிந்து நாணத்தால் செயலற்று நின்றாள். முனிவர் இந்திரனைத் தீயெனப் பார்த்து, இந்த இழிச் செயலைச் செய்த உனக்கு உடலெங்கும் ஆயிரம் பெண்களின்  குறிகள் தோன்றட்டும் என சபித்தார். 

சுப்ரமணிய முதலியாரின்

அகலிகை வெண்பாவின் படி 

“விண் அமுதத்தால் சாகும் துன்பம் நீங்கியது. அந்த பயங்கரமான துன்பத்தைக் காட்டிலும் சகிக்க முடியாத கொண்டுந்துன்பத்தை செய்கின்ற காதல் துன்பமோ அகலிகை என்ற பெண்ணமுதால் நீங்குமேயன்றி வேறொன்றால் நீங்காது. என் ஆளுகைக்குள்ளடங்கிய குடிகளுள்,  ஓர் ஏழை பிராமணன் நான் காதலித்த அந்த பெண்மணியை எளிதாகக் கவர்ந்து இறுமாப்போடு சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, நான் அவனைக்காட்டிலும் அற்பமான ஏழை போல அந்தப் கைபற்றுதற்குரிய செயல் யாதொன்றும்  இல்லாமல் ஏங்கிப் பொருமித் தாழ்ந்திருந்து வருந்துகின்றேன்”  என்று பொருமிய இந்திரன் எப்படியாவது அவளை அடைந்தே தீருவது என்று முடிவெடித்து கௌதமர்  ஆஸ்ரமம் அடைகிறான், அந்த நள்ளிரவிலே   குடிலின் அருகே நின்று சேவல் போல கூவுகிறான். உடனே கெளதமரும் விடியற்காலம் ஆகிவிட்டது என்று கருதி காலை கடன்களைக் கழிக்கத் தனது இருப்பிடத்தைவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியவுடன் இந்திரன், அவரது குடிலினுள் நுழைந்தான். இங்குதான் சுப்பிரமணிய முதலியார் வால்மிகியிடமிருந்து வேறு படுகிறார். இந்திரன் அகலிகையுடன் இணைந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.  அகலிகையின் மீதுள்ள பக்தி தான்  அவரது படைப்பில் வெளிப்படுகின்றது. அவர் சொல்வதைப்பார்ப்போம், கணவரை வழி அனுப்பிவிட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த அகலிகை தனது கணவர் வடிவில் வந்துள்ளவன் இந்திரன் என்று அறியாது வெளியே சென்ற தனது கணவர், ஏதோ காரணத்தால் திரும்பி வந்துவிட்டார் என்று எண்ணி வரவேற்றாள்.

ஆனால், இந்திரனோ அவள் கையைப் பிடித்தான். ஸ்பரிசத்தை வைத்து இது தனது கணவன் அல்ல என்று தெரிந்து கொண்டு “சீ என்னை விட்டுவிடு” என்று அவனைத்தள்ளிய அகலிகை தனது நிலையை எண்ணி மிகவருந்துகிறாள். அவன் இந்திரன் என்று அறிந்த பிறகும் தன்னை விட்டுவிடும்படி அவனிடம் கெஞ்சுகிறாள். ஆனாலும் பலவந்தமாக இந்திரன் அவளை அடைகிறான். அவர்களுக்கிடையே நடக்கும் வாக்கு வாதத்தைக கிட்டத்தட்ட நூற்றி இருபது பாடல்களில் பாடியுள்ளார் ஆசிரியர். உண்மையில் அந்த பாடல்கள் ஒரு பொக்கிஷம். அந்தப் பாடல்கள் எல்லோருக்கும் படிப்பினையாக அமைகிறது. கண்டிப்பாக எல்லோரும் படிக்கவேண்டிய ஒன்று. அவற்றை படிக்கும்போது ஆசிரியருக்கு அகலிகை மீதுள்ள பக்தி நன்றாகத் தெரிகிறது.

நதியை அடைந்த கௌதமர் இன்னும் விடியவில்லை ஏதோ தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டு விரைந்து தனது ஆசிரமத்தை அடைகிறார். தேவர்களுக்குப் படைத்த அவிர்பாகத்த்தைத் திருடி உண்ட திருட்டு நாய் போல அகலிகையை பிரிந்த இந்திரன் வெளியே வருவதைக் கண்டுகொண்டார் கௌதமர். சற்று நேரத்தில் அங்கு நடந்தவற்றைப் புரிந்து கொண்ட கௌதமர் யுகம் முடியுந்தறுவாயில் உண்டாகும் வடவாமுகாக்னி போன்ற பெருங்கோபம் உண்டாக, காலகாலனாகிய ருத்ர மூர்த்தி போன்று கோபம் கொண்டு இந்திரனைப் பார்த்தார். இந்திரன் அவரைக் கண்டு நடுங்கியதை தனது கீழ்க்கண்ட பாட்டால் தெரிவிக்கிறார் ஆசிரியர்

உட்கி, அடங்கி, ஒடுங்கி, நடுநடுங்கி

வெட்கி, மெலிந்து, வெளிறி. ஒழி-மட்கி

உளைந்தான், குலைந்தான், உடைந்தான், இடைந்தான்

அலைந்தான், மலைந்தான் அவன்

‘நினைக்க வொண்ணாத இந்த இழிந்த தீச்செயலை செய்த நீ வெட்கப்படும்படியாகவும் உன்னைக் காண்போர் இழிந்து சிரிக்கும்படியாகவும் நீ இச்சித்த அங்கமே உன் தேகமுழுவதும் உடையவனாகக் கடைவாய்” என்று சாபமிடுகிறார் கௌதமர். 

ச.து.சு யோகியார் எழுதிய

“அகல்யா”வின் படி

இவர்  இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர். இவரும் வால்மீகியின் கருத்துக்களிருந்து நிறைய வேறுபடுகிறார். இவருடைய ஒரு சில கருத்துக்களை மட்டும் நாம் இங்கு கையாளுகிறோம். கௌதமரின் குடிலுக்கும் இந்திரன் வருவதை இந்தப்பாடலின் மூலம் இவர் தெரிவிக்கிறார்:

அன்றொருநாள் ராத்திரியில் யாமம் இரண்டோன்றாக  

ஒன்றி இருளோடிருளாய் உலவுகின்றான் வஞ்சமகன்.

நெஞ்சக் கருமையவன் நீல்விழியிலே சுளிக்க,

வஞ்சக் கருமையவன் மேனி வளப்பமிட,

கங்குலுக்கு  கருமைதரும் கருமை கண்டங்கு அறம் ஒடுங்க,

திங்கள் கவர வரும் தீப்பாம்புபோல  வந்தான்.

பெண்ணுக் கரசு அகல்யைப் பேரழகை கண்ணி வைக்க

விண்ணுக் கரசன் ஒரு வேடன் போல் வந்தானே

குக்கல் குறைப்படங்க, கூகைக் குரலோடுகங்

கொக்கரக்கோ கோழியெனக் கூவினான்  கோள் மிகுந்தான் .

அக்குரலைக் கேட்ட முனி அக்கணமே சந்தி செய

மிக்க விரைவா எழுந்து வெளியில் புறப்பட்டான்.

பொய்யிலாக் கோதமனும்   புறத்தேகப் பார்த்திந்தப்

பொய்யன் அவன் வடிவில் புகுந்தான் குடிசையுள்ளே.

ஓரத்தோர் நாணற்பாய்  மீதே உறங்குகிறாள்

மூரல் கலையாத மோகக் கவிதை மகள்

ஒற்றை அகல் விளக்கத் தொளி  இருளைக் காண்பிக்க,

கற்றை இருள் நடுவோர்  கண் போலக் கண்வளர்ந்தாள்

கூந்தல் புரள, கோல முன்கைத் தண்டின் மேல்

ஏந்து தாமரை முகத்தில் இனிமைக் கனவூர,

பெண்ணழகு தெய்வம் பேரமைதி யோடுறங்கும்;

பண்ணசைந்து நீள் மூச்சுப் பாய்ந்து கொங்கை தாலாட்டும்

ஆசை அவசரத்தில் அஞ்சுங் கணத்துள்ளே

மோசச் சுளிப்பினிலே முன்னேறும் வானரசன்

ஆங்கவளைக் கண்டான், அழகுண்டான் , கொண்டான்;

தீங்கு தடுப்பாரில்லை தீமை புரிந்துவிட்டான்.

என்றுமில்லாப்  பேராசை என் கணவர் கொண்டாரே!

இன்று கண்டேன் பேரின்பம் யான்! என்று இணங்கிவிட்டாள்.

இங்கு கவிஞரும், வந்தவன் தனது கணவர் என்று நினைத்து அவனுக்கு இணங்கிவிட்டாள் என்று கூறுகிறார்.  

திரும்பி வந்த முனிவனும், விவரம் அறிந்து கோபக்கனல் குமுற, கொதித்துள்ளம் கொப்பளிக்க, சாபத் தழல் நாவில் சண்டமாருதம் கக்க, ‘தீங்கு செய்த தேவமகன் தீமையுடற் செம்மேனி தீங்குபேறு பெண்குறி  ஆயிரமாகத் தீமையுற” என்று சாபம் கொடுக்க இந்திரனும் வெளியேறினான். இந்திரனுக்குக் கொடுத்த சாப விவகாரத்தில் சுப்ரமணிய முதலியாரும், யோகியாரும் கம்பனுடையே நிலைப்பாட்டையே கையில் எடுக்கின்றனர். அடுத்து நாம் காணவிருப்பது அகலிகை சாபம் பற்றி.

அகலிகைக்கு சாபம்

வால்மீகி

கௌதமரை சதியால் வெளியே அனுப்பிவிட்டு இந்திரன் அகலிகையிடம் ‘நான் உன்னை அனுபவிக்க விரும்புகிறேன்” என்று சொன்னதும் அகலிகை ‘தனது கணவர் இப்படி பேசியதும் இல்லை. இப்படி செயல்பட்டதும் இல்லை. இந்த ஆசிரமத்தில் இந்திரனைத் தவிர வேறு யாரும் வர முடியாது. அவன் என்னிடத்தில் நெடுநாளாய்  ஆசை வைத்திருப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன். ஆகையால் கௌதமர்  வேடத்தில் வந்திருப்பவன் இந்திரனே என்று அறிந்தாள். அழகே உருவெடுத்து வந்த எண்ணிறந்த அப்சரஸ்களுக்கு நாதனான  இந்திரன் அவர்களை அலட்சியம் செய்து தன்னை மேலாக எண்ணி ஆசை வைத்ததால், கர்வமடைந்து புத்தி மயங்கி அவனிடத்தில் ஆசைவைத்தாள். பிறகு தன்னிஷ்டம் நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்து  இந்திரனைப்பார்த்து “உன் சிநேகத்தால் மிகவும் ஆனந்தமடைந்தேன். மகரிஷி வருவதற்கு முன் இங்கிருந்து புறப்பட்டுப் போ. உனக்கும் எனக்கும் இதனால் யாதொரு கெடுதியும் நேராமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்றாள். அவன் அங்கிருந்து கிளம்பும் சமயம் கௌதமர் வந்துவிடுகிறார்.

 திரும்பி வந்த கௌதமர் விவரம் தெரிந்து, இந்திரனுக்கு சாபம் அளித்த பின்னர், கௌதமர் அகலிகையை நோக்கி

तथा शप्त्वा  वै शक्रमहल्यामपि शप्तवान्।।1.48.29।।
इह वर्षसहस्राणि बहूनि त्वं निवत्स्यसि
वायुभक्षा निराहारा तप्यन्ती भस्मशायिनी।।1.48.30।।
अदृश्या सर्वभूतानां आश्रमेऽस्मिन्निवत्स्यसि

என்று சாபம் அளிக்கிறார். அதாவது ‘நீ காற்றைத்தவிர ஆகாரமின்றி சாம்பலில் படுத்துக்கொண்டு ஒருவருடைய கண்ணிற்கும் தெரியாமல் ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பாய்.

यदा चैतद्वनं घोरं रामो दशरथात्मज:।।1.48.31।।
आगमिष्यति दुर्धर्षस्तदा पूता भविष्यसि

तस्यातिथ्येन दुर्वुत्ते लोभमोहविवर्जिता।।1.48.32।।
मत्सकाशे मुदा युक्ता स्वं वपुर्धारयिष्यसि

இட்சவாகு வம்சத்து அரசனான தசரத குமாரன் ஸ்ரீ ராமச்சந்திரன் இந்த கோரமான வனத்திற்கு வருவார். அவருக்கு அதிதி பூஜை செய்.  உன்பாவங்கள் விலகும் நிஜ ருபத்தை அடைந்து என்னுடன் சேர்வாய். லோபம் மோகம் தீர்ந்து சந்தோஷத்துடன் என் மனைவியாக இருக்கும் யோக்யதை பெறுவாய்” என்று சொல்கிறார்.

இங்கு நிறைய விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும். இன்றும்கூட பலர் வால்மீகி அகலிகையைக் கல்லாகப் போகும்படிச் சபித்தார் என்று சொல்லுகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுளதைக் கவனித்துப் பார்த்தால், வால்மீகி அன்ன ஆகாரமின்றி யார் கண்ணிலும் படாது தவமிருப்பாய் என்று தான் சொல்லி உள்ளார். ஆக இது சாபமே இல்லை. தவம் செய்ய சொன்னது சாபமே அல்ல ஒரு தண்டனை. காரணம் அவரே दुर्वुत्ते அதாவது கெட்ட நடத்தை உள்ளவளே என்று சொல்கிறார்..

மேலும் அகலிகை தனது கணவரிடம் எதுவும் கேட்காமலேயே அவரே அவளுடையே நிலை மாறி மீண்டு தன்னிடம் வருவதற்கான வழியையும் சொல்லிவிட்டார்.

கம்பராமாயணத்தின் படி 

அகலிகையும்  கௌதமன் உருவில் வந்த இந்திரனைத் தனது கணவன் என்றே நினைத்து அவனோடு கூடி மகிழ்ச்சியாக இருக்கையில் இது புது மண மது என்பதை உணர்ந்தாள். அவ்வாறு உணர்ந்தும் அவள் இது தகுதியன்று என்று ஆராய்ந்து விலக்கக்கூடிய அறிவுத்திறனைப் பெறாமல் இழிந்த அச்செயலுக்கு உடந்தையாக இருந்தாள்

புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
‘தக்கது அன்று’ என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்

காமப் புது மண மதுவின் தேறல், பிறன் மனைவியை விரும்புதலும் கள்ளும் ஒழுக்கத்தையும் அழிப்பதில் ஒன்றோடு ஒன்று ஒத்துள்ளன. அதனால் கம்பர் இவ்வாறும் உருவகப்படுத்துகிறார். ஞான உணர்வால் அனைத்தையும் அறிந்த முனிவன் விரைந்து வந்து அகலிகைக்கும் சாபம் அளிக்கிறான்.

(கம்பர், ராமாயணம் எழுதும் முன் பல வடமொழி அறிஞர்களிடம் வால்மீகியின் ராமாயணத்தைப் பற்றி விவாதித்த பிறகே ‘ராமாவதாராம் (கம்ப ராமாயணம்) எழுதியதாகச் சொல்கிறார்கள்.) அதனால் வால்மீகியி லிருந்து விலகாமல் அகலிகைக்கு

‘மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்

கல் இயல் ஆதி என்றான்; கரும் கல் ஆகி மருங்கு வீழ்வாள்

மெல்லியளாலான தன மனையாளைப்  பார்த்து (தீயொழுக்கத்தால்) வேசியை ஒத்த “நீயும் கல் வடிவமாகுக” என்று கௌதமர் சாபமளித்தார் என்று கம்பர் தெரிவிக்கிறார். அகலிகையும் கல்லாய்ச்சாய்ந்தாள். வால்மீகி, அகலிகை கோரிக்கை வைக்காமலேயே அவளுடைய சாபத்திற்கு எப்போது விமோசனம் பிறக்கும் என்று தெரிவித்து விடுகிறார். ஆனால் கம்பர்,  அகலிகை கௌதமருக்கு அது சம்பந்தமாக கோரிக்கை வைப்பதாக தெரிவிக்கிறார்

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனேஅன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!” என்ன,
தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவஇந்தக் கல் உருத் தவிர்தி” என்றான்

பிழைகளைப் பொறுத்தருள்வது பெரியவர்கள் கடமை என்று முன்னோர் சொல்வர். இச்சாபத்திற்கு முடிவை அருள்வீராக என்று அகலிகை வேண்டி நிற்க, தசரத ராமனது திருவடிதுகள் உன்மேற்ப் படியும்போது இந்தக் கல்லுரு நீங்குவாய் என்று கௌதமர் அருளினார்.

சுப்ரமணிய முதலியாரின் அகலிகை வெண்பாவிலிருந்து

நான் முன்பு சொன்னது போல ஆசிரியர் அகலிகை மீது பக்தி கொண்டவர். ஆதலால் அகலிகை தெரிந்தே தவறு செய்தவள் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் வந்தவன் இந்திரன் என்று தெரியாமல் தன்னை இழந்தாள் என்றே கருதுகிறார். ஆதாலால் கௌதமன்  இந்திரனைச் சபித்தபின், அகலிகையை நோக்கி ‘நீ அறியாமல் உன்னை அடைந்த மாசு கழியும்படியாகவும், அதை நீ நினைத்து நினைத்து துன்புறுத்தல் அற்றுவிடும்படியாகவும் நீ மாசடைந்ததைப் பற்றிய உலக நிந்தை மறக்கப்பட்டு நீங்கி யொழியும்படியாகவும் உன் தேகம் கல்லாக மாறுக.” என்று அருளியதாகக் குறிப்பிடுகிறார். ஆனாலும் சமாதானமடையாது புலம்பிய அகலிகையைத் தேற்றி ‘நீ சில காலம் கல்லாக இருத்தலே உனக்கு உற்ற தோஷத்துக்குப் பரிகாரமாகும். திருமால் ராமனாக அவதரிப்பார். அப்போது அவர் வணசஞ்சாரம் செய்யம்போது அவர் பாதம் பட்டு நீ பழைய நிலையை அடைவாய்” என்று சொல்லுகிறார்.

ச. து. சு யோகியார்

………………..மனையரசு நாணிப்போய்

கூனிக் குறுகி குமைவாளைக் கண்ட முனி

‘இல்லாம பெருந்தர்மம் இழிந்த மகள் இக்கணமே

கல்லாய்க் கிடக்க ! என்று கடுஞ் சாபமிட்டானே

இச்சாபம் வந்தணைய ஏந்திழை தன் கைகுவித்து

“இச்சாபத்துக்கு இறுதி ஏதேனும் காட்டு” என்றாள்

‘பின்னால் இராமனெனும் பெருமாள் பதத் தூளி

உன் மேல் உறும்போது” என்றுரைத்தான்

கல்லாய் வீழ்ந்தாள்.

யோகியாரும் வான்மீகத்தை விட்டு விலகவில்லை

சாபத்திற்குப் பின் இந்திரன்

வால்மீகி

கௌதமரின் சாபத்தினால் ஆண் குறிகளை இழந்த இந்திரன் முகம் வெளிறி, அக்னி முதலிய தேவதைகளிடம் சென்று ‘கௌதம முனிவரின் தவ வலிமையைக் கெடுக்க  அவருக்குக் கோபம் உண்டாக்கிச் சபிக்கும்படி  செய்யச் சொன்னீர்கள். உங்களுடைய காரியமாகவே நான் சென்று அவர் தவ வலிமையைக் குறைத்தேன். அதனால், எனது ஆண் குறிகளை இழந்தேன். உங்களுக்காகச் சிரமப்பட்டு ஆபத்தை அடைந்த எனக்கு மீண்டும் எனது ஆண்குறிகள் வேண்டும் “ என்றான். இதனால் அக்னி முதலிய தேவர்கள் பித்ருக்களிடம் சென்று முறையிட்டு இந்திரனுக்கு ஆட்டின் (மேஷம்) குறிகளைப் பெற்றுத்தந்தனர்..

கம்பர்

இங்கு கம்பர் வால்மீகியிடமிருந்து மாறுபடுகிறார். ஆயிரம் பெண்களின்  குறிகளுடன் வெட்கி நிற்கும்  தங்கள் தலைவனான தேவேந்திரனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட பிரம்மன் கௌதம முனிவரிடம் சாப நீக்கத்திற்கு அருள் செய்யும்படி வேண்ட, கௌதம முனிவரும் தன் உள்ளம் மாறி வெகுளி தணிந்து அவ்விந்திரன் கொண்ட ஆயிரம் பெண் குறிகளும் சிறந்த ஆயிரம் கண்களாகும்படி அருளிச்செய்தார், என்று கூறுகிறார்.

ஆக,  வால்மீகியும் கம்பரும் இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை மாற்றி அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். சுப்ரமணிய முதலியாரும், ச. து. சு யோகியாரும் தங்கள் படைப்புகளில் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர்.  ஆனால் யோகியார் புதியதாக ஒரு கருத்தையும் தெரிவிக்கிறார். அதாவது அகலிகை இன்னும் கல்லுருவாகக் கிடக்கிறாளே என்று வருந்துகிறார்.

“அறம்  நின்றாள் வீழ்ந்தாள் அறம்  கொன்றார் வாழ்கின்றார்”

அகலிகை சாப விமோசனம்

வால்மீகி

முன்பு சொன்னது போல, விஸ்வாமித்திரர் கௌதமரின் ஆஸ்ரமத்திற்குள் நுழையும்போதே அகலிகையின் வரலாறைச் சொல்லி அவளைச் சாபத்திலிருந்து விடுவிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்ல ராமர் லக்ஷ்மணர் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். இங்கு கௌதமரின் சாபத்திற்கான கால அவகாசம் ராமரின் வருகையுடன் முடிவடைந்து விட்ட படியால், இதுவரை யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்த பிரம்மனின் மாயா சக்தியால் ஸ்ருஷ்டிக்கபட்ட  அகலிகை தெய்வீக ஒளியுடன் தோன்றினாள். ராமர் லக்ஷ்மணர் அவள் பாதம் பணிந்தனர். அகலிகையும் விதிப்படி ராமருக்கு  அதிதி பூஜை செய்தாள் கௌதம முனிவரும் அகலிகையை ஏற்றுக்கொண்டார். இங்கு ஒரு விஷயம் நினைவு கொள்ள வேண்டும். கௌதமர் அகலிகையைக் கல்லாகும்படிச் சபிக்கவில்லை என்று முன்பே சொன்னோம். இங்கு வால்மீகி அத்தகைய காட்சி பற்றி ஏதும் சொல்லாமல், ராமர் ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், இதுவரை யார் கண்ணிற்கும் புலப்படாமல் இருந்த அகலிகை ராமர் கண்ணுக்குத் தெரிந்தாள் என்று சொல்கிறார். . அத்துடன் சாப விமோசனம் நடந்துவிட்டது என்றே பொருள் கொள்ளவேண்டும்.

கம்பர்

இங்கும் கம்பர் வால்மிகியிடமிருந்து வேறுபடுகிறார். வால்மீகி, கௌதமரின் ஆஸ்ரமத்திற்குள் நுழையும் முன்பே அகலிகையின் வரலாற்றை ராமருக்கு சொல்லுகிறார். ஆனால் கம்பர் அகலிகை சாப விமோசனம் நடந்த பின்னே அந்த வரலாற்றைச் சொல்லுகிறார்.

இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார்.

விஸ்வாமித்திரர், ராமர் லக்ஷ்மணருடன் விதேக நாட்டின் புற மதிலின் வெளியிடத்தே வந்து  தங்குகின்றனர். அவ்வளவில் இல்லறச் சிறப்பான கற்பினை அழித்ததனால் இழிவை அடைந்த பெருந்தவத்தாளான கௌதம பத்தினி (அகலிகை சாப உருவத்தில்) செறிந்த மேட்டினிடம் உயர்ந்து தோன்றும் கருங்கல்லினை வெளியிடத்தே கண்டார்கள்.

அங்ஙனம் கண்ட கல்லின் மேல் இராமபிரானது காலடித்துகள் பட்டதனால் உள்ளத்துக் கொண்ட அஞ்ஞான மயக்கம் நீங்கி தத்துவ ஞானம் பெற்றவன் அஞ்ஞான மயமான யாக்கை நிலை மாறி உண்மையான உருக்கொண்டு பரமனது திருவடிகளை அடைதல் போல (அவ்வகலிகை) முன்னை உருவம் கொண்டு எழுந்து நின்றாள். கம்பர்   இங்கு “பண்டை வண்ணமாய்” என்று சொல்லுகிறார். அதாவது அகலிகை இந்திரனிடம் தன்னை இழக்கு முன் எந்த நிலையில் இருந்தாளோ, அந்த உருக்கொண்டு எழுந்தாள் என்று சொல்ல வருகிறார். இங்கு மற்றொரு விஷயம் சொல்லப்படுகிறது. ராமனின் பாதம் கல்லின் மீது படாமல் கால்துகள்தான் பட்டது என்று கம்பர் சொல்கிறார். சான்றோர்கள் இதற்கு ஒரு விளக்கம் அளிக்கின்றனர். அதாவது அகலிகை அடுத்தவருடைய மனைவி. கல்லாய் இருக்கும் அகலிகை மீது கூட தனது கால் படுவதை ராமன் விரும்பவில்லை. பிற பெண்களை ஸ்பர்சிக்க ராமன் விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டவே கம்பர் இவ்வாறு கூறுகிறார் என்று சொல்கின்றனர். இங்குதான் விஸ்வாமித்திரர் ராமருக்கு அகலிகை வரலாற்றை சொல்கிறார்.

ராமன் அகலிகையை நோக்கி ‘அன்னையே பெருந்தவத்தானான கௌதம முனிவனது அருளுண்டாகும்படி நீ அவனுக்கு வழிபாடு செய்க. நடந்ததை நினைத்து வருந்தாதே என்று அகலிகை பாதம் பணிந்து சொன்னான். இங்கும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விஷயம் உள்ளது. அதாவது அந்நியனிடம் தனது கற்பை இழந்த பெண்ணை அன்னை என்றழைப்பது முறையோ? அதுவும் கம்பரே ‘மனையின் மாட்சியை அழித்து இழி”  தக்கது அன்று என்ன ஒராள் தாழ்ந்தனள் “”நிரந்தர முலகினிற்கு நெடும் பழி பூண்டா ணின்றாள்” ‘மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்”  ஆகிய பதங்களைப் போட்டபின், ராமர் அகலிகையை அன்னையே என்று அழைத்தல் தகுமா? கம்பர் அப்படி பாடியதன் நோக்கம் தெரியவில்லை.

ஆனால் திருச்சி பேராசிரியர் மறைந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு கருத்துச் சொல்கிறார். “கௌதமருக்கு, ராமாவதாரம் நிகழ்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த அவதாரம் பற்றித் தெரிந்துள்ளது. அதனால் தான் அவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தசரத மைந்தன் ராமன் அவதாரம் எடுத்து இம்மண்ணில் கால் வைத்து அவனது பாத துகள் அகலிகை மீது பட்டதும் அவளுக்கு சாப விமோசனம் உண்டாகும் என்று சொன்னார்.  அன்றிலிருந்தே அகலிகை ராமன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள். அதாவது கோசலை,  ராமனைத் தனது கருவில் சுமக்கும முன் அகலிகை ராமனைத் தன் நெஞ்சில் சுமந்தாள். அதனால் ராமன் அகலிகையை அன்னை என்று அழைத்ததில் எந்த தவறுமில்லை”. என்ன ஒரு அருமையான விளக்கம். 

அப்பொழுது முனிவர் கௌதமர் அங்கு வருகிறார். அவரிடம் அகலிகையை ஒப்படைத்து விஸ்வாமித்திரர்

அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான்.

சொல்கிறார். “கொடிபோன்ற இடையுடையவள் மாத்திரமின்றி எக்காலத்திலாயினும் ஒழுகலாற்றில் இடையீடு படாதவள் –இடையாதவள் அப்படிப்பட்ட அகலிகை  ஸ்ரீ ராமன் அவளை அணுகுவதற்கு முன்னமே, இந்திரன் அவளை அணுகியபோதே பெண்மையின் வண்ணம் எவ்வண்ணமோ அவ்வண்ணமாகவே நிற்கிறாள். பின்னையொரு வண்ணம் முன்னையொரு வண்ணம், என்பதின்றி முன்னை வண்ணமே வண்ணமாக என்றும் ஒரு வண்ணமாய் நிற்கின்றாள் அகலிகை”.

“நெஞ்சினால் பிழை இலாளை நீ அழைத்திடுக என்று சொல்கிறார் மனசினாலே பிழைத்தல் இல்லாதவள் அகலிகை நெஞ்சினாற் பிழைத்தல்  இல்லாமையாகிய அறத்தில் நின்றவள் அகலிகை அதனால் இலாள் –இல்லுக்குரியவள்-அவளே. இல் ஆள்- இலாள் நெஞ்சினாற் பிழைப்பு இலாள் எவளோ அவளே இலாள். அதாவது, இல்லாள் –வீட்டுக்குரியவள். ஆகையினாலே அந்த உத்தமியை உலகத்தின் ஐயம் நீங்கி உய்யும் வண்ணம் இதோ அழைத்திடுக என்று கௌதமரைக் கேட்டுக்கொள்கிறார் விஸ்வாமித்திரர் (பண்டிதமணி சி கணபதி).

இங்கு அழைத்திடுக என்று விஸ்வாமித்திரர் சொல்லுக்குப் புதிய விளக்கம் தருகின்றனர் சில சான்றோர். அதாவது தனக்கு இணையான தவ வலிமையுள்ள கௌதமரிடம் அழைத்திடுக என்ற  வார்த்தையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கெளதமரும் அகலிகையின் தூய்மையை அறிவார். பின் விஸ்வாமித்திரர் சொல்வதாக கம்பர் இந்த வார்த்தையை ஏன் பயன்படுத்தினார்?

‘எதிர்காலத்தில் சலவைத் தொழிலாளியின் வார்த்தையினாலே நித்திய கன்னியின் வரிசையில் சேர்ந்த சீதாப்பிராட்டியின் தூய்மையில் அறியாமையாகிய இந்த உலகம் ஐயுறும். அப்படி ஐயுறும் உலகம் ஒருநாள் தெளிவும் அடையும். ஒ ராமனே அறியாமையாகிய உலகம் தெளிவடைகிற  காலத்திலே இந்த உலகம் உய்யும் வண்ணம் உன்னை வந்தடையும் கற்புத்தெய்வத்தை  அழைக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் கௌதமர் போல நீயும் அழைத்திடுக” (பண்டிதமணி சி கணபதி) என்று கௌதமருக்கு கூறியது போல ராமனுக்குக் கூறினார் என்று சொல்கின்றனர்.

கெளதமரும் அகலிகையை அழைத்துச்சென்றார். ‘தீவினை நயந்து செய்த தேவர்கோன்” என்று முன்புரைத்த விஸ்வாமித்திரரே அகலிகையை ‘நெஞ்சினாற் பிழையிலாள்  “என்று இப்போது கூறுதலால் அறநெறி தவறிய ஆண் மகனது வஞ்சகச் செய்கையே இயற்கையில் மன நெகிழுந்தன்மையாளான அகலிகை தன் பெண்மை நெறி தவறியதற்கு காரணமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாயணம் திரேதாயுகத்தில் எழுதப்பட்டது. வால்மீகி ஒரு முனிவர். உள்ளது உள்ளபடி எழுதுபவர். அகலிகை தெரிந்தே தவறு செய்தாள் என்று சொல்கிறார். ஆனால் கம்பர் வால்மீகியிடமிருந்து சிறிது விலகி அகலிகை இந்திரனோடு சேருவதற்கு முன் அவனை வேற்றான் என அறியாது புணர்ச்சியின்போதே உணர்ந்தனள் என்றும் ஆனால் அது தக்கதன்று என்று நினைத்து விலகாமல் இருந்தாள். கம்பர் சொல்லும் காரணம் ‘முனிவன் முடுக்கி வந்தான்’ என்பதே. அதாவது அகலிகை இது தக்கதென்று முடிவெடுத்து(தாழ்ந்தனள்) விலகு முன் முனிவர் அங்கு வந்துவிட்டார்.

அகலிகையின் வரலாறு முழுவதும் கூறாது தாம் எடுத்துக்கொண்ட கதைபோக்கிற்கேற்றளவில்கூற வந்த கம்பர் தமது சாதுரியத்துக்கேற்ப வெளிப்படையானும் குறிப்பானும் அவளுண்மையியல்பு தெளிவாகக் காட்டியுள்ளார். தேவர்கள் இந்திரனுடன் செய்த வஞ்சனையால்  அகலிகை  உடற்குற்றம் எய்தினாளாயினும் உளக் குற்றம் எய்தினாளல்லள் (நமச்சிவாய தேசிகர்)   இதனாலேயே ‘நெஞ்சினால் பிழை இலாள் என்று குறிபிட்டுள்ளார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கம்பருக்குப் பிறகு அகலிகை இலக்கியம் படைத்தவர்கள் எல்லோருமே அகலிகையைத் தவறு செய்யாதவளாகவே காட்டுகின்றனர். ஒருவேளை இது கம்பனின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்.

இதனாலன்றோ அகலிகை இன்னும் பஞ்ச கன்னிகை வரிசையில் இடம் பெற்றுள்ளார். .

 சுப்ரமணிய முதலியாரின் அகலிகை வெண்பாவில்

இங்கு சுப்ரமணிய முதலியார் வால்மீகி கம்பரை விட ஒரு படி மேலே சென்றுள்ளார். ராமன் கால் பட்டு அகலிகை பழைய உருவம் அடைந்ததும் விஸ்வாமித்திரர் ராமனிடம் ‘உமது பாதம் பொருந்தப் பெற்றதனால் கல்லுருவம் நீங்கி இங்கு நிற்கின்ற மாது, கற்பிழந்ததற்குப் பின்னும் கல்லாவதற்க்கு முன்னும் இருந்த அசுத்தமான உடலை அடைந்திருக்கிறாளோ என்றால் அதுவுமில்லை. கற்பிழக்கும் முன் இருந்த சுத்தமான தேகத்தை அடைந்திருக்கிறாளோ  என்றால் அதுவுமில்லை. வேறு எத்தன்மையான தேகத்தை அடைந்திருக்கிறாள் என்றால், கற்பிழக்கு முன் இருந்த தேகத்தைத தோற்றத்தில் ஒத்து உண்மையில் அதனினும் அதி  பரிசுத்தமானதும் அது கற்பிழந்து கெட்டது போல என்றும் கெடக்கூடாததுமான தேகத்தை அடைந்திருக்கின்றாள். இவளுடைய முந்தைய தேகம் பிரம்மாவினால் செய்யப்பட்டது. இவளுடைய இந்த தேகமோ உனது திருப்பாதம் பிரசாதித்தருளப்பட்டது. அந்த செயற்கையான தேகம் கற்பிழந்து கரையுற்று ஒழிந்தது போல இந்த சுயம்புவான தேகம் அசுத்தமடைதலவாது அழித்தலாவது எக்காலத்துமே இல்லாததாம். இவள் வெருண்டு மூர்ச்சித்துக் கற்பிழந்து மேன்மை நீங்கித் தாழ்வடைந்த குறைவு விளங்கும்படி, இவள் கற்பிழந்து கல்லானதற்க்கு அறிகுறியாக அம்மிக்கல்லின் மீது பெண்கள் தம் கல்யாண காலத்தில் தம் கால் பொருந்த மிதிப்பார்கள்”

ச. து. சு யோகியார்

ராமனின் பாத துகள் பட்டு உயித்தேழுந்தவளிடம் விஸ்வாமித்திரன்

“ நீ பிழைத்தாய் அல்லை;

நினை பிழைத்தார் எல்லோரும்;

என்று கூறுகிறார். ராமனோ கௌதமனிடம்

‘’மதி படைத்த கோதமனே

பெண் பிழைத்ததில்லை; அவள் பிறன்

பிழைக்கப் பிழையுற்றாள்;

என்று சொல்லி கௌதம முனிவரிடம் ஒப்படைக்கிறார்.

இவ்வாறாக அகலிகை கௌதமருடன் மீண்டும் இணைந்தாள்.

விஸ்வாமித்திரரின் பாராட்டு

கல்லாக இருந்தவள் ராமர் பாதத் துகள் பட்டு மீண்டும் தன் பழைய நிலையை அடைந்ததைக் கண்ட விஸ்வாமித்திரர் ராமரிடம் இவ்வாறு சொல்வதாகக் கம்பர் சொல்கிறார்

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’

கம்பனின் கவித்திறனுக்கு இந்தப் பாடல் ஒரு சான்று. இங்கு பல வண்ணங்களைச் சொல்கிறார், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள்.

இப்படி நிகழ்ந்தபடியால், இனி இந்த உலகம் முழுமைக்கும்  நல்லது அல்லாமல் வேறு துயரங்கள் வந்துவிடுமோ? கார்வண்ணனே, கரிய நிறம் கொண்ட தாடகையை கொன்றபொது உனது கையின் அழகைக் கண்டேன் (அகலிகை சாப விமோசனத்தின் பொது) காலின் அழகை இங்கு கண்டேன்.

இங்கு துளசி தாசரின் ராமாயணத்தைப் பற்றி ஒரு வார்த்தை. துளசி தாசர் அகலிகை வரலாற்றை ஒரு சில ஸ்லோகங்களிலேயே சொல்லி உள்ளார்.  அதில் அகலிகை இந்திரன் சாபம் பெற்ற விவரங்கள் இல்லை

மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில்  பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்த போது தர்மருக்கு அரசனின் கடமைகள் பற்றிச் சொல்லும்போது அகலிகையின் வரலாறு பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் அது ராமாயணத்திலிருந்து சற்று வேறு படுகிறது.

இதன் பிறகு விஸ்வாமித்திரருடன் ராம லக்ஷ்மணர் மிதிலையை அடைந்தனர்

அடுத்து சீதா கல்யாணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s