பதிவின் வடிவம்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

வெகு நாட்களாக சீதா கல்யாணம் என்று ஒரு தொடர் எழுதவேண்டும் என்ற ஆசை. சீதா  கல்யாணம் என்ற திரைப்படம் பார்த்து இருப்பீர்கள். பிரசங்கங்கள், சொற்பொழிவுகள் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவைகள் கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் எதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும். வால்மிகீ, கம்பர் மற்றும் துளசிதாசர் இந்த  மூவரின்  ராமாயணங்களிலிருந்து  முக்கியமான அம்சங்களை எல்லாம் தொகுத்து, மற்றும் பெரும் அறிஞர்கள், ஆன்மிகவாதிகள் இது சம்பந்தமாக என்னென்ன  பேசி உள்ளனர், எழுதி உள்ளனர்  என்பதையும் சேர்த்து   சீதா கல்யாணம் உருவாக்கினால் என்ன என்ற கேள்வி எனக்குள் பிறந்தது. ஆனால், ஒரு முன் /முதல் முயற்சியாக ராமாயணத்தில் விஸ்வாமித்திரரின் பங்கு பற்றி வால்மீகி, கம்பர்,  துளசிதாசர் ஆகியோரின் ராமாயணங்களில்  என்ன சொல்லப்பட்டுள்ளது  என்பதை விளக்கும் நீண்ட கட்டுரைதான் இது.  . இங்கு பல அறிஞர்கள் சான்றோர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் இணைத்துள்ளபடியால்  அவர்கள் எல்லோருக்கும் என் உளம்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஸ்வாமித்திரரைப்பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. கோபத்திற்கு உதாரணமாக இருவரைக் குறிப்பிடலாம் ஒன்று துர்வாசர் மற்றொருவர் விஸ்வாமித்திரர். கௌசிகன் என்ற அரசன் , வனத்தில் வசிஷ்டரை ஒருமுறை சந்தித்தபோது,  பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த காமதேனுவைக் கண்டார். வசிஷ்டரின் தவவலிமையைத்  தெரிந்து கொண்ட கௌசிகர் அரசனால் வெல்லமுடியாததை தவத்தால் வெல்லலாம் என தெரிந்துகொண்டார். காமதேனுவை கைப்பற்றும் நோக்கில் ஒவ்வொரு முறையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவம்செய்து வசிஷ்டருடன் போர் செய்தும், அவரால் வெல்லமுடியவில்லை. இறுதியில் தவம் செய்து வசிஷ்டரிடம் பிரம்மரிஷி என்ற பட்டம் வென்றார். அந்த கௌசிகன் தான் விஸ்வாமித்திரர்.

அரிச்சந்திரன் சந்திரமதியைப் பிரித்து துன்பம் விளைவித்த  விஸ்வாமித்திரர், இனி நல்லதே செய்யவேண்டும் என்று எண்ணினார். உலக நன்மைகள் கருதி. யாகங்கள் செய்ய ஆரம்பித்த போதெல்லாம், தடாகையின் புதல்வர்களான சுபாகு மற்றும் மாரீசன், இதர அரக்கர்களுடன் இணைந்து யாக குண்டத்தில் மாமிசங்கள் மற்றும் இரத்தத்தைப் போட்டு யாகத்திற்கு இடையூறு விளைவித்தனர். விஸ்வமாத்திரர் நினைத்தால் ஒரு நொடியில் அவர்களை சாம்பலாக்கமுடியும். ஆனால் யாகத்திற்கு இடையே எழுந்தால் யாகமும் தடைப்படும் அதனால் பலன் கிடையாது என்று தெரிந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தபோது. ராவணனை அழிக்க பாற்கடலில் உள்ள திருமால் நெருப்பிலும் திருமகள் நிலத்திலும் அவதாரம் எடுத்துள்ளனர் என்று தெரிந்து கொண்டார். இப்படி பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துவைக்கும் பணியில் வெற்றிபெற்ற அவரது கதாபாத்திரம் ராமாயணத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று. அப்படி இணைத்ததொடு ராமாயணத்தில் அவர் பணி முடிவடைந்தது.

யாகத்தில் தனக்கு துணை நிற்க இராமனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக்கொள்ள விஸ்வாமித்திரர் அயோத்தி விரைகிறார்.

இனி மேலே…

வால்மீகி ராமனின் சமகாலத்தவர் . அவரை மனித அவதாரமாகத்தான் பார்த்தார். ஆனால் துளசிதாசரும் கம்பரும் ராமரை தெய்வ அவதாரமாகப் பார்த்தனர். வால்மீகி முனிவர் உள்ளது உள்ளபடி சொல்பவர் துளசிதாசரும் இல்லறத்திலிருந்து துறவறத்தை மேற்கொண்டவராதலால் அவரது கவிதைகளில் பக்தி ரசம் மேலோங்கி இருக்கும். ஆனால் கம்பரோ வைஷ்ணவர் என்ற முறையில் தீவிர ராம பக்தராக இருந்தாலும், புலவராகவும் இருந்ததால் அவரது பாடல்களில் கற்பனை மேலோங்கி இருக்கும்.

துளசி தாசர், விஸ்வாமித்திரர்  யாகத்தை காரணமாக வைத்து திருமாலின் அம்சமான ராமரின் பாதகமலங்களை தரிசிக்கவிரும்பி அயோத்தி கிளம்பினார் என்று முடித்துவிட்டார். தன்னுடைய யாகத்தை பாதுகாக்கும் பொருட்டு ராமர் லக்ஷ்மணர் இருவரையும் தன்னுடன் அனுப்பவேண்டும் என்று யாசித்து முதலில் மறுத்த மன்னன் தசரதன் அவர்களை அனுப்பினான் என்று சுருக்கமாக முடித்துவிட்டார்.

ஆனால் வால்மீகியும் கம்பனும் சற்று விரிவாக  எழுதுகின்றனர்.

முனிவனுக்கு வரவேற்பு

முதலில் வால்மிகியின் தசரதன் விஸ்வாமித்திரரை வாசலில் வரவேற்று உபசரித்து அவருக்குப் பாத பூஜை செய்தான். அதை ஏற்றுக்கொண்ட முனிவர் மன்னனிடம் நாடு, மக்கள், உறவினர் எல்லோரின் நலம்  பற்றி விசாரித்தார். தசரதன் மகிழ்ச்சியுடன் அவரிடம் ‘பிறப்பு இறப்பு இவைகளால் துன்புறும் மனிதர்களுக்கு  அவைகளை போக்கும் அமிர்தம் கிடைத்தால் எப்படியோ, பல வருடங்களாக மழையில்லாமல் வாடின இடத்தில் தொடர்ந்து மழை பெய்தால், எப்படி மக்கள் மகிழ்வார்களோ, நமக்கு இனி குழந்தைப்பேறு இல்லை என்று நினைத்து, அந்த ஆசையை விட்டவனுக்கு திடீரென்று குழந்தை பாக்கியம் கிடைத்தால் எப்படியோ, திருமணமே ஆகாமல் இருக்கும் மகன் மகளுக்கு திருமணம் நடந்தால் எப்படியோ, அத்தகைய சந்தோஷத்தை தங்கள் வரவால் நான் அடைந்தேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.தங்களுடைய விருப்பத்தை நான் எப்படி நிறைவேற்ற வேண்டும்? எதை உத்தேசித்து தாங்கள் இங்கே வந்த காரியத்தை சொல்லவேண்டும். தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றி, தங்களுடைய ஆசியைப் பெற விரும்புகிறேன். தாங்கள் எண்ணிவந்த காரியம் எதுவாக இருந்தாலும் யோசிக்காமல் தெரிவிக்கவும்.குறையில்லாமல் முடித்து வைக்கிறேன்”  என்று சொன்னான்.

அதைக் கேட்டு மகிழ்வுற்ற விஸ்வாமித்திரர், தசரதனைப் பார்த்து ‘நல்ல குலத்தில் உதித்து, குலகுரு வசிஷ்டரால் உபதேசிக்கப்பட்ட தாங்கள்,  நான் எண்ணி இருப்பதை முடிப்பீர்கள் என் நம்புகிறேன். பிறகு தவறக்கூடாது’ என்கிறார்

கம்பரின் தசரதனுக்கோ முனிவரைப்பார்ததும் ஒரு பரபரப்பு படபடப்பு. அவரைக்கண்டதும் மன்னன் எழுந்த வேகத்தை ஒரு பாட்டில் சொல்கிறார்.

வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
அந்தர
  தலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என,
 கடிது எழுந்து அடி பணிந்தான்.

இந்த பாடலை ஒரு திருப்புகழ் சந்தம் போல சொல்லிப்பாருங்கள் மன்னனின்  படபடப்பு புரியும்.  மன்னன் அவரை வரவேற்கும் பாடல் கீழே

‘நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும்,
 அன்று; நகர், நீ, யான்
வலம் செய்து வணங்க,
 எளிவந்த இது,  முந்து என்
குலம் செய் தவம்’
 என்று இனிது கூற……

இன்றோடு என் தீவினைகள் தொலைந்தன எனக் கூறிய தசரதன்  “உங்களின் வருகை என் நிலம் செய்த தவத்தின் பலன் அன்று. நான் செய்த தவத்தின் பலனும் அல்ல. நீங்களாகவே இங்கு  எழுந்தருளியது என் முன்னோர்கள் செய்த தவத்தின் பலன்” என்று மகிழ்ந்து கூறுகிறான்.  “நான் அரசாண்டதன் பலன் எனக்கு கிட்டிவிட்டது. இனி நான் என்ன செய்ய வேண்டும்?” என விசுவாமித்திரரிடம் வினவுகிறான்

ஒரு சில சான்றோர்கள் குலம் என்பதற்கு வம்சம், மகன் என்று பொருள் உரைக்கின்றனர். “முந்து என் குலம் செய்த தவம்” என்பதற்கு “முன் எனது குலத்தவர்  செய்த தவம்” என்று கூறுவர். குலம் என்பதற்கு மகன் என்று பொருள் கொண்டு முன் என் மகன் செய்த தவம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமுடையதாக பொருள் கொள்ளவேண்டும். காரணம் விஸ்வாமித்திரரை வழிபட்டுப் பின்தொடர்ந்து சென்று பயனடையப் போகிறவன் மகன் தானே.

முனிவனின் பதிலுரை

வால்மீகியின் விஸ்வாமித்திரரோ  தசரதனிடம் “தேவர்களுக்கும் என்னைப் போன்ற முனிவர்களுக்கும் ஏதாவது இடையூறு என்றால் புகலிடங்கள் நான்கு உள்ளன. அவை பாற்கடல், கைலாயம், இந்திரலோகம், அயோத்தி.”என்று சொல்லி, முதல்  மூன்று உலகங்களிலும் நான் வேண்டுவது கிடைக்கவில்லை என்றால் அயோத்தியில் கிடைக்காமல் போகாது என்று சொல்லி மன்னனை மகிழ்வித்தார். அவருக்கு தெரியும் தான் எதிர்பார்த்து வந்திருக்கும் (பாற்கடலில் உள்ள நாராயணன்) தற்போது ராமனாக அயோத்தியில் உள்ளான் என்று. இங்கு வால்மீக்யின் ஒரு ஸ்லோகத்தை குறிப்பிடலாம்

अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम्।।1.19.14।।

वसिष्ठोऽपि महातेजा ये चेमे तपसि स्थिता:

ராமன் மகாத்மா என்றும் வீணாகாத வீரத்தை உடையவன் என்றும் எனது ஞானபலத்தால் அறிவேன் என்றும் விஸ்வாமித்திரர் சொல்வதாக வால்மீகி சொல்லுகிறார். இதிலிருந்து ராமனின் அவதார ரகசியம் தெரிந்துதான் அயோத்தி வந்த்துள்ளார் என்று பொருள்பட வால்மீகி உரைக்கிறார்.

முனிவரின் வேண்டுகோள்:

வால்மீகியின் விச்வாமித்திரர் தசரதனிடம் ‘சில பல நலன்களை உத்தேசித்து  நான் பலமுறை வேள்வி செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் அது முடிவுறு நிலையிலும் சுபாகு, மாரீசன் போன்ற அரக்கர்கள் மற்ற அரக்கர்களுடன் அங்கு வந்து வேள்விகுண்டத்தில் மாமிசத்தையும் ரத்தத்தையும் போட்டு அதன் புனிதத்தை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பெரிய வீரர்கள். நினைத்த நேரத்தில் உருவத்தை மாற்றும் வித்தையைத்  தெரிந்தவர்கள். அதனால், ஒவ்வொரு முறையும், எனது யாகம் தடைப்படுகின்றது. என்னால் ஒரு நொடியில் அவர்களை பொசுக்கமுடியும். ஆனால் வேள்வியின் இடையில் நான் கோபித்துச்  சாபம் கொடுத்தால் வேள்வி பலனற்று போய்விடும்.”

“நான் மறுபடி அந்த வேள்வியைச் செய்ய விரும்புவதால், அதைக்காக்க உனது புதல்வனான ராமனை என்னுடன் அனுப்பவும். ராமன் வல்லவன் என்று சொல்லி ராமனின் பெருமைகளை எடுத்துரைக்கிறார்

मे क्रोधमुत्स्रष्टुं बुद्धिर्भवति पार्थिव।।1.19.7।।
तथा भूता हि सा चर्या शापस्तत्र मुच्यते।

शक्तो ह्येष मया गुप्तो दिव्येन स्वेन तेजसा।।1.19.9।।
राक्षसा ये विकर्तारस्तेषामपि विनाशने।

श्रेयश्चास्मै प्रदास्यामि बहुरूपं संशय:।।1.19.10।।
त्रयाणामपि लोकानां येन ख्यातिं गमिष्यति।

तौ राममासाद्य शक्तौ स्थातुं कथञ्चन।।1.19.11।।
तौ राघवादन्यो हन्तुमुत्सहते पुमान्।

விஸ்வாமித்திரர். “மேலும் எனது வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்றால் குலகுருவான வசிஷ்டரை கேட்கவும். அவர் நான் சொல்வதை மறுத்துச்  சொல்லமாட்டார்” என்று கூறினார்,

விச்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் நடந்த சண்டை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் இந்த விஷயத்தில் வசிஷ்டர் தான் சொல்வதை ஒப்புக்கொள்ளவைத்தால்  அது தனக்கு கிடைத்த வெற்றி என்றே விஸ்வாமித்திரர் நினைத்தார்.

இப்போது கம்பனின் விஸ்வாமித்திரர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு

இடையூறா,  தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என,

நிருதர் இடை விலக்கா வண்ணம்,
“செருமுகத்துக் காத்தி” என,
 நின் சிறுவர்

நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’
 என, உயிர் இரக்கும்

கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.

“மரங்கள் நிறைந்த  அடர் வனத்துக்குள், நான் இயற்றும் தவத்திற்கு அரக்கர்கள் செய்யும் இடையூறைத் தடுத்து நிறுத்திக் காப்பதற்காக,  உனது நான்கு  புதல்வர்களில் கரிய செம்மலான ஒருவனைத் தந்திடுவாய்” என்று விஸ்வாமித்திரர் கூறினார், என்பது இதன் பொருள்.

வால்மீகி அரக்கர்களின் பெயரை சுபாகு மாரீசன் என்று சொல்கிறார். கம்பரோ அவர்களை நிருதர் என்கிறார்.

தரு என்றால் வடமொழியில் மரம் என்று பொருள். தமிழில் தரு என்றால் தருகின்ற என்று பொருள். மரம் பூக்கள் தரும்;கனிகள் தரும்; நிழல் தரும்.;விறகு தரும், “இப்படி இங்கு அயோத்தியில், கேட்காமலேயே தரும் மரங்கள் இருக்கும் போது, நான் கேட்டு நீ கொடுக்காமல் இருந்துவிடுவாயா?” என்று பொருள் படும்படி பேசினார்.

“நான் செய்யும் தவத்திற்கு    அரக்கர்கர்கள் இடையூறு செய்கிறார்கள். அது எப்படி இருக்கிறது என்றால் தவம் செய்யும் ஒருவனுக்கு காமமும் கோபமும் எப்படி உள்ளிருந்து இடையூறு செய்யுமோ அவ்வாறு அந்த அரக்கர்கள்  வெளியிலிருந்து செய்கிறார்கள்”. என்றுரைத்தார்  அந்த அரக்கர்களுக்கு  முனிவர் காமம் வெகுளி என்று பெயர் சூட்டி “அவர்களை  வெல்வதற்கு உனது புதல்வனான ராமனை அனுப்பு”. என்று கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால் காமத்தையும், கோபத்தையும் வெல்வதற்கு பகவான் நாராயணனைத்தான் சரணடையவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம்.. இந்த காமம், கோபம் இவைகளால் அல்லல்பட்டவர் விஸ்வாமித்திரர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் சுபாகுவைத்தான் அந்தசமயம் ராமரால் கொல்லமுடிந்தது. மாரீசன் விரட்டி அடிக்கபட்டான். அதாவது கடவுளால் கோபத்தை அழிக்கமுடியுமே தவிர, காமத்தை அழிக்கமுடியாது* என்ற பொருளிலும் சிலர் சொல்கின்றனர். ஆதலால் தான் மாரீசனை அவர் தப்பவிட்டதற்குக்  காரணம், பின்னல் நிகழப்போகும் நிகழ்வை உத்தேசித்து என்று அறிஞர்கள் கூறுகின்றனர்,

(*இது சிலபஸில் வராதது. அப்படிக் காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன செய்வது? திருவள்ளுவரின் குற்றம் கடிதலில் ஒரு குறள்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்..

இதற்க்கு மேல் இதற்க்கு விளக்கம் தேவையில்லை)

வால்மீகியின் விச்வாமித்திரரோ  தசரதனிடம் உனது மூத்த புதல்வனான ராமனை உடன் அனுப்பு என்று தெளிவாக கேட்டார். ஆனால் கம்பனின் விச்வாமித்திரனோ  நால்வரில் கரிய செம்மலான ஒருவனைத்தந்திடுவாய் என்று சொல்கிறார். இது என்ன புது குழப்பம்?

தசரதனின் புதல்வர்களில் ராமனும் பரதனும் தான் கரிய நிறத்தவர்கள் . அப்படி இந்த இருவரில் யார் அந்த விஸ்வாமித்திரர் விரும்பும் கரிய நிறத்தவர்? இங்கு ஒருவனை என்பதற்கு ஒப்பற்றவன் என்பதே பொருள். ஆகையால் இருவரில் ஒப்பற்றவன் ராமனே ஆவார் என்பது பொருள்.

இங்கு ஒரு என்றால் ஒப்பற்ற என்பதற்கு இன்னொரு சான்று:

அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்,
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,
கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய.


இறைவன் என்றும் உள்ளவன். அவன் தோன்றாத தன்மையன். எனவே தான் ஒருதிரு முருகன்(ஒப்பற்ற முருகன்) உதித்தான் என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

அடுத்து “உயிர் இரக்கும் கொடுங்கூற்றின்” என்று கம்பர் பாடுகிறார். அதாவது ராமனைக் கேட்பது என்னிடம், என் உயிரை(ராமனை) கேட்டு யாசிப்பது போல உள்ளது என்று புலம்புகிறான் தசரதன். சிலர் இங்கு யமனைச் சுட்டிக்காட்டுவர்.  ஆனால்,   யமதர்மன் யாரிடமும் அவரது உயிரைப் பறிக்க அவரிடம் யாசிப்பதில்லை. அதற்குரிய நேரத்தில் கேட்காமலேயே கொண்டுபோய்விடுவான். ஆதலால் இங்கு உடலை உயிரிலிருந்து பிரித்திழுக்கும் கொடிய பேச்சால் தசரதன் வருந்தும்படி கூறினான் விஸ்வாமித்திரன்  என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.

தசரதனின் தயக்கம்

வால்மிகியின் தசரதன் விஸ்வாமித்திரர் ‘ராமனை அனுப்பு என்றவுடன்’ உடனே மயங்கி விழுந்துவிட்டார். சிறிது நேரம் கழித்தே எழுந்தார்.

ஆனால் கம்பரின் தசரதன் என்ன செய்தான்? கம்பரே சொல்கிறார்.

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்

மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல்

நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த,

ஆர் உயிர் நின்று ஊசலாட,
‘கண் இலான் பெற்று இழந்தான்’
 என

உழந்தான் கடுந் துயரம்  காலவேலான்.

வேல் பாய்ந்ததால் மார்பில் ஏற்பட்ட புண்ணின் பெரும் துளையில்  தீயை நுழைத்தது போன்ற வலியோடு முனிவரின் சொல் தசரதனின் செவிக்குள் புகுந்தவுடன் ஏற்கனவே அவன் உள்ளத்துக்குள் உலாவிக் கொண்டிருந்த துயரம்  பிடித்து உந்த, உயிர் ஊசலாட, கண் இழந்தவன் கண் பெற்று மீண்டும் இழப்பதைப் போன்ற துயரத்தை அடைந்தான் தசரதன்.  கம்பனைப்போல உவமானங்கள் சொல்பவர் எவருமில்லை.

இங்கு “உள்நிலவிய துயரம்” என்று கம்பர் சொல்ல வருவது  ஷ்ரவணின் கதை என்று வைத்துக்கொள்ளலாம். . வயதான தாய்தந்தைக்காக குளத்தில் நீர் எடுக்கவந்தவனை தசரதன் அங்கு கேட்ட குரலை வைத்து மிருகம் வந்துள்ளது என்று தவறுதலாக எண்ணி அம்பு எய்து கொன்று விடுகிறான். பிறகு உண்மை தெரிந்து வருந்துகிறான். ஷ்ரவணின் தந்தை, தான் தனது பிள்ளையைப் பிரிந்ததுபோல நீயும் உன்பிள்ளையைப் பிரிந்து மிகவும் வருந்துவாய்  என்று சாபம் கொடுத்துவிடுகிறார். விஸ்வாமித்திரர் ராமனைக் கேட்டதும் சாபம் பலிக்கும் நேரம் வந்துவிட்டதோ என்ற துயரம் தசரதனை பிடித்துக்கொண்டது.

மறுபடியும் வால்மீகியிடம் செல்வோம்.

தசரதனின் பதில்

மயக்கம் தெளிந்து எழுந்த தசரதன் முனிவரிடம் “ மகரிஷி,

ऊनषोडशवर्षो मे रामो राजीवलोचन:
युद्धयोग्यतामस्य पश्यामि सह राक्षसै:।।1.20.2।।

“மலர்ந்த செந்தாமரையைப் போன்ற திருக்கண்களை உடைய என் ராமனுக்கு இன்னும் பதினாறு வயது முடியவில்லையே? ராத்திரியில் கபட யுத்தம் செய்யும் அரக்கர்களை எதிர்த்து போர் புரிய இவனுக்குத் திறமை இல்லையே?” என்று சொல்கிறான்

(இந்த இடத்தில் தசரதன் இரண்டு விஷயங்களைச் சொல்லி விஸ்வாமித்திரரின் மனதில் ஒரு பச்சாதாப உணர்வை உருவாக்க முனைகின்றான் என்று வேளுக்குடி சொல்கிறார். ஒன்று ராமனைத் தாமரைக்கண்ணன் என்று சொல்கிறார். அதாவது தாமரை என்ன செய்யும்? கதிரவன் உதிக்கும்போது(அதிகாலை) மலரும் மறையும் போது (மாலையில்) இதழ்களை சுருக்கி குவிந்துவிடும்.அதுபோல ராமனும் மாலை நேரத்திலேயே உறங்கச் சென்றுவிடுவான். அதனால் ராத்திரியில் போரிடும் அரக்கர்களுடன் எப்படி போரிடுவான்? இரண்டாவது. ராமனுக்கு இன்னும் பதினாறு வயது ஆகவில்லை. இதிலிருந்து ஒன்று தெரிந்து கொள்ளலாம். ஒருவன் போரில் ஈடுபடவேண்டுமேன்றால் அவனுக்குப் பதினாறு வயதாகி இருக்கவேண்டும் என்ற விதி அந்த நாட்டில் அப்போது இருந்தது. ஆகையால் அந்தவிதி முறையின் படி ராமனால் போருக்குச் செல்லமுடியாது” என்று சொல்லவருகிறார்.

அது போல ‘அவன் எனது ராமன்” என்று தசரதன் அழுத்தமாக சொல்லுகிறார். வேளுக்குடி தனது பிரசங்கத்தில் சொல்கிறார். நாம் ஒரு பொருளை நமது என்ற சொல்லிவிட்டால் பெரியவர்கள் அதை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒருவரிடம் ஒரு பொருளை கொடுக்கும் சமயம் ‘இதம் ந மம”  इदं मम i  இது என்னுடையது அல்ல  பிராமணாயா துப்யமஹம் சம்ப்ரததே இதை நான் உன்னிடம் கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுக்கவேண்டும் அப்போதுதான் வாங்கிக் கொள்வார்கள்)  

“ராமன் யுத்தக்கலையை இன்னும் முழுமையாகக் கற்கவில்லை. பல நவீன ஆயுதங்களைக் கையாள அவன் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. . என்னிடம் பலமான சேனை உள்ளது. சிறந்த வீரர்கள் உள்ளனர் அவர்ளுடன் சேர்ந்து நானும் போரிட்டு அரக்கர்களை அழித்து வேள்வி காப்பேன். அதனால் தாங்கள் ராமனை அழைத்து செல்லமுடியாது. அவனில்லாமல் நான் ஒரு வினாடி கூட உயிர்  வாழ் மாட்டேன்”  என்று தசரதன் கூறினான்.

இதே கருத்தை  கம்பனின் தசரதன்

புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும்,

நான்முகனும், புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய்,
 யான் காப்பென்;

பெரு வேள்விக்கு எழுக!

இதுதான் வேலை என்று சொல்லுங்கள்  சிவன், இந்திரன், பிரம்மா இவர்களே இடையூறு செய்ய வந்தாலும் நான் தடுத்து நிறுத்தி வேள்வியைக் காப்பேன். அப்படி இருக்கையில் இந்த அரக்கர்கள் எம்மாத்திரம்? தாங்கள் கிளம்புங்கள்”  என்று சொல்கிறான்.

தசரதனுக்கு விஸ்வாமித்திரரின் பதில்

தசரதரின் பேச்சைக் கேட்ட வால்மீகியின் விஸ்வாமித்திரர் கோபத்துடன் தசரதனைப் பார்த்து ”மன்னனே நான் வலுவாக உன்னிடம் ஏதும் கேட்க முன்வரவில்லை. நீயாக என்னை நிர்பந்தப்படுத்திக் கேட்கவைத்தாய். முதலில் கேட்டதை தருவதாகச் சொல்லிவிட்டு, இப்போது தரமறுப்பது புகழ் பெற்ற இக்ஷ்வாகு வம்ச  மன்னனுக்கு அழகல்ல. அரசனே! தான் அளித்த உறுதி மொழியை தவறாமல் காப்பாற்றுகின்றவன் என்ற பெருமையுடன் நீ உறவினர்களுடன்  சுகமாக ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டிரு  सुखीभव सबान्धव:” “என்று சொல்லிவிட்டு   கோபத்துடன் கிளம்பினார்.

“பெரு வேள்விக்கு எழுக”  என்று அரச கட்டளை போல ஒலித்த தசரதனின் குரல் விஸ்வாமித்திரரை    கோபம் கொள்ளச் செய்தது. சிவந்த கண்களுடன் முனிவன் எழுந்தான். இதைக் கம்பன்

என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன்,

மண் படைத்த முனி; ‘இறுதிக் காலம்
அன்று’
 என, ‘ஆம்’ என இமையோர் அயிர்த்தனர்;

மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன;
 மேல் நிவந்த கொழுங்

கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன;
 வந்தது நகையும்; சிவந்தன கண்;

இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.

என்று சொல்கிறான். அவர் எழுந்த வேகத்தில் திசைகள் இருண்டன. பார்த்தவர்கள் இறுதிக்காலம் வந்துவிட்டது என்றனர்.

வசிஷ்டரின் கூற்று

முனிவருடைய கோபம் கண்ட வசிஷ்டர் அவசரமாகக் குறுக்கிடுகிறார். இங்கு வால்மீகி மற்றும் கம்பரும் வசிஷ்டர் மூலம் ஒரே கருத்தைச் சொல்கிறார்கள். “அரசனே விஸ்வாமித்திரர் தர்மத்தின் மறு அவதாரம். தவத்தின் எல்லை. மந்திரதந்திரங்கள் தெரிந்தவர்.  அரசனாக இருந்ததால் பலவித ஆயுதங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர். முக்காலங்களையும் அறிந்தவர். இவரைச் சந்தேகிப்பது நியாயமல்ல. அரக்கர்களை அழிப்பது இவருக்கு கஷ்டமல்ல. ஆனால் ராமனின் புகழையும் நன்மையையும் கருதியே இங்கு வந்துள்ளார்.

கறுத்த மா முனி கருத்தை உன்னி, ‘நீ
பொறுத்தி’ என்று அவற் புகன்று, ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா, வசிட்டன் கூறுவான்:

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்,
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே

இவருடன் ராமனை அனுப்பாவிட்டால்  இராமனுக்கு வர இருக்கும் நற்பலன்களை நீ மறுத்தது போல ஆகும்.  மழையால் வெள்ளம் சென்று சேரும் கடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுபோல, மழை போன்ற தவத்தின் பலனால் பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்த கடலாகிய விஸ்வாமித்திரரிடமிருந்து அளவிட முடியாத திறன்கள் இராமன் என்ற ஆற்றுக்கு வரப்போகும்  காலம் கனிந்துவிட்டது  என்று பொறுப்புள்ள ஆசிரியரைப்போல வசிஷ்டர் பேசினார். அவரிடம் ராமர் கற்றது ஆரம்பநிலைக்கல்வி. ஆரம்ப கல்வியில் சில அடிப்படை விஷயங்களைத்தான் கற்றுத்தரலாமே தவிர அதற்கான விளக்கங்களை கற்றுத்தரக் கூடாது. காரணம் அதை தெரிந்து கொள்ளும் பக்குவம் உள்ள  வயதல்ல அது. உயர்கல்வியில் தான் அது சாத்தியம். அதைக்கருதியே  விஸ்வாமித்திரருடன்  ராமரை அனுப்புவதற்கு வசிஷ்டர் கேட்டுக்கொண்டார். மேலும் ராமன் கூண்டுக்கிளி போல அரண்மனைக்குள் வாழ்ந்து வருகிறார். ஒரு எதிர்கால மன்னனாக போகிறவன் புற உலகைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம். அப்படி தெரிந்து கொண்டால்தான் எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியும்  என்பதை உத்தேசித்தும்  வசிஷ்டர் அவ்வாறு கேட்டுகொண்டார்.

தசரதன் மனம் திருந்துதல்

வசிஷ்டரின் வார்த்தைகளைச் செவிமடுத்த தசரதன் சமாதானமடைந்து மகிழ்வுடன் தனது புதல்வர்களான ராமர் லக்ஷ்மணர் இருவரையும் வரவழைத்தான் என்று சொல்கிறார் வால்மீகி.

तथा वसिष्ठे ब्रुवति राजा दशरथस्सुतम 
प्रहृष्टवदनो राममाजुहाव सलक्ष्मणम्।।1.22.1।।

விஸ்வாமித்திரன் ராமனை மட்டும் தானே அனுப்பும்படி சொன்னார். ஆனால் தசரதனோ, ராமன் லக்ஷ்மணன்  இருவரையும் அழைத்து வரச்சொன்னான் அதன் காரணம் என்ன?

ஆனால் கம்பன் என்ன சொல்கிறான்

குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
‘திருவின் கேள்வனைக் கொணர்மின்,
 சென்று என,-
‘வருக என்றனன்’
 என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன்,
 அறிவின் உம்பரான்.

“குல குருவான வசிஷ்ட முனிவனது சொற்களைச்   செவியேற்றுக்  கொண்டு  மன்னனாகிய தசரதன் பக்கத்திலுள்ள பணியாட்களிடம் இலக்குமியின் நாயகானகிய ராமனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்”. என சொல்கிறான்

நான் முன்பே சொல்லி உள்ளேன். வால்மீகி த்ரேதாயுகத்தை  சேர்ந்தவர். ராமரின் சமகாலத்தவர். உள்ளது உள்ளபடி எழுதக்கூடியவர். ஆனால் கம்பரோ ராம பக்தர். லக்ஷ்மியின் கணவன் ராமன் என்றே அழைக்கவிரும்புகிறார்.

விஸ்வாமித்திரர் ராமனை மட்டும் கேட்டார். லக்ஷ்மணனைப்ப் பற்றி அவர் பேசவே இல்லை. பிறகு தசரதர் ஏன் இலக்குவனையும் அழைத்து வரச் சொன்னார்.  இங்கு ஒரு மேதையைப்பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவர் தான் ஸ்ரீ வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்த்ரி. வெள்ளையனுக்கே ஆங்கிலம் கற்றுக்கொடுத்த மாமனிதர். அவருடைய இராமாயண பேருரைகள் மிக பிரபலமானவை.

அவர் சொல்கிறார் “லக்ஷ்மணனை  விட்டு ராமனைத் தனியே நினைப்பவர் யார்? ராமன் போனால் லக்ஷ்மணனும்  கூடவே செல்வான் என்று தசரதனுக்குத் தெரியும். அதனால் தான் இருவரையும் அழைத்து வரச்செய்தார்.

இங்கு சாஸ்த்ரி, ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும்  இடையே உள்ள பாசத்தைப் பற்றி வால்மீகியின்  ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகிறார்.

बाल्यात्प्रभृति सुस्निग्धो लक्ष्मणो लक्ष्मिवर्धन:।।1.18.27।।
रामस्य लोकरामस्य भ्रातुर्ज्येष्ठस्य नित्यश:

सर्वप्रियकरस्तस्य रामस्यापि शरीरत:।।1.18.28।।
लक्ष्मणो लक्ष्मिसम्पन्नो बहि:प्राण इवापर:

तेन विना निद्रां लभते पुरुषोत्तम:।।1.18.29।।
मृष्टमन्नमुपानीतमश्नाति हि तं विना।

லக்ஷ்மணன், ராமனுடைய உடலை விட்டு  வெளியே உலவுகிற மறு உயிர் போன்றவன். லக்ஷ்மணனைப் பிரிந்தால் ராமனுக்கு தூக்கம் வராது. லக்ஷ்மணன் இல்லாமல் ராமன் எந்த உணவையும் தனியே புசிக்க மாட்டான்”

यदा हि हयमारूढो मृगयां याति राघव:।।1.18.30।।
तदैनं पृष्ठतोऽन्वेति सधनु: परिपालयन्।

“ராமன் வேட்டையாடச் சென்றால் லக்ஷ்மணனும் வில்லாளியாகத் தொடர்ந்து செல்வான்”என்று வால்மீகி சொல்கிறார். யுத்த காண்டத்தில் ராவணின்  ஒற்றன் லக்ஷ்மணனைப் பற்றி ராவணனிடம்  சொல்லும் போது रामस्य दक्षिणो बाहु ராமனுக்கு வலக்கை போன்றவன் என்று கூறுகிறான்.

கம்பரும் திருஅவதார படலத்தில் இந்த பாடல் மூலம் இதே கருத்தை உறுதிப்படுத்துகிறார்

ஐயனும் இளவலும், அணி நிலமகள்தன்
செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்,
மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
‘நெய் குழல் உறும் இழை’ என நிலைதிரிவார்.

துணி நெய்கின்ற குழலுடனே நூலானது பிரியாது  சேர்ந்து இருப்பதுபோல ராமனுடனே லக்ஷ்மணன் இணை பிரியாது உடன் திரிவான்.

இதைத்தெரிந்தே கம்பர் லக்ஷ்மணை பற்றி பேசவில்லை.

இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். கம்பவாரிதி ஜெயராஜ் என்ற அறிஞர்    “தசரதன் பணியாட்களிடம் “திருவின் கேள்வனை கொணர்மின்’ என்று கட்டளையிடுகிறார். பொதுவாக யாரைக்கொண்டு வாருங்கள் என்று சொல்வர்? சிறிய குழந்தையைத்தான் அவ்வாறு சொல்வர். ராமன் சிறுபிள்ளை அல்லவே. பிறகு ஏன் அப்படிச் சொல்லவேண்டும். தசரதனைப் பொறுத்தவரை ராமன் இன்னும் செல்லக் குழந்தைதான். அப்படி சொன்னாலாவது விஸ்வாமித்திரர் மனது மாறி ராமரை விட்டுவிட்டு தன்னை அழைத்து சொல்வாரோ என்ற ஒரு ஏக்கம் தான்? ஆனால் கம்பரோ ராமருக்கு விஸ்வாமித்திரருடன் செல்லும் வயது வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த வீரர்கள் (ராமனிடம் நின் தந்தை அழைக்கிறார்) வருக(கட்டளை) என்றழைத்தனர்” என்று சொல்கிறார்.

வந்த நம்பியைத் தம்பி தன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, ‘நல்
தந்தை நீ,
 தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்;
 இயைந்த செய்க! என்றான்.

ஆக முனிவருக்கு நம்பியுடன் தம்பியும் கிடைத்தார்.

ராம லக்ஷ்மணர்களை,  விஸ்வாமித்திரரிடம் காட்டி  “இனி இவர்களுக்குத் தந்தையும் தாயும் நீங்கள்தான். தகப்பனான நான் இன்று அவர்களை உங்களுக்கு அளித்துவிட்டேன். அவர்களால் உங்களுக்கு வேண்டிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்” என்று கூறி அவர்களை உச்சிமுகர்ந்து வழியனுப்பிவைக்கிறான் .   

துளசிதாசரும் இதே கருத்தைத்தான் இந்த சௌபாயி மூலம்  தெரியப்படுத்துகிறார்

अति आदर दोउ तनय बोलाए। हृदयँ लाइ बहु भाँति सिखाए॥
मेरे प्रान नाथ सुत दोऊ। तुम्ह मुनि पिता आन नहिं कोऊ

வால்மீகியும் கம்பரும் இங்கு ராம லட்சுமணர்களின்  அன்னையரைப் பற்றி  ஏதும் கூறவில்லை. ஆனால் துளசிதாசர், அவர்கள் இருவரும் தாயிடம் ஆசி பெற்று முனிவருடன் கிளம்பினர் என்று கூறுகிறார்.

தாடகை வதம் தொடரும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s